செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் குணா ஜானகியின் வேர்களோடு உறங்குபவள் – நூல் அறிமுகம் | முல்லை அமுதன்

குணா ஜானகியின் வேர்களோடு உறங்குபவள் – நூல் அறிமுகம் | முல்லை அமுதன்

5 minutes read

குணா ஜானகியின் கவிதைகளுடன்…

‘அறிந்தனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா? என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும் ‘ —- பேரறிஞர் அண்ணா.

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை அப்படியே வாசகனைச் சென்றடையும் வண்ணம் அழகியல் உணர்வுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தரும் பெண் எழுதாளர்களில் குணா ஜானகியும் நமக்கு அறிமுகமாகிறார்.

அண்மையில் ‘வேர்களோடு உறங்குபவள்’ எனும் கவிதை நூலை வாசகர்களாகிய நமக்குத் தந்துள்ளார்.

அழகிய அட்டைப்படம்…அதற்குள் பேசும் ஆழமான அர்த்தபுஷ்டியான அர்த்தங்களை மனதுள் இறங்கும்படியாக அமைந்துள்ள அட்டைப்படமே என்னை முதலில் வசீகரித்தது.

மனதிற்கு ஒத்தடம் போல இருக்கும் கவிதைகள் இங்கு பக்கங்களெல்லாம் விரவிக்கிடக்கிறது.தோளில் தொட்டு நானிருக்கிறேன் என்று ஆதரவாய் நம்முடன் இணைந்திருக்கவும் விழுகின்ற போது எழுந்துகொள் என்று கைகொடுத்து ஆதரவாய் நண்பனைப்போல கூடவே நடக்கின்ற உறவாய் கவிதைகள் இருப்பதை உணர்கிறேன்.

கவிதைகளால் புரட்சி ஏதும் வந்துவிடும் என்பதில் நம்பிகையில்லை.எனினும் எங்கோ ஒரு மூலையில் ஒரு அசைவை ஏற்படுத்தும் என்பது உண்மை.

தான் அனுபவித்த காட்சிகளைஅவை ஏற்படுத்திய தாக்கத்தை மனதுள் அசைபோட்டு வார்த்தைகளாய் பிரசவிக்க அவை நமக்கு அழகிய கவிதையாகிவிடுகிறது. கவிதைகளால் மனிதன் தோற்றுப்போய்விடக்கூடாது என்பதின் கரிசனை கவிதைகளில் தெரிகிறது.

பத்திரிகைகளில் அதிகம் பேசப்படாத கவிஞர். போலிமுகங்களுடன் பழகத்தெரியாதவர். விளம்பரங்களில் அதிகம் ஈடுபாடு காட்டாதவர். மகாகவி காற்றுவெளி இதழ்களில் வெளிவந்த கவிதைகளால் மட்டுமே எனக்கு அறிமுகமானவர் திருமதி.குணா ஜானகி அவர்கள்.

சமூகத்தின் மீதான கோபமும் தெளிவான பார்வையும் அவரிடமிருந்தது. தானே வாசகனாகி தான் எழுதிய கவிதைகளுக்கு கர்வம் கொள்ளாத விமர்சனங்களை உள்வாங்கி அதன் மூலம் பெற்ற தெளிவை பிறரும் பெறும் வண்ணம் தருவதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதிகமாய் எழுதாமல் பிரக்ஞையுடன் கூடிய வார்த்தைகளைக் கோர்த்து எழுதுவதனால் இலகுவாக மனதில் பதிந்து விடுகிறது. தேர்ந்தெடுத்த சொற்குவியல் சில்மிசம் செய்யாத வார்த்தையாடல்கள். தாயைப்போல அணைத்துச் செல்ல முனையும் அல்லது சகோதர வாஞ்சையுடன் தலையினைக் கோதிவிட்டபடி நூலுக்குள் மூழ்கிவிடு என்கிற உணர்வை ஒவ்வொரு கவிதையும் நமக்குள் எற்படுத்திவிடுகிறது.

தோற்றுப்போய்விடமாட்டேன் என்று வாசிக்கின்ற வாசகனும் தோற்றுவிடாதே என்று ஆசிரியனும் கைலாகு கொடுத்து பயணிக்கின்ற உணர்வை நான் கண்டேன்.

இது வெற்றிதான்.

