தாய்வான் சுற்றுலாப் பயணியை நீர்யானை கடித்துக்கொன்ற சம்பவம் கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யத் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
தாய்வான் சேர்ந்த சுற்றுலாப் பயணி சங் மிங் சாங் வயது (66) என்பவர் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப்பார்க்க சென்றிருந்தார்.
இதன்போது, மலையின் உயரமான இடத்திலிருந்து நீர்யானைகளை புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்தவேளையில் கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்தினுள் வீழ்ந்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த நீர்யானை ஒன்று அவரை கடித்துக்குதறியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். இருந்தும் மார்பில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 பேர் நீர்யானைகளால் கடித்துக்கொல்லப்பட்டுள்ளனர்.