சூரிய வெளிச்சம் ஜன்னலுடாக வந்து முகத்தில் பட்டதும் விழிப்பு வந்து விட்டது. நேரம் பார்த்தேன் . காலை ஏழு மணி. வீடுஅமைதியாகயிருந்தது. அவசரமாக சமையல் செய்யத் தேவையில்லை. சாப்பாடு வேணும், ரீ வேணும் என்று கேட்க யாருமில்லை. தேவையான போது நானே செய்து சாப்பிட வேணும். எழும்ப மனமின்றி முகத்தில் வெயில் படாமல் திரும்பி படுத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.
தனிமை எவ்வளவு கொடுமையானது. அதுவும் வயது போன நேரத்தில். அறுபது வயதில் கணவனை இழந்து யாருமில்லாமல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வெள்ளவத்தையில் தனியாகயிருந்து வருகிறேன். என் வாழ்வில் இந்த நிலமை வரக்கூடாது என்பதற்காக எவ்வளவு முயற்சி செய்தேன். பலன் கிடைக்கவேயில்லை. என் விதியென்று நினைத்து கிடைத்த வாழ்க்கையை நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
கண்களை மூடியதும் பழைய நினைவுகள் வந்து மனதை அலைக்கழித்தது.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நான் பெரியம்மா, பெரியப்பாவோடு வளர்ந்தேன். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். என்னை விட எட்டு வயது, நான்கு வயது மூத்தவர்கள் அண்ணாவும், அக்காவும். என்னையும் அவர்களுடன் படிக்க வைத்தார்கள். அவர்களோடு ஒன்றாகயிருந்ததினால் தனிமை தெரியவில்லை. ஆனால் எங்களுக்குள் சண்டை வந்தால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
” என்னோட விளையாட ஒருத்தருமில்லை பெரியப்பா ” என்று அழத்தொடங்கிவிடுவேன்.
” சண்டை பிடியாமல் சேர்ந்து விளையாடுங்கோ” பெரியப்பா சமாதானப்படுத்திவிடுவார்.
கோபங்கள் மறந்து ஒன்றாகச் சேர்ந்து விளையாட தொடங்குவோம்.
மீண்டும் சண்டை வந்தால் நான் தான் விட்டுக் கொடுத்து சமாதானமாய்ப் போவேன். என்னைச்சுற்றி எல்லோரும் இருக்கவேண்டும் என்று சின்னவயதிலேயே ஆசைப்படுவேன்.
திடீரென அமைதியைக் குலைத்துக் கொண்டு தொலைப்பேசி மணி ஒலித்தது. பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு எழுந்து வந்து தொலைப்பேசியை எடுத்தேன் . என் குடும்ப டொக்டர் மாதவனின் குரல் கேட்டது.
‘ எப்பிடியம்மா இருக்கிறீங்கள். சாப்பிட்டாச்சா. மருந்துகள் எடுத்திட்டிங்களா ” என்று கேட்டார் . நிமிர்ந்து நேரம்பார்த்தேன் . பத்து மணியாகிவிட்டது.
“சுகமாயிருக்கிறன். இப்ப தான் எழும்பினன் . சாப்பிடப்போறன்” என்றேன்.
“சரியம்மா, நேரத்துக்கு சாப்பிட்டு மருந்தைக் குடியுங்கோ. அடுத்த கிழமை பாக்க வாறம்” என்றார்.
நீண்ட காலமாக எங்கள் குடும்பத்திற்கு டொக்டராக இருக்கிறார்.
ஒவ்வொரு கிழமையும் மனைவி மாலதியுடன் என்னைப் பார்க்க வருவார். வரும்போது என்னவேணும் என்று கேட்டு வாங்கித் தருவார்கள். என் தனிமையின் வேதனைகளை, கவலைகளை அவர்களோடுதான் பகிர்ந்து கொள்வேன். அவர்களும் ஆறுதலாகயிருந்து கதைத்து விட்டு போவார்கள். என்னைப்பற்றி தெரிந்தவர்கள். என் சுக துக்கங்களில் அக்கறையுடையவர்கள். எனக்கு என்றும் ஆறுதலாக இருப்பவர்கள்.
