வட மாகாண சபையின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநரிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். வடமாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று காலை 10 மணிக்கு வழங்கி வைத்தார்.
ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பில் நியமனக் கடிதத்தை இன்று வழங்குவது என முடிவாகியது.
அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது,
நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று எனது பதவிக்கான நியமனக்கடிதம் உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து பதவிக்கான சத்திய பிரமாணம் செய்ய வேண்டும். எனினும் சத்திய பிரமாணம் யார் முன்னிலையில் செய்ய வேண்டும் என்றும் தெரியாது.
ஆகவே சற்று காத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு! சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக் கிடையிலான கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கு பங்காளிக் கட்சித் தலைவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வை ஜனாதிபதி முன்னிலையிலோ அல்லது ஆளுநர் முன்னிலையிலோ நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அழைப்பின் பேரில் நேற்று அவரை வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிலும் பதவிப்பிரமாணம் குறித்து பேசப்பட்டுள்ளது.
முதலமைச்சரொருவர் அந்த மாகாணத்துக்குரிய ஆளுநர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்பது தான் இதுவரைகாலமும் இருந்து வந்த சம்பிரதாயம் என்றும், அந்த நடைமுறையைப் பின்பற்று மாறும் ஆளுநர் சந்திரசிறி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடமாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அவ்வாறு செய்ய வேண்டும் என்று எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரும் அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.
வடமாகாண சபையின் முதல்வர் மற்றும் அமைச்சுகளின் அலுவலகங்கள் எங்கெங்கு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், மாகாணசபையின் முதல் அமர்வுக்கான திகதி சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தின் கீழ்ப் பகுதி எதிர்வரும் 12 ம் திகதி வடமாகாணசபை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் என்று ஆளுநர் இச்சந்திப்பின்போது கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார்.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் புனரமைப்புப் பணிகள் இன்னும் பூர்த்தியாகாததால், முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கான அலுவலகங்களுக்கு வேறு கட்டிடமொன்றை ஏற்பாடு செய்யுமாறும் அதற்கான வாடகைப் பணத்தை அரசு செலுத்தும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.