திருமணத்துக்கு முன் கற்பனையில் எதிர்பார்த்திருந்த வகையான வாழ்க்கை நிஜத்தில் இல்லை என்பதை நடைமுறையில் பார்த்த போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது மாலாவுக்கு.
மாலா அவளது பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் கேட்பதை மறுக்காமல் வாங்கிக்கொடுத்து செல்லமாக வளர்க்கப்பட்ட பெண். வீடு, தொழில் நிறுவனங்கள் முதல் குண்டூசி வரை அவளுக்குத்தான்.
படிப்பிலும் படு சுட்டி. நட்பு வட்டாரம் தாராளமாக ஏராளம் இருந்தும் காதல் வலையில் விழாத சாணக்யம் அவளிடம் இருந்ததால் படிப்பு முடித்தவுடன் பெற்றோர் பார்த்து முடிவு செய்த வரனுக்கு கழுத்தை நீட்டினாள்.
ஒரு வருடத்திற்குள் ஆண் குழந்தைக்கும் தாயானாள். தன் பெற்றோர் சம்பாதனை, கணவனின் பெற்றோர் சம்பாதனை, கணவனின் சம்பாதனை என மாதம் லட்சக்கணக்கில் பணம் வங்கிக்கணக்கிற்கு வந்தும் மனம் மகிழ்ச்சியடையவில்லை.
குழந்தையைக்கவனித்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடைப்பதை பிடிக்காதவளாக குடும்பத்தினர் மீது வெறுப்பாக நடந்து கொண்டாள். வேலைக்குப்போகவேண்டுமென்று அடம் பிடித்தாள். ஒரே பெண் என்பதால் சிறு வயது முதல் செல்லமாக வளர்த்ததால் தற்போதைய சிறு பிரச்சினைகளை விட பிரச்சினையே இல்லாமல் பிரச்சினை என புலம்பினாள். சாம்பாரில் உப்பில்லை என மாமியார் கூறியதற்கு முகத்தை உப்பிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.
தாயாரும் ஒரு தொழில் நடத்துவதால் காலையில் கணவனோடு நிறுவனத்துக்கு சென்று விடுவதால் குழந்தையை பார்த்துக்கொண்டு வேலைக்கு செல்ல இயலவில்லையே என தாய் மீது வெறுப்பைக்கக்கினாள். தாய் தன் குழந்தையைப்பார்த்துக்கொண்டால் தான் நாம் வேலைக்கு போக முடியும் என நினைத்ததால் பிரச்சினை அதிகமானது.
“நான் இருக்கிறத விட செத்துப்போகனம்னு தோணுது. ஜெயில் வாழ்க்கை மாதிரி இருக்குது. எதுக்கடா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு தோணுது. ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குது. என் கூட படிச்ச கவினா வேலைக்கு போயிட்டு, இன்னும் கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா சுதந்திரமா இருக்கறா” என தாயிடம் கூறி அழுதாள்.
மாலாவின் செயலால் பெற்றோர் மிகவும் வருந்தினாலும், அதிகமான வரன்களை வருடக்கணக்கில் பார்த்தும் திருமணம் செய்ய முடியாதவர்களுக்கு மத்தியில் தங்களது பெண்ணுக்கு பார்த்த ஒரே வரன் முடிவாகி திருமணம் நடந்ததோடு, குழந்தையும் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றே கருதினர்.
“இன்னைக்கு படிச்சு வேலைக்கு போயி குடும்ப செலவு போக மிச்சம் பண்ணி, எடம் வாங்கி, கடன் வாங்கி, ஊடு கட்டி, கடன கட்டி முடிக்கிறதுக்கே அறுபது வயசாயிப்போகும். ஆனா அம்பது கோடிக்கு மதிப்புள்ள சொத்து சேத்தி வெச்சிருக்கிறோம். மாப்பிள்ளை ஊட்லயும் சொத்து கெடக்குது. நீ வேலைக்கு போயி வாழோனும்னு அவசியமே இல்லே. நீ என்னன்னா இருக்கறத உட்டுப்போட்டு பறக்கறத புடிக்கப்பார்க்கறே. உன்னப்பெத்து வளர்த்தி படிக்க வச்சு சொந்த பந்தத்துக்கு மத்தில கண்ணாலத்த பெருசா நடத்திப்போட்டோம். கொழந்தையும் இல்லீங்காம கடவுள் கொடுத்துப்போட்டாரு. ஒன்னியென்ன வேணுமோ உனக்கு? இதுக்கு மேல என்னால பேச முடியாது. பேசறதுக்கும் சத்தியில்ல. இப்படியே வெறுப்பா பேசிப்பேசி எனக்கு பிரசர் வரவெச்சராதே. இருக்கற காலத்துக்கு நிம்மதியா இருந்துக்கிறோம்” என கண்களில் கண்ணீர் வர பேசினாள் தாய் கமலம்.
தன் மகள் கவினா வீட்டிற்கு வருவதையும், அவளது போன் காலை எடுப்பதையும் வெறுத்தாள் அவளது தாய் காவேரி.
“என்ற கூடப்படிச்சாலே மாலா அவளுக்கு கல்யாணமாகி குழந்தையே பொறந்திருச்சு. கணவனோட வருமானத்துல ஜாலியா வீட்ல நிம்மதியா இருக்கறா. அப்பா அம்மாவும், சம்பாறிக்கறாங்க. நீங்களும் இருக்கீங்களே… ஒரு மாப்பிள்ளைய ஒழுக்கமா பார்க்க முடியலே. மாலாவோட அப்பா அம்மா மாதிரி சம்பாரிச்சு வெக்கவும் முடியல. சீக்கிரமா எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. குழந்தைகளை பெத்து வளர்த்துட்டு நான் நிம்மதியா வீட்லயே இருந்துக்கிறேன். எனக்கு பதிலா நீங்க வேலைக்கு போங்க. அப்பத்தான் வேலைக்கு போறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்” என கவினா சத்தமாக, கவலையுடன் பேசியதை வேலை விசயமாக அவளைப்பார்க்க வந்த தோழி மாலா வாசலில் நின்று கேட்டவள் உடனே ஸ்கூட்டியை தன் வீட்டிற்கு திருப்பினாள்.