செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பிக்கள் போராட்டம்!

2 minutes read

மட்டக்களப்பு, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று திடீரென முன்னெடுத்த போராட்டத்தால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற த.கலையரசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடந்து, சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன்,  மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்து, ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகார சபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோஷங்களை எழுப்பியும் பதாகையை ஏந்தியவாரும் சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்துக்கு வந்ததுடன் கைகளில் “மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்”, “மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்துக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், “உங்கள் பிரச்சினையைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கின்றோம். சபையின் தினப் பணிகளுக்கு இடமளியுங்கள்” – என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்.

எனினும், அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம்” – என்று கூறினார். இதன்போது சபை முதல்வருடன் சாணக்கியன் எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியன் எம்.பியை நோக்கி “பேசாமல் போய் அமருங்கள்” என்று கூச்சலிட்டார். அவரை நோக்கிப் பதிலளித்த சாணக்கியன் எம்.பி., “நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலையைப் பாருங்கள்” என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பி. வீ.இராதகிருஷ்ணனும் சபை நடுவே சென்று சிறிது நேரம் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசனத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்றக்  குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் பிரச்சினையைச் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரிவித்து தீர்வைப் பெற்றுத் தருவோம்” – என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More