தொலைபேசியை வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்று குளித்து சுவாமி கும்பிட்டு சமையலறைக்குள் சென்றேன். ஓட்ஸ் செய்து சாப்பிட்டு மருந்தையும் குடித்து விட்டு வீட்டின் முன் பக்கமுள்ள பல்கனிக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்து கொண்டேன். என்னுடைய பெரும் பொழுது இந்த கதிரையிருந்து வீதியில் போகும் ஆட்களையும் வாகனங்களையும் வேடிக்கை பார்ப்பதே. காலை நேரமானதால் வெள்ளவத்தை வீதி சுறுசுறுப்பாக காணப்பட்டது. சிலசமயங்களில் தெரிந்தவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் வந்திருந்து கதைத்து விட்டுப் போவார்கள். ஆனாலும் பெரும் பொழுது தனிமை தான்.
இந்த தனிமை என் வாழ்வில் அடிக்கடி வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது.
அண்ணா படிப்புக்காக லண்டன் போன போது அக்காவை விட நான் அதிகமாய் அழுதேன்.
“படிக்கத்தானே போறான். லீவுக்கு வருவான் . அக்கா இருக்கிறாள். அவளோடு விளையாடு.”
பெரியம்மா ஆறுதல் சொன்னாலும் கவலையும் அழுகையும் குறையவில்லை.
அதன்பிறகு அக்காவையே சுற்றி சுற்றி வந்தேன். வளர வளர எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. படிப்புகளோடு வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. அக்காவின் திருமண நாள் வரும் வரை.
அக்காவுக்கு திருமணம் என்று சந்தோஷமாய் இருந்தாலும் அக்காவும் என்னை விட்டு போய் விடுவாளே என்று கவலையாகயிருந்தது. அண்ணா மாதிரி அக்கா வெளிநாடு போகாமல் இங்கேயேயிருப்பது ஆறுதலை தந்தது. அக்காவின் திருமணத்திற்கு அண்ணாவும் ஒரு மாத லீவில் வந்திருந்தார். வீடே கலகலத்தது. ஒரு மாதமும் எப்படி போனதென்றே தெரியவில்லை.
இருவரும் போகும்போது மீண்டும் கவலை வந்தது.
“கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் கவனமாய் படி. படிச்சு உனக்குப் பிடிச்ச ரீச்சர் வேலை எடு. சின்னபிள்ளைகளோட இருந்தால் உனக்கு சந்தோசமாய் பொழுது போகும். நான் இங்க தானே இருக்கிறன். அடிக்கடி உன்னைப் பாக்க வருவன்” அக்கா ஆறுதல் சொன்னாள்.
“நான் இப்ப போனாலும் என்ர கலியாணத்துக்கு வருவன் தானே. அப்ப இதே மாதிரி எல்லாரும் உன்னோட இருப்பம் ” அண்ணா சிரித்துக் கொண்டு சொல்லி விட்டு சென்றார்.
பெரியம்மா, பெரியப்பாவின் அன்பும், ஆதரவும் இருந்ததால் படிப்போடு வருடங்கள் போனது. இடையில் அண்ணாவும் வந்து திருமணம் செய்து அண்ணியையும் அழைத்துக் கொண்டு லண்டன் போனார். அக்காவுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.
அக்கா குழந்தைகளோடு வீட்டுக்கு வந்தால் திரும்பி போகும் வரை குழந்தைகள் என்னோடு தான் இருப்பார்கள். அவர்களை தூக்கி வைத்து கொஞ்சுவதும் அவர்களோடு விளையாடுவதும் எவ்வளவு சந்தோசத்தைத் தரும். என்னையே மறந்து விடுவேன்.
லீவு நாட்களில் நான் அக்கா வீட்டிற்குப் போவேன் குழந்தைகளோடு விளையாடுவதற்கு.
