இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன். யாழினி யோகேஸ்வரன் அனுப்பியிருந்தார். கையைப் பிடித்தவர், நான் சீலன் இல்லை; அவர்தான் என்னை அனுப்பிவைத்தார். காலையில் அவர் வந்து சாப்பிட அழைத்துப் போவார் என்று சொன்னார். இப்போது கையிலிருந்த தலைக்கவசத்தை என்னிடம் கொடுத்துப் போட்டுக்கொள்ளும்படி சொன்னார். அவரது தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டுக் காபி அல்லது தேநீர் குடிக்கலாமா? என்று கேட்டார். மறுத்துவிட்டு இப்போது குடித்தால் தூக்கம் வராது என்று காரணமும் சொன்னேன்.
இந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இன்னொரு கவசம் கொண்டுவந்திருக்கிறீர்களே என்று ஆச்சரியத்தைச் சொன்னேன். இந்தியாவில் ஏழு மணிக்குப் பிறகுதான் போலீஸ்காரர்கள் வருவார்கள். அதற்குள் முடியக்கூடிய தூரமென்றால் வண்டி ஓட்டுபவரே தலைக்கவசம் போடுவதில்லை என்றேன். இங்கு அப்படிச் செய்யமுடியாது. வண்டியில் இருக்கும் இரண்டுபேரும் தலைக்கவசம் போட்டுத்தான் ஆகவேண்டும். இப்போதெல்லாம் போக்குவரத்து விதிகள் கடுமையாகிவிட்டன. சாலையில் நடப்பவர்கள் அதற்கான கோடுகளைத் தாண்டக் கூடாது.மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடங்களில் கவனமாக இருக்கவேண்டும். எல்லாரும் விதிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றார். தண்டனைகளும் தண்டத்தொகையும் கூடிவிட்டது என்றார் இருவரும் கவசங்களைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாண வீதிகளில் அரைமணி நிமிடம் பயணம் செய்து ரயில்வே நிலையத்திற்கருகில் இருந்த தங்கவேண்டிய இட த்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.
தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடம் ஜப்னா இக்கோ ரிசார்ட்டில் . தங்கும் அறைகள் மட்டுமே உண