அமைதியானவள். எனினும் களங்கமில்லாத தெளிவுடையவள். எனினும் தனக்குள் எழும் கோபங்களை சுதாகரித்தபடி இதற்குள்ளேயே கொட்டித் தீர்த்து தன்னை ஆசுவாசப்படுத்தும் பக்குவம் கவிஞருக்கேயுரியதானது.  அதானலேயே கவிதைகள் அனைத்திலும் அந்தப் பக்குவம் தெரிகிறது. தன் வார்த்தைகளில் பதிவிடுவதில் தீர்க்கமானவராக இருப்பதால் கவிதை அர்த்தபுஷ்டியாக நமக்குள் வந்து பதிந்துவிடுகிறது.

யுத்தம் இடப்பெயர்வு திருமணம் கல்வி எனப் பலவித காரணங்களால் வெளிநாடுகளில் வந்து தங்கிக்கொண்ட பலரைப்போலவே திருமதி. குணா ஜானகி அவர்களும் புலம்பெயர்ச் சூழலில் வாழப்பழகிக்கொண்டாலும் கல்வி கணினி வாசிப்பு என தன்னை வளர்த்துக் கொள்ளவும் தவறவில்லை. அவ்வனுபவம் தன் உள்ளத்துணர்வுகளை கவிதைகளாக்கி விடுவதிலும் தன்னை தயார்படுத்தியுமுள்ளார்.

சில சமயங்களில் நினைப்பதுண்டு. சொல்வதுமுண்டு.

‘என்னைப் பைத்தியக்காரனாக்கிவிடாமல் வைத்திருப்பது எழுத்துதான்.’

இவருக்குக் கவிதை கைகொடுத்திருக்கிறது.

ஆன்மபலத்தை அதிகரித்துக்கிறது.

தன்னை அடுத்தகட்ட நகர்விற்கு தயார்படுத்தியிருக்கிறது.

‘ஒவ்வொரு நாள் இரவின் நிசப்தத்திலும்

ஒரு சிறு பறவையின் துடிப்பாக எழுந்த

தேடல்கள்

பாடல்கள்

கனவுகள்

இனங்காணப்படாமலேயே

இருளுக்குள் கரைந்து மடிவதைத்

தடுக்கவும்கூட முடியவில்லை’

‘மௌனத்தின் ரகசியச் சுரங்கமாய் அவன்

நேசித்தலின் உள்ளொளி அவன்.

உறை நீக்கிய வீணையின் நாதம்

கேட்பதற்குத்தான் செவிகள் இல்லை.

கலந்து கரைந்திருந்தோம்

நானும் இசையுமாக’

உடலுடன் மனமும் சோர்வுறும் பொழுதுகளில் மெல்லிய இசையுடன் கூடிய பாடல்களைக் கேட்க பிரியப்படுவது போல நல்ல கவிதைகளை வாசிக்கையில் மனது ரம்மியமாக உணரப்படுவதும் உண்மையே. அங்கு எழுத்தாளன் தூரமாகவே இருக்க கவிதையே உறவுடன் பேசுவது போல நெருக்கமாகிவிடும் அனுபவமும் உண்டு. இங்கு இவரின் கவிதைகளும் எனக்குள் உணர்த்தியது.

‘பூக்கள் பூக்கும்..உதிரும்.

இலைகள் ஒருநாள் சருகாகும்.

மரமும் சிலசமயம் விறகாகும்..’

ஆனால்,

என்றென்றும் வேர்கள் அடுத்த விருட்சத்திற்காய் காத்திருக்கும். இதுவே யதார்த்தம். கூடவே உயிர்ப்புடன் மட்டும் இருக்கும் வேர்களின் வாசம் அல்லது வேர்களுடனான சுவாசம் அதனை உணர்ந்தவர்க்கே புரியும். அதனால் தானோ என்னவோ வேர்களோடு உறங்குபவள் என்பதும் திருமதி. குணா ஜானகிக்கு பொருந்தி வந்திருக்கிறது. வேர்களின் இசைக்கு அதன் அதிர்வுகளுக்கு பழக்கிப் போனவர்க்கே அதனுடன் பயணிக்கவும் முடியும்.

பெண்ணால் கவிதைகளயும் சுமக்க முடியும். இங்கு கருக்கட்டிய கவிதைகள் அனைத்தும் முத்தான வார்ப்புக்களாய் பிரசவிக்கப்பட்டிருக்கின்றன. களங்கமில்லாத கவிதைகள் கூடுகட்டி மகிழ்கின்றன. அங்கு குயில்களுடன் சிட்டுக் குருவிகளும் நமக்காய் பாடல்களை அவரவர் மொழிகளில் தருகின்றன. அழகியலுடன் எழுத்தப்பட்ட கவிதைகள் அனைத்துமே சிறப்பைத் தருகின்றன.