படிப்பை முடித்துக் கொண்டு வேலைக்கு போகலாம் என்று நினைத்தபோது பெரியப்பா எனக்கு குறிப்புகள் பார்க்க தொடங்கி விட்டார். ஒரு நாள் பெரியம்மாவிடம்
” மீனாவுக்கு பார்த்த குறிப்பு நல்ல பொருத்தம். விசாரிச்சும் பார்த்திட்டன். நல்ல குடும்பம். அவர்களுக்கும் சம்மதம் என்றால் செய்யலாம்.” என்றார்.
அண்ணா, அக்கா தம்பி, தங்கை இருப்பார்களா…. இல்லை என்னைப்போல் தனியாளா.. சகோதரங்கள் இருந்தால் எவ்வளவு நல்லது என்று மனதுக்குள் நினைத்தேன்.
ஆனால் கேட்க வாய் வரவில்லை.
அவர்களும் சம்மதம் தெரிவித்த பின் அவர்களின் முழுவிபரமும் பெரியப்பா சொன்னார்.
” மாப்பிள்ளை கண்ணனுக்கு ஒரு அண்ணனும், இரண்டு தங்கைச்சிமாரும் இருக்கினம்.எல்லாரும் கலியாணம் செய்து பிள்ளைகளோட பக்கத்தில தான் இருக்கினம். உனக்கு சந்தோஷம் தானே” என்றார்.
பெரியப்பா சொன்னதைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. தலையாட்டினேன்.
திருமணமாகி புகுந்தவீட்டுக்கு போன போது வீடு நிறைய சொந்தங்கள் நிறைந்திருந்தார்கள். நாங்கள் கண்ணனின் அப்பா அம்மாவோடு இருந்தோம். சகோதரங்கள் செல்வம் அண்ணா, தேவகி, மைதிலி அருகில் இருப்பதால் அடிக்கடி எல்லோரும் இங்கு வந்து விடுவார்கள். அவர்களுடைய குழந்தைகளின் சிரிப்பொலியில் வீடே கலகலக்கும்.
சந்தோஷமாகவே என் வாழ்க்கையும் தொடங்கியது.
இரண்டுவருடங்களுக்குப் பின் அக்கா அத்தான் பிள்ளைகளுடன் லண்டனுக்குப் போய் விட்டார்கள்.
பெரியம்மா, பெரியப்பா தனிய இருப்பதால் நாங்கள் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவோம்.
அக்காவின் குழந்தைகளை நினைத்து இருவரும் கவலைப்படுவார்கள்.
” பேரப்பிள்ளைகளை விட்டிட்டு இருக்கேலாது. அதுகளின்ர நினைவாயிருக்கு. நீயொண்ட பெத்துதா. நாங்கள் தூக்கிக் கொஞ்சுறதுக்கு ” என்னைக் கண்டால் பெரியம்மா சொல்லத் தொடங்கி விடுவாள்.
” ஓ…பிறந்தவுடன தாறன். நீங்கள் தூக்கி கொஞ்சுங்கோ” சிரித்துக்கொண்டு சொன்னாலும் குழந்தை எப்ப வரும் என்று மனம் ஏங்கத் தொடங்கி விடும். குழந்தையை எதிர்பார்த்திருக்க காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஆறு வருடங்களாகி விட்டது.
மாமியின் முணுமுணுப்பும், உறவினர்களின் குத்தல்பேச்சுகளும் மெல்ல மெல்லத் தொடங்கியது. இவைகளைக் கேட்கும் போது நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கும். இவர் ஆறுதல் சொன்னாலும் தாங்கமுடியாமல் கண்ணீர் வழியத் தொடங்கி விடும்.
‘எங்கள் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் ஆண்டவன் விட்டவழியென்று என்னால் இருக்கமுடியவில்லை. அண்ணாவின் நண்பரின் மகன் டொக்டராகயிருந்ததால் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக சென்றோம். அன்றுதான் டொக்டர் மாதவனை முதல்முறையாக சந்தித்தோம். அதன் பிறகு எத்தனை பரிசோதனைகள், எத்தனை வையித்தியங்கள். மனம்தளராது தொடர்ந்து அவரிடம் சென்றோம். அவரின் ஆலோசணை கேட்டு இந்தியாவிலும் இரண்டுதரம் குழந்தைக்கான பரிசோதனை முயற்சி செய்து அதிலும் தோல்வியைத் தான் கண்டோம்.
