விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதன் மூலமே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமே தவிர பிரதேச சபைகளின் நிதியினை கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியாது என கிளிநொச்சி சுயேச்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று(09.08.2018) மாலை 5 மணி அளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் உள்ளிட்ட பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த சபைகளில் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் அப்பிரதேச மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்குவது தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தனர். அத்தோடு அதனைப் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக ஆளுநர் மத்திய அரசின் ஊடாக உதவியினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இச் சந்திப்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் சிரோஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்