வேர்கள் இன்றேல் விதைகளும் விருட்சங்களும் இல்லை. அதனால் வேர்களுடன் வாழ்பவள் நமக்கு விருட்சமாய்த் தெரிகிறாள். வேர்களுடன் வாழ்பவளுக்கு வேர்களே சொந்தம். வேர்களின் மகிழ்வு பூக்களாகின்றன. அதன் கோபம் தன் உதிரத்திலிருந்து வந்தாலும் அழிந்துவிடுதல் அல்லது சருகாகிவிடுதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட வைத்துவிடுகிறது.

பெண்ணால்தான் இப்படி எழுத முடிந்திருக்கிறது. அங்குதான் அவளின் காதல் தாய்மை மகிழ்வு கோபம் நோவுகள் எல்லாம் உணர்ந்தபடி எழுத்தாணி கொண்டு ஆற்ற முடிந்திருக்கிறது. பெண்ணால்தான் மற்றவர்களின் மன உணர்வுகளுக்கேற்ப தன்னை தயார்படுத்த தன்னை வழிநடத்த சூழ்நிலைக்கேற்ப களமிறங்கிப் போராடவும் செய்கிறது. சில சமயங்களில் மௌனமாக இருத்தலும் ஒருவகைப்போராட்டமே எனவும் உணர்த்துபவள் பெண்ணே.

இப்படிப்பல பரிமாணங்களைக் கொண்டவளால்தான் சிறப்பான கவிதைகளைத் தந்திருக்க முடியும்.

கவிஞன் என்பவன் இயற்கையுடன் ஒன்றித்து வாழத் தெரிந்திருக்கவேண்டும். அப்படி வாழ்த் தெரிந்தவன் அழகிய கவிதைகளை பிரசவிக்கும் பாக்கியம் பெற்றவனாகிறன். இங்கு இவரும் மனிதப்பண்பு சிதையாமல் வாழும் கவிதைகளைப் படைத்ததில் பெருமைப்படுகிறோம்.

‘நிறமற்றவள்

நீர்த்துளி போல் கனமற்றவள்

கண்களில் காதல் உறைய

மௌனம் என்னும் பெருமொழியில்

கவிதைகளின் நீள் தொடரானவள்.

அடைக்கலமாக சிறகு விரிக்கும்

அவளின் பறவை மகிழ்வை

அடிவானில் மின்னும்

நட்சத்திரக் கூட்டம் மட்டுமே அறியக்கூடும்..

ஒவ்வொரு கவிதையும் மனதுள் அதிவை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.

மனப்பறவை விண்ணதிரும் வண்ணம் இசைத்தபடி பறந்துவிட்டு மீளவும் இருப்பிடத்திற்கு வந்து கட்டுக்குள் அல்லது கைகளுக்குள் வந்து உட்கார்ந்துகொள்வதாய் அனைத்துக் கவிதையும் வாசிக்கும் போது மனது மணக்க  நினைக்க வைக்கிறது.

வாழ்த்தைத் தவிர வேறென்ன சக படைப்பாளிக்குச் சொல்லிவிடமுடியும்.

கவிதை ஒருவித லயத்துடன் பயணிக்கவேண்டும்.

வாசகனுக்கு புரியவேண்டும். அதேவேளையில் வாசகனுக்குள்ளும் ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும். அந்தப் புரிதலே கவிதை மீதான கரிசனையை மேலோங்கச் செய்யும். அடுத்தகட்டத்திற்கு படைப்பாளியை நகர்த்திச்செல்லும் பணியையும் வாசகனே செய்தும் விடுகின்றான். இங்கும் திருமதி. குணா ஜானகியின் கவிதைகள் வாசகனைச் சென்றடைந்ததுடன் மாத்திரமல்ல அந்த வாசகனே கவிதைகளை நகர்த்திச் செல்வதனால் கவிதைகள் எந்தச் சேதாரமுமின்றி இன்னொரு தளத்தைச் சென்றடையும் என்பது என் நம்பிக்கை.

பூப்பெய்திய கவிதைகள் அனைத்தும் மனதை வருடிச்செல்கின்றன.

‘இனி வரும் கணங்களைக் கடத்தல்

கடினமேயெனினும்

காரிருளே உன் கரங்களில்

என்னைச் சமர்ப்பிக்கிறேன்’

வாழ்தல் கடினம். கடினமெனினும் கடந்து போதலே வாழ்க்கை. அந்த வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் மற்றவர்களிடம் ஒப்படைத்தபடியே கடந்து செல்கிறோம்.

கவிதைகள் முழுதும் அவன் அல்லது அவளைச் சுற்றியே படர்கிறது. அவள் எனினும் அவன் எனினும் வாசிக்கையில் அவளாக அவனாக நாம் மாறிப்போதல் தவிர்க்கமுடியாதது. கவிதைகளுக்குள் ஒன்றிப்போவதால்தான் இந்த அதிசயம் நடந்துவிடுகிறது.

இன்னொரு வகையில்,

காதலித்துப்பார் கணங்கள் யுகமாகும் என்பர்.

ஆனாலும் யுகங்கள் கணங்களாகிவிடுவதும் காதலில் தான்.

கவிதைகள் அனைத்தும் இப்படித்தான் கட்டி இழுத்துச் செல்கிறது அல்லது கட்டிப்போடுகிறது.

‘வாழ்வின் அழகையும் அனர்த்தங்களையும்

ஒரு சேரக் கடந்திருந்தாலும்

என் முன் விரிந்திருந்த அன்பின் பெருங்கடலில்

மூழ்கியதும்இ நினைவிழந்ததுமே நிதர்சனமாயிற்று’

முதிர்ச்சியான கவிதைகளாய்த் தெரிகின்றன.

நன்றாக செதுக்கிய சிற்பங்களாக வார்த்தைகள் செப்பனிடப்பட்டிருக்கின்றன.

நல்ல கவிதைகளை வாசித்த உணர்வுடன் நிமிர்கையில் மீண்டும் வாசித்துவிடேன் என்கிற மாதிரி அட்டைப்படம் உற்றுப் பார்க்கிறது.

நிறையவே வாழ்க்கையை அனுபவித்து அதன் மூலம் பெற்ற அனுபவங்களை கவிதைகளாக்கியதில் புதிய ஈழத்து பெண்படைப்பாளியாய் நிமிர்கிறார்.

எழுதுகிறாள்..

விழியில் நீர் கோக்க

விம்முதல்களுடன்

அது ஆரம்பமாகிறது

விண் அதிர

மழையாகப் பொழிந்து

மனத்தை நனைக்கிறது.

தலைகோதும் கரங்களால்

அள்ளி அணைத்துக் கொள்கிறது.

விரல் வருடி விழி மூட

அவன் பாடல்

அங்கே கேட்டுகொண்டிருக்கிறது’

எழுது மகளே..உன் எழுத்தின் வரிகள் என்னுள்ளும் வருடி வருடி தலைகோதியபடி…

விழிமூடிஇ ரசிக்கிறேன்..எங்கோ ஒரு மூலையில் வாழும் மனிதனுக்குள்ளும் சென்று சேருமெனில் கவிதை எங்காவது வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதுதானே உண்மை.

இதுவே

கடைசியாக

இனிமையாக

மென்மையாக

வலிக்காமல்

ஒரு விடைபெறல்

இலகுவாக

ஓர் இறகாக

தொடரும் பயணத்தில்

யாரும் இல்லாப் பெருவெளியில்

காற்றாவதில்தான் எத்தனை இன்பம்’

நூலின் நிறைவான கவிதை இது..

அற்புதம் ஒன்றை இலகுவாக லாவகமாக நிகழ்த்திவிட்டு அமைதியாக உறங்கப்போகிறேன் என்று சொல்லி அமைதியாகும் பறவையின் நிலையினை உணர்ந்தேன்.

பூக்கள் பூத்துள்ளன.

அதன் வாசனையை ரசனையுடன் தோழமையுடன் நுகர்வோம். ஓவியா பதிப்பகத்தின் சிறந்த வெளிப்பாடாக 2018 இல் வெளிவந்துள்ள கவிதை நூல்களுள் முக்கிய இடத்தினைப் பெறும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். திருமதி. குணா ஜானகியிடமிருந்து இன்னும் நிறைய படைப்புக்களை எதிர்பார்த்து காலத்துடன் நாமும் காத்திருக்கிறோம்.

 

– இலண்டனிலிருந்து முல்லைஅமுதன் –

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More