(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தான் செய்யும் தொழிலில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதால், மனஅழுத்தத்தோடு வீட்டில் வந்து அமர்ந்தார், தொழிலதிபர் பாலச்சந்திரன். ‘தொழிலையே மாற்றிவிடுவோமா’ என்கிற எண்ணம்கூட அவருக்குள் உதித்தது.
அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மகள் கல்யாணி, பள்ளி முடிந்து வந்தாள். முகம் கழுவிக்கொண்டு, ஹோம் ஒர்க் செய்யத் தன்னைத் தயார் செய்தாள்.
அப்போது, மொட்டை மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த கல்யாணியின் தம்பி, பட்டமும் நூல்பத்தையுமாகக் கீழே வந்தான்.
பட்டத்தையும் கையில் கந்தை போல் சுற்றியிருந்த நூல் கற்றையையும் தரையில் போட்டான்.
“அப்பா! நூல் சிக்கலாயிருச்சு. வேறு நூல் கண்டு வாங்கித் தாப்பா…” என்றான்.
“சிக்கலாயிட்டா, உடனே அதைத் தூக்கி எறிஞ்சிட்டு வேற வாங்கணும்னு நினைக்கறது தப்புடா தம்பி. ஏதாவது ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு, மெதுவாகப் பொறுமையாச் சிக்கலை எடு” என்று இயல்பாகச் சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள், அவன் அக்காள் கல்யாணி.
கல்யாணி தனக்குச் சொல்லியதாகவே தோன்றியது, தொழிலதிபர் பாலச்சந்திரனுக்கு. இப்போது அவர் மூளையில் பல ஜன்னல்கள் திறந்து கொண்டன!
– அனிச்சம் ஆகஸ்ட் 2023
ஜூனியர் தேஜ் | சிறுகதைகள்.காம்