புதுமுக நடிகர் ஜெகவீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘2 கே லவ் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ 2 கே லவ் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தில் ஜெக வீர், மீனாட்சி கோவிந்தா ராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜி.பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி. எஸ். ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். நவீன கால காதலர்களையும், டிஜிட்டல் யுக காதலையும் முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்திருக்கிறது. அத்துடன் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுசீந்திரன்- டி. இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ‘2 கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல்களையும், இசையும் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.