குழந்தைகள் மீது அதிக பாசமுள்ள எனக்கு ஒரு குழந்தைப் பெறமுடியவில்லையே என்ற கவலை தினமும் மனவேதனையைத் தந்தது. எனக்கு குழந்தை இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பெரியம்மா,பெரியப்பா வயதுபோன நேரத்தில் தனிய இருக்கிறார்கள் என்று அண்ணா வந்து அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய் விட்டார்.
தேவகி, மைதிலியின் பிள்ளைகளும் வகுப்புக்கள் ஏற, ஏற படிப்பின் சுமைகள் கூடி இங்கு வருவதும் குறைந்து விட்டது .
மாமா,மாமிக்கு தங்கள் மகனுக்கு வாரிசு இல்லையே என்ற ஆதங்கம்.
“பதினைஞ்சு வருசமாச்சு இனியெங்க பிறக்கப்போகுது. தலையில என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்.கவலைப்பட்டு என்ன செய்யிறது.” மாமி என்னைப்பார்த்து சொன்னாலும் தனிமையிலிருந்து கவலைப்படுவதே தொழிலாகிவிட்டது.
லீவு கிடைக்கும் போது நாம் மாதவன் வீட்டுக்கு போய் வருவோம். மாலதியும் எங்களைக் கண்டால் அன்புடன் வரவேற்பாள்.
அப்படி ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு போயிருந்து கதைத்துக் கொண்டிருந்த பொமுது,
” மாதவன், நீங்கள்தான் சொல்லவேணும். முயச்சி செய்தும் பலனில்லை எண்டால் விட்டிட வேணும். தேவையில்லாமல் கவலைப்பட்டு உடம்பைக் கெடுக்கிறது. மீனா சொல்லுறது கேக்கிறேலை ” என் கணவர் குறைப்பட்டுச் சொன்னார் மாதவனிடம்.
” உங்கள் நிலமை விளங்குது. யோசிச்சு என்ன செய்யிறது. கவலைப்படாதேங்கோ”
” சமாதானப்படுத்தினாலும் மனசு ஆறுதில்லையே டொக்டர்” என்றேன்.
“இவ்வளவு ஆசைப்படுற நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமே” என்றார் திடீரென . அதைக் கேட்டதும் நான் திகைத்துவிட்டேன்.
” என்ன சொல்லுறீங்கள். குழந்தையை எடுத்து வளர்க்கிறதா….” என்றேன்.
“வேண்டாம்…வேண்டாம், அந்த வேலையே வேண்டாம்” இவர் பட்டென்று சொன்னார்.
” குழந்தைக்காக எப்பிடி ஏங்கிறா, நீங்கள் இருவரும் விரும்பினால் சின்ன குழந்தையை முறைப்படி தத்தெடுத்து உங்கள் குழந்தையாய் வளர்க்கலாம்.” என்றார்.
எனக்கு உடனும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை . ஆனாலும் மனம் சந்தோசத்தில் பொங்கியது. இந்த யோசனை எனக்கு வரவேயில்லையே. பெறாவிட்டாலும் என் குழந்தையென்று கொஞ்ச எனக்கு ஒன்று வேண்டும். சந்தோசத்துடன் திரும்பி அவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் சந்தோசம் தெரியவில்லை. முகம் சுருங்கியிருந்தது.
” மாதவன் யாரோ பெத்த பிள்ளையை நாங்கள் எப்பிடி எங்களின்ர பிள்ளையாய் வளக்கிறது. வேண்டாம்” என்றார்.
” உடன சொல்ல வேண்டாம். வீட்ட போய் ஆறுதலாய் யோசிச்சு, எல்லாரோடையும் கலந்து கதைச்சிட்டு வந்து சொல்லுங்கோ என்றார் டொக்டர்.
மனதில் பொங்கிய சந்தோசம் இவரின் பதிலால் அடங்கி விட்டது, இவருக்கு விருப்பமில்லையா என்று நினைக்க மனம் பதறியது.
