ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், மிகச்சிறிய நாடான இலங்கையில் அதனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் என்னவெனவும் ஜனாதிபதி ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆவணங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் கோரி வருகின்ற போதிலும், அதனை வழங்குவதில் தாமதம் நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் சரியான ஆவணங்கள் கடந்த ஜனவரி மாதத்திற்கானது மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், தான் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்ததன் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட பலரும் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவருக்கு மாத்திரமே தற்போது காணப்படும் ஆவணங்களின் படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தாம் விரும்பவில்லை எனவும் கூறினார்.
எவ்வாறாயினும் அடுத்த 2 மாதங்களில் மரணதண்டனையை அமுல்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.