தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறிய கரு ஜயசூரிய, நாளை காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு உயர்நிதிமன்றம் இடைக்காலத்தடை பிறப்பித்தமையால், ஏற்கனவே ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின்படி இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆரம்பம் முதலே சபையில் அமைதியின்மை காணப்பட்டது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்தார்.
இதனால் நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினாலே நாளை காலை 10 மணிவரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.