வீட்டுக்கு திரும்பி வரும்போது இவர் ஏதாவது சொல்லுவார் என்று காத்திருந்தேன். ஒன்றும் சொல்லவில்லை. வீட்டுக்குப்போய் மாமிக்கு முன்னால் கதைப்பதை விட இப்பவே முடிவை அறிய வேண்டும் என்ற ஆவலில் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து,
” மீனா இதில எனக்கு விருப்பமில்லை. அம்மாவும் சம்மதிக்க மாட்டா” என்றார்.
” உங்களுக்கு விருப்பமெண்டால்… நீங்கள் ஓமெண்டால் மாமி சம்மதிப்பா. எனக்கு குழந்தை வேணும் ” என்றேன் குரல் அடைக்க.
” சொந்தமில்லாத பிள்ளையை எப்பிடி எங்கட பிள்ளையாய் வளர்க்கிறது. அதை பார்க்கிற நேரமெல்லாம் யாரோ பெத்தது எண்ட நினைப்புத்தான் வருமே தவிர பாசம் வராது.” என்றார்.
” அப்படி சொல்லாதேங்கோ. சின்னக்குழந்தையாய் எடுத்து அன்பாய், பாசமாய் வளர்த்தால் குழந்தைக்கு எங்களில அன்பிருக்கும். எங்களுக்கும் இருக்கும். ஓமெண்டு சொல்லுங்கோ” என்று கெஞ்சினேன்.
அவர் ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்தபின்னர் அவரே மாமியிடம் சொன்னார்.
மாமா ” வேண்டாம் ” என்றார் ஒற்றைச் சொல்லில்.
மாமி குரல் எடுத்து கத்தத் தொடங்கினா.
” என்ன, ஊரான் வீட்டுப்பிள்ளையை இங்க வளக்கப் போறீங்களோ….இது என்ன பிள்ளைகள் இல்லாத வீடா. உங்களுக்கு பிள்ளையில்லா விட்டால் எங்களுக்கு வேற பேரன் பேத்திகள் இல்லையா…உங்களுக்கு வேணுமெண்டால் அதுகளை கூட்டிவந்து வச்சிருங்கோ.
யாரோ பெத்ததை வளக்ககறதுக்கு உங்களுக்கு எப்பிடிப்போச்சு புத்தி” என்று எங்களைத் பார்த்து கேட்டா.
“மீனாவின்ர கவலையைப்பாத்து மாதவன் தான் இப்பிடி செய்யலாம் என்று சொன்னான்” என்றார்.
” அதுக்கு……! குழந்தையைப் பெற துப்பில்லை. ஊரான் வீட்டுப்பிள்ளையை வளக்கப் போறாளாமோ. நீயும் தலையாட்டிப்போட்டு வந்தனியே . இவ்வளவு நாளும் வீடும் ஆஸ்பத்திரியுமாய் பிள்ளைக்குத் திரியேக்க பேசாமல் இருந்தன். பிள்ளை பிறக்குமெண்டு. இதுக்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டன்.”
மாமி, ஒரே போடாய்ப் போட்டு இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டா.
மாமிக்குத தெரியாமல் இவரிடம் பலமுறை மன்றாடிக் கேட்டும் சம்மதிக்கவில்லை . டொக்டரோ இருவரும் சம்மதித்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்றார். இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் . அதன் பிறகு குழந்தையின் பேச்சே நான் எடுக்கவில்லை. மனம் நொந்து, தெளிந்து இயல்பு வாழ்வுக்கு வர நீண்ட காலம் எடுத்தது.
முதுமையின் காரணமாக மாமாவும், மாமியும் ஒருவர்பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்தார்கள்.
வீட்டில் நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாகயிருந்தோம். எங்களுக்கும் வயது ஏற வருத்தங்களும் சேர்ந்து கொண்டது. ஒருத்தர் போனால் மற்றவர் தனிய என்ன செய்வது என்ற பயம் வந்த பின் தான் எமக்கு ஒரு துணையில்லையே என்ற கவலை அவருக்கு உறைத்தது.
