வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்திற்கு 196 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1-ம் தேதி பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 196 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 2 வாரங்கள் நடந்த இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படக் கூடிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
பருவ நிலை மாற்றத்தை தடுக்க எதிர்காலத்தில் கார்பன் – டை – ஆக்சைடு வெளியேற்றும் அளவின் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இந்தியாவும், சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்கக்கூடாது என வலியுறுத்தின.
இதனால் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து 3–வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தினார். அதே போன்று சீன பிரதிநிதிகளிடமும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
ஒப்பந்தத்தை மாநாடு நடத்தும் பிரான்ஸ் நாட்டின் மந்திரி லாரன்ட் பேபியஸ் தாக்கல் செய்தார். பின்னர் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒப்பந்தத்திற்கு பாரிஸ் மாநாட்டில் கலந்துக்கொண்ட 196 நாடுகளில் ஒன்று கூட எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து ஒப்பந்தம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடும் அதிகாரபூர்வ விழாவானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த தலைவர்களையும் அழைக்க ஐ.நா. பொது செயலாளார் பான் கீ மூன் முடிவு செய்துள்ளார்.