அரச உத்தியோகத்தர்கள் 20 000 சம்பள அதிகரிப்பை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உங்களோடு நாம் இருக்கின்றோம் என்றும், 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகவும் கூறிய ஜே.வி.பி. இன்று அந்த கருத்தை முற்றாக மறுத்துள்ளது.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு தேர்தலின் பின்னரும் ஆட்சியைக் கைப்பற்றும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட மறுக்கின்றது. கூறியவற்றை இல்லை என மறுப்பதற்கு தயாராக வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அவ்வாறில்லை எனில் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். சகல அரச உத்தியோகத்தர்கள் சோகமடைந்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2022இல் யாரும் நாட்டை பொறுப்பேற்பதற்கு தயாராக இல்லாத போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றினார்.
கடந்த ஜூன் மாதம் அரச உத்தியோகத்தர்கள் 20 000 சம்பள அதிகரிப்பை கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரைக்கமைய 25 000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்தனர். அன்று நாம் உங்களுடன் இருக்கின்றோம் என்று கூறிய ஜே.வி.பி., இன்று தாம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் விஜித்த ஹேரத்துக்கு இது நினைவில் இல்லை என்றாலும், தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க கூறியதை நாம் மறக்கவில்லை.
தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து கூறியதை இல்லை என மறுத்து அரச உத்தியோகத்தர்களை கைவிட்டு விட வேண்டாம் என்றார்.