வருத்தமும் அதிகமாகிபடுக்கையில் வீழ்ந்தார். தன் இறுதிக்காலத்தை உணர்ந்தவர்போல்,
” மீனா நீ ஆசைப்பட்டது போல பிள்ளையை எடுத்து வளத்திருக்கலாமோ என்று கவலையாயிருக்குது. உன்னைத் தனிய விட்டிட்டு போறனே… என்னை மன்னிச்சிடும்மா”
என்று கண்ணீர் வழிய சொல்லிக்கொண்டே போய்ச் சேர்ந்தார்.
யாரை நொந்து என்ன செய்வது. இனி என் மீதிக்காலம் எப்படி போகப் போகிறது என்று மிரண்டுபோய் நின்றேன்.
அழைப்பு மணிச்சத்தமும் அதைத்தொடர்ந்து கதவு தட்டும் சத்தமும் கேட்டு திடுக்கிட்டு பழைய நினைவிலிருந்து விடுபட்டேன். எழுந்து வந்து கதவைத்திறந்தேன்.
பக்கத்து வீட்டு தேவி நின்றிருந்தாள்.
” அம்மா, எப்பிடியிருக்கிறீங்கள். கனநேரமாய் தட்டிறன். சத்தத்தைக் காணேலை பயந்திட்டன். மத்தியானம் சாப்பிட்டிட்டீங்களா” என்றாள் .
” இல்லை தேவி. பசியில்லை பல்கனியில இருந்ததால தட்டின சத்தம் கேட்கேல”
என்றேன்.
” என்னம்மா நீங்கள். நாலு மணியாச்சு. மருந்து எடுக்கிறனீங்கள். நேரத்துக்கு சாப்பிடவேணும். சமைக்கேலையா. இருங்கோ நான் சாப்பாடு கொண்டு வாறன் ” திரும்ப போய் கொண்டு வந்த உணவை மேசையில் வைத்துவிட்டு கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
எதிர் வீட்டிலிருப்பதால் அடிக்கடி சாப்பாடு கொண்டு வருவாள். வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டாள்.
” சாப்பிட்டிட்டு இருங்கோ. முகம் வாடியிருக்கு. தனிய இருந்து யோசிக்கிறீங்கள்.
நாங்கள் இருக்கிறம். ஏதாவது தேவையென்றால் கேளுங்கோம்மா” என்றாள்.
” அடிக்கடி வந்திருந்து கதைக்கிறதே சந்தோசமாயிருக்கு தேவி. தனிய இருக்க பழைய நினைவுகள் தான் வருகுது. என்ன செய்ய” என்றேன்.
“எங்கட வீட்டுக்கு வந்து பிள்ளைகளோட கதைச்சுக் கொண்டிருங்கோம்மா ” என்று விடாப்பிடியாய் அழைத்துச் சென்றாள்.
அங்கு சென்று பிள்ளைகளோடிருந்து வந்தது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாகயிருந்தது.
காலையில் தேவகி வந்து ” கோயிலுக்குப் போறன். நீங்களும் வாங்கோ” என்று அழைத்ததால் கோயிலுக்குப் போனேன்.
“எத்தனை காலம் இந்த துன்பத்தை அனுபவிக்கப் போறன் கடவுளே… படுக்கையில கிடக்காமல் கெதியாய் போயிடோணும்.” மனம் உருக கும்பிட்டு வந்தேன். திரும்பி வர பத்து மணியாகி விட்டது. மீண்டும் பழைய நினைவுகளால் மனம் கனத்துப்போயிருந்தது.
தொலைபேசியின் சத்தம் கேட்டது. எடுத்தேன் . மாலதியின் குரல்.
” அம்மா இரண்டு மணிக்கு உங்கட வீட்டுக்கு வாறம்” என்றாள்
” என்ன, திடீரென்று. சனிக்கிழமை தானே வருவீங்கள். இண்டைக்கு புதன் கிழமை” என்றேன்.
” லீவில வீட்டை நிற்கிறம். அதுதான் உங்களை பார்க்க வாறம்” என்றார்கள்.
