சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை ஆரம்பமான 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் மெரோன் விஜேசிங்க, தெற்காசிய கனிஷ்ட மற்றும் தேசிய கனிஷ்ட சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அப் போட்டியை 10.41 செக்கன்களில் நிறைவு செய்த மேரோன் விஜேசிங்க, 34 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் புனேயில் ஷெஹான் அம்பேபிட்டியவினால் நிலைநாட்டப்பட்ட 10.43 செக்கன்கள் என்ற தேசிய கனிஷ்ட சாதனையை முறியடித்தார்.
இதேவேளை, போட்டியின் முதலாம் நாளன்று இலங்கைக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதங்கங்கள் கிடைத்தது.
ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தெற்காசிய கனிஷ்ட சாதனையை இலங்கை வீரர் அவிஷ்க ஷவிந்து புதுப்பித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அப் போட்டியை அவர் 1 நிமிடம் 49.83 செக்கன்களில் ஓடி முடித்து, கொழும்பில் 2007இல் இந்தியாவின் பி. வர்மாவினால் நிலைநாட்டப்பட்ட 1 நிமிடம் 52.99 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 10.17 செக்கன்களில் ஓடி முடித்த ரீ. அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பதக்கங்கள் வென்ற ஏனைய இலங்கை மெய்வல்லநர்கள்
ஆண்களுக்கான 100 மீற்றர்: தினேத் வீரரட்ன (10.49 செக்.) வெள்ளி
ஆண்களுக்கான குண்டு எறிதல்: ஆர். ஜயவி (15.62 மீ. (வெண்கலம்)
பெண்களுக்கான உயரம் பாய்தல்: கே. திமேஷி (1.63 மீ.) வெள்ளி, சமாதி நேத்ரா (1.65 மீ.) வெள்ளி
பெண்களுக்கான 100 மீற்றர்: எஸ். விஜேதுங்க (12.04 செக்.) வெண்கலம்
பெண்களுக்கான 800 மீற்றர்: எஸ். ஹிமாஷனி (2:12.52 நி.) வெண்கலம்