செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு விரைவில் பணப்பரிசு

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு விரைவில் பணப்பரிசு

1 minutes read

சீனாவில் நடைபெற்ற ஹாங்சவ் 2022 ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு விரைவில் பணப்பரிசுகள் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஷெமால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறுபவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்கனவே உறுதி வழங்கியிருந்தது.

இது குறித்து அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் கேட்டபோது விளையாட்டுத்துறை நிதியத்தில் பணம் இல்லை எனவும் நிதி கிடைத்ததும் உரியவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஒலிம்பிக் இல்லத்தில்  நடைபெற்ற அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பான ஊடக சந்திப்பில் விளையாட்டுத்துறை பணிப்பாளரிடம் கேட்டபோது, ‘தேசிய விளையாட்டுத் துறை நிதியத்தில் பணம் இல்லாததால் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டோம். ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்குமாறு அமைச்சரவையிடம் கோரியபோது, துரதிர்ஷ்டவசமாக அது நிராகரிக்கப்பட்டது.

‘எவ்வாறாயினும் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பணப்பரிசுகளுக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எனவே அந்தப் பணத்தைக் கொண்டு பணப்பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது’ என பதிலளித்தார்.

கொவிட் 19 தொற்று நோய் தாக்கம் காரணமாக ஹங்சவ் 2022 ஆசிய விளையாட்டு விழா ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டு கடந்த வருடம் நடத்தப்பட்டது.

அவ் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன (2:03.20 நி.) தங்கப் பதக்கம் வென்றதுடன் ஈட்டி எறிதலில் நடீஷா டில்ஹானி லேக்கம்கே தேசிய சாதனையுடன் (61.57 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் இலங்கை அணியினர் (3:02.55 நி.) வெண்கலப் பதக்கத்தையும் பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் இலங்கை அணியினர் (3:30.88 நி.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

இந்த மெய்வல்லுநர்களின் பயிற்றுநர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படும் என கலாநிதி ஷெமால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்துக்கு 15 மில்லியன் ரூபாவும் வெள்ளிப் பதக்கத்துக்கு 10 மில்லியன் ரூபாவும் வெண்கலப் பதக்கத்துக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும் என 2021இல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நாமல் ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அத்துடன் அணி நிலை போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்கு முறையே 30 மில்லியன் ரூபா, 30 மில்லியன் ரூபா, 10 மில்லியன் ரூபா வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More