கல்லறை கதவு
மெல்லன திறந்திடவே
கல்லறை தெய்வங்கள்
எம் அருகே அமர்ந்து
கதை சொல்லும் நாள்
கார்த்திகை மாதம்
விழித்திடும்
நம் உறவுகளை
கை தொழுதே
அவர் மேனியில் கண்ணீர் பூக்கள் சிந்தி
மெல்லிய புன்னகையில்
வரவேற்போம்
புதைகுழிகளோ? இங்கு
நீண்டு கிடக்கின்றன-அதில்
புதைந்து போனவர்கள்!
எத்தனையோ?
தாய் மண் காக்க
தாய் மடி இழந்த
அண்ணன்மார் அக்காமார்கள்
மூச்சடங்கி துயில்கின்றனரே
கல்லறையில் -இன்று
கட்டாந்தரைகளிலும்
நீர் கசிகின்றது ஐயா!
கல்லறை மேனியர்
மீண்டெழுந்திட
உரிமைகள் இழந்தார்கள்
உறவுகள் பிரிந்தார்கள்
உயிர்கள் நீத்தே-தம்
தாய் மண்ணிலே
உரமாகிப்போனார்கள்
புல் தளைத்திடும் தரைகளில்
இன்று
ஆங்காங்கே புதைகுழிகள்
தளைத்திருக்கின்றது
புது காவியம் படைத்தே
உறங்குகின்றார்கள்-எம்
கல்லறை சொந்தங்கள்
கல்லறை தெய்வங்கள்
கண்ணெதிரே தோன்று
பல கதைகள் கதைப்பார்கள்
சிந்திடும்
விழி நீரில்
உங்கள் முகங்கள்
நீங்கள் கண்களிலே விடைபெற்று
செல்லுகையில்
எம் நெஞ்சமோ
எரிமலையாய் வெடிக்கின்றதே
வலிகளை சுமந்திடும்
எம்மவர் நெஞ்சில்
வற்றிப்போகாத பேராறு
ஒன்று ஓடுகின்றது
உங்கள் நினைவலைகளை
மெல்ல மெல்ல
மனதில் ஈரம் செய்து
பகலில் உறங்கி
இரவில் அழுதிடும்
மாவீரர்களே?
உங்கள் குரல்கள்
எங்கள் காதினில்
ஒரு புறம்
ஒலிக்குதைய்யா!
கடல் அலைகள் உங்களுக்கானது
வான் சிந்திடும் நீர் துளிகளும்
உங்களுக்கானது
கொத்து கொத்தாய் பூத்திடும் கார்த்திகை பூக்களும்
உங்களுக்கானது
மீண்டெழும்
உங்களுக்காக
காத்திருக்கின்றது
நம்
தாயகம்
பால் சொரியும் நிலவினில்
புது பாடல்களை
வரைகிறார்கள்
சிந்திடும் மேகங்களும்
பூ மழைகளை
உங்களுக்காய் சொரிகின்றது.
நம் கல்லறை தெய்வங்கள்
மீண்டெழவே
கார்த்திகையில்
விளக்கேற்றி
தொழுதிடுவோம்!!
முல்லை லக்சி