தமிழ் திரையுலகில் தொலைத்துவிட்ட நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக போராடி வரும் முன்னாள் நட்சத்திர நடிகரான பிரசாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அந்தகன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் -தயாரிப்பாளர் -இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்ட தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்’ எனும் திரைப்படத்தில் பிரசாந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே திகதியில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படமும் வெளியாகிறது. ஒரே திகதியில் விக்ரம் – பிரசாந்த் ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்களிடத்தில் உற்சாகம் மிகுந்திருக்கிறது.