தென் ஆப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக மீண்டு சிரில் ராமபோசாவை (Cyril Ramaphosa) அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க தேர்தல் முடிவில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைத்துள்ளன.
ராமபோசாவின் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ், வலசாரி ஜனநாயகக் கூட்டணி கட்சி, இதர சிறு கட்சிகள் ஆகியவை இணைந்து புதிய தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கின்றன.
ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்துமுடிந்த தேர்தலில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் 30 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கான பெரும்பான்மையைப் பெறவில்லை.
1994ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தேர்தல் தொடங்கி கட்சிக்கு எப்போதும் 50 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைக்கும். ஆனால், இம்முறை ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 40 சதவீதமாக சரிந்தது.
அதிகரிக்கும் ஊழல், வேலையின்மை, குற்றங்கள் ஆகியவற்றால் கட்சிக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.