மதிய உணவை முடித்துக்கொண்டு அவர்களுக்காக காத்திருந்தேன் . இரண்டு மணிக்கு,
” எப்பிடி இருக்கிறீங்களம்மா ” என்று கேட்டுக் கொண்டு இருவரும் உள்ளே வந்தார்கள்.
“ஏதோ இருக்கிறன்” சலிப்புடன் சொன்னேன்.
” என்னம்மா இப்படிச் சொல்லுறீங்கள்.”
” வேற என்னத்தை சொல்லுறது. வயது போக போக கவலையாயிருக்குது . படுக்கையில விழுந்தால் பார்க்க ஒருத்தருமில்லை. அநாதையாய் தான் சாகப் போறன்” என்றேன்.
” அப்பிடிச் சொல்லாதையுங்கோ. நாங்கள் இருக்கிறம். எங்களோடை வந்து இருங்கோ எண்டாலும் கேக்கிறீங்களில்லை”
“வேண்டாம், உனக்கு ஏன் பிள்ளை எண்டு கேட்டவையெல்லாம் போயிட்டினம். பிள்ளை வேணும் எண்டு ஆசைப்பட்டனான் இருக்கிறன். அந்த நேரம் எனக்கு வேணும் எண்டு பிடிவாதமாய் இருக்கவும் தெரியேல. இது எனக்கு கிடைத்த தண்டனை தானே.”
அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.
” கவலைப்படாதேங்கோம்மா. ஆண்டவன் நல்ல முடிவு தருவான்” என்றார்கள் இருவரும்.
“இனியென்ன நல்ல முடிவு…. சாவுதானே” குரல் அடைக்கச் சொன்னேன்.
மாலதி எனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து என் கைகளை எடுத்து தன்கைக்குள் வைத்துக்கொண்டு ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.
” என்னிடம் எத்தனையோ பேர் வருகினம். அவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்யிறன்.
உங்களுக்குத்தான் உதவ முடியேல. இப்பவும் ஒரு சோடி , பத்து வருஷமாய் குழந்தைகள் இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா வேண்டாமா எண்டு குழப்பம்.
உங்கடை கதையைச் சொல்லி இப்பவே நல்ல முடிவு எடுங்கோ. பிறகு யோசிச்சு கவலைப்பட வேண்டாம் என்றேன்” என்று மாதவன் சொன்னதும் நான் பட்டென்று,
” யார் என்ன சொன்னாலும் கேட்காமல் எடுத்து வளர்க்கச் சொல்லுங்கோ . என் நிலமை யாருக்கும் வரக்கூடாது .” என்றேன் அவசரமாக.
” அந்தப் பெண் கீதாவிற்கு யாருமில்லை. அநாதை ஆச்சிரமத்தில் வளர்ந்தவள். கேசவன் அவளை விரும்பிச் செய்ததால அவன்ர பக்கமும் ஒற்றுமையில்லை. தனியத்தான் இருக்கினம்.. குழந்தைக்கு ஏங்கிற பெண்” என்றார்.
” என்னைப்போல எண்டு சொல்லுங்கோ ” என்றேன் பெருமூச்சு விட்டுக்கொண்டு .
” ஓமம்மா. இந்த ஒரு கிழமையாய் குழந்தையைப் பற்றி கதைக்க வந்தவர்கள் நேற்று வந்து உங்களைப் பற்றி திரும்ப திரும்ப விசாரித்தார்கள்.” என்றார்.
நான் நிமிர்ந்து மாதவனைப்பார்த்தேன்.
” நாளைக்கு, என் பிறந்த நாளன்று ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினேன் டொக்டர். யாருமில்லாத அநாதை நாங்கள். ஒரு குழந்தையை தத்தெடுக்க முதல், குழந்தைக்காக ஏங்கிற அம்மாவை தத்தெடுக்கலாமா என்று கேட்டார்களம்மா. நான் எதிர்பார்க்கவேயில்லை ” என்று மாதவன் சொன்னதும் நான் திகைத்து விட்டேன்.
” அம்மாவின் முகம் தெரியாது. அம்மாவின் பாசத்திற்கு எத்தனை நாள் ஏங்கியிருப்பேன். இன்று எனக்கொரு அம்மா கிடைத்தால் எவ்வளவு சந்தோசப்படுவேன். நீங்கள் தான் எங்களுக்காக கேட்டுப் பார்க்க வேணும். ஒரு குழந்தையை எப்படி உரிமையாய் எடுத்து சொந்தமாக்குவோமோ அப்படியே அம்மாவையும் எடுப்போம் என்றார்களம்மா. நீங்கள் என்ன சொல்லுறீங்கள் ” என்றார்.
எனக்கு தலையே சுற்றியது. இப்பிடியொரு அதிசயம் என் வாழ்வில் நடக்குமா….!
என் ஏக்கமும் வேண்டுதலும் கடவுளுக்கு கேட்டு விட்டதா….!
இனம்புரியாத உணர்வு மனதை அழுத்தியது.
” குழந்தையை தத்தெடுக்க நான் ஆசைப்பட்டேன். என்னை தத்தெடுக்க ஆசைப்படுற குழந்தைகள் யார் மாதவன்” குரல் நடுங்க கேட்டேன் .
” இதோ கூப்பிடுகிறேனம்மா” தொலைபேசி மூலம் அவர்களை அழைத்தார்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தேன்.
பிள்ளையை எடுத்து வளர்த்திருந்தால் என்பிள்ளையும் இவர்கள் வயதுதானே இருக்கும் என்று நினைவு ஓட இவர்களைப் பிள்ளையாக ஏற்க மனமும் தயாரானது.
வந்தவர்களுக்கு மாதவன் என்னையும், அவர்களை எனக்கும் அறிமுகப்படுத்தினார்.
கீதா எனக்கு அருகில் வந்தமர்ந்தாள். கேசவனும் அருகில் வந்து நின்றான்.
” குழந்தைக்கு ஆசைப்பட்டு…என்னைக் கூப்பிடுறீங்களே” என்றேன்.
” இன்று என்னுடைய பிறந்தநாளம்மா. இன்று தான் குழந்தையை எடுத்து வளர்க்க நினைத்தேன். ஆனால் அம்மா கிடைக்கிறது அதிஷ்டம். குழந்தை பிறந்தால் தானே அம்மா என்ற அந்தஸ்து கிடைக்கிறது. அதை இன்று உங்களுக்கு கொடுக்க ஆசைப்படுறம்.
எங்களுக்கு குழந்தையும் வேணும். அடுத்த வருசம் இதே நாள் உங்களோடு போய் உங்க பேரனையோ…பேத்தியையோ…கூட்டி வருவோம். இந்த ஒரு வருசம் உங்களுடைய அன்பும் பாசமும் எங்களுக்கு மட்டும் தான். எங்களோடை வாங்கோம்மா” என்று சொல்லிக் கொண்டே இருகைகளாலும் என்னை அன்போடு அணைத்துக்கொண்டாள்.
என்னால் எதையும் நம்பமுடியவில்லை.
” அம்மா உங்களுக்கு சம்மதமா ” மாதவனின் குரல் கேட்டு திரும்பினேன்.
“அம்மா….ஓமெண்டு சொல்லுங்கோ. உங்களுக்கு ஒரு குறையுமில்லாமல் நாங்கள் பாரத்துக் கொள்வோம்” கீதா ஆவலோடு என்னைப் பார்த்து கேட்டாள்.
” எனக்கென்றொரு பிள்ளை….என்னை அம்மா என்று கூப்பிடாதா என்று எத்தனை நாள் ஏங்கினேன். இன்று எனக்கு அந்த அதிஷ்டம் கிடைக்கிறதெண்டால் வேண்டாம் என்று சொல்லுவேனா மாதவன். எனக்கு என் பிள்ளைகள் வேணும் மாதவன் ” என்று சொல்லிக்கொண்டே என்னை அம்மா என்று அழைத்த என் மகளை என் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டேன்.
நிறைவு….
– விமல் பரம் –