அறிமுக நடிகர் சுரேஷ் நந்தா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வீராயி மக்கள்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ள..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தேசிய விருது பெற்ற இயக்குநரும், நடிகருமான சீனு ராமசாமி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வீராயி மக்கள்’ எனும் திரைப்படத்தில் எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த த்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘நெஞ்சுக்குள்ள ஒம் பேர பச்ச குத்தி வெச்சிருக்கேன் நீ வந்து நின்னுபுட்ட சாமி சத்தியமா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் நாகராஜ் மற்றும் மதுர கவி எழுத, பின்னணி பாடகி ஹேமாம்பிகா, இசையமைப்பாளரும், பாடகருமான தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
மெல்லிசை+ காதல் உணர்வு+ கிராமத்து கதாபாத்திரங்களின் சிந்தையை ஆக்கிரமித்திருக்கும் இயல்பான சொற்கள்+ ஒளிப்பதிவு என இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகி இருப்பதால் இசை ரசிகர்களின் வரவேற்பினை பெற்றிருக்கிறது.