தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் பின்னணியில் சிறுபாண்மைக் கட்சிகள் பல தமது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை வெளியிடவில்லை.
இந்நிலையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் என்பனவும் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிப்பதாக இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தனது ஆதரவை இதுவரைவெளியிடாத நிலையில், நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விதத்தில் இருக்கும் எவர் பிரதமராக வந்தாலும்ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கைதொழிலாளர்காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக முன்னணி என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாகஅறிவித்துள்ளன.
பெரும்பான்மை காட்சிகளைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. எனினும், ஐக்கிய தேசியகட்சியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களானஆனந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில், பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரைமுடிவிற்குகொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் பணிப்புரை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர்16 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ இருவரும் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இலங்கையில் மொத்தமாக உள்ள 225 பாராளுமன்ற ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 105 இடங்களையும், UPFA 96 இடங்களையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும், ஏனைய கட்சிகள் 8 இடங்களையும் தற்போதைய நிலவரப்படி கொண்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் அரசாங்கத்தை அமைப்பது என்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு கட்சியினாலும், முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது துருப்புச்சீட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரியாக பயன்படுத்துமா? இறுதியில் பிரதமராகப்போவது யார்?
வணக்கம் இலண்டனுக்காக தேன்மொழி