தான் நடிக்கும் படங்களின் மூலம் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடியவர் நடிகர் விவேக். சமூக சேவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, plantforkalam என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும்படி ரஜினி, விஜய், அஜித் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
சென்னை எம். ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில் விவேக் கலந்து கொண்டார். நற்குணங்களின் வடிவமாக திகழ்ந்தவர் அப்துல்கலாம் என்றும், அவரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் பேசினார். மேலும் தனது கோரிக்கையை ஏற்று ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த ரஜினி, அஜித், விஜய், சூர்யா ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அரசு பள்ளிகளில் மரம் நட்டால் மதிப்பெண் என்று உள்ளதை போல தனியார் பள்ளிகளும் மரக்கன்று நட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மரம் வளர்ப்பு பேசியது போல் மற்ற நடிகர்களும், தலைவர்களும் இதுகுறித்து பேச வேண்டும். மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என’ அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.