செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொல்லப்பட்ட நிமலராஜனுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்திடம் கோரிக்கை

கொல்லப்பட்ட நிமலராஜனுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்திடம் கோரிக்கை

2 minutes read

இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது.

அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளராக அறியப்பட்ட, துப்பாக்கிச்சூடு நடத்தி மௌனிக்கப்பட்ட நிமலராஜன் மயில்வாகனத்தின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“நிமலராஜனுக்கான நீதி என்பது ஒரு வழக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல வன்முறை மற்றும் பயம் தடையின்றி நீடிக்க உதவும் கட்டமைப்பை அகற்றுவது பற்றியது. எனவே, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவும் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான உடனடி நடவடிக்கையாக, சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்”

தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம், அவரது படுகொலை உள்ளிட்ட பலரது படுகொலைகளுக்கு  நீதி வழங்கப்படாமை இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதோடு, இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் செயல்பட அனுமதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன சுமார் 50 ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காமை குறித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

“ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கம், ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை செய்யப்பட்டமை உட்பட பல உயர்மட்ட வழக்குகளை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ள போதிலும், வெளிப்படையான முன்னேற்றம் இன்னும் காணப்படவில்லை. ‘தராகி’ சிவராமின் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், பெரும்பான்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 44 ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தாததன் நியாயத்தை புதிய நிர்வாகம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.”

தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் புலனாய்வுத்துறை மற்றும் இராணுவம் உட்பட அரச பாதுகாப்பு இயந்திரங்களால் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும், இந்நிலை அச்சத்தின் சூழலை மேலும் ஆழமாக்கி அவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக முல்லைத்தீவு ஊடக அமையம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடக அடக்குமுறையைக் கண்டித்து, ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களை குறிவைத்து அச்சுறுத்துபவர்களை ஊக்குவிக்கும் இந்த தண்டனையில்லா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியுள்ளது.

“நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் மற்றும் குறிவைப்பவர்களுக்கு தைரியம் அளிக்கும் இந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பே முதன்மையாக இருக்க வேண்டும், அவர்களை ஆபத்துக்கு உட்படுத்துவதல்ல.”

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் மற்றும் தண்டனையிலிருந்து விடுபடுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புகள் சீர்திருத்தப்படாத வரை, படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளரின் விசாரணை ஊடக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்காதெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கின் செய்திகளை சிங்களத்தில் அதிகம் அறிக்கையிட்ட நிமலராஜனை தென்னிலங்கையில் எந்த ஊடக அமைப்பும்  நினைவுகூர்ந்ததாக தெரியவில்லை, ஆனால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடக அமையங்கள் இம்முறையும் நிமலராஜன் மயில்வாகனத்தை நினைவு கூர்ந்திருந்தன.

அழிவுகரமான யுத்தம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட வடக்கின் தமிழ் மக்கள் குறித்து யுத்த பூமியிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் ஊடாக உலகத்தின் கவனத்தை ஈர்க்க நிமலாராஜனால் முடிந்தது.

ஹரய, பிபிசி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கு தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன், கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு, வீரகேசரி நாளிதழில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இன்றும் நீதி வழங்கப்படவில்லை.

2003ஆம் ஆண்டு, மயில்வாகனம் நிமலராஜனை அவரது வீட்டில் வைத்து கைக்குண்டுகளால் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்த ஈபிடிபி துணை இராணுவக் கும்பலை வவுனியா நீதிமன்றம் விடுவித்தது.

இக்கொலையுடன் நேரடி தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் ஈபிடிபியின் நெப்போலியன் எனப்படும் செபஸ்டியன் பிள்ளை ரமேஷ் பொலிஸாரால் விசாரிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையில் ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நாட்டில் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லாத தமிழ் மக்கள் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More