தனது பிள்ளைக்காக காத்திருந்த மற்றுமொரு தாயார் மகனை காணாமலே உயிரிழந்துள்ளார். தனது இரு பிள்ளைகளையும் தாய் மண்ணுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஓர் வீரத்தாய் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிய வண்ணம் இன்று உயிரிழந்துள்ளார்.
முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே இன்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை ஒன்பது முப்பது மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
மகன் எப்போது கிடைத்து விடுவான் எப்போது அவனை கொஞ்சி மகிழலாம் என்ற ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் தகரக் கொட்டில்களில் நோய்நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில்
ஈடுபட்டார்.
தமது உறவுகளை தேடிய வண்ணம் ஏக்கத்தோடும் மிகுந்த பரிதவிப்புடனும் தேடிய உறவுகளில் இதுவரை 69 பேர் விதையாகி போனார்கள்.மீதமுள்ளவர்கள் நடைப்பிணங்களாக மிகுந்த ஏக்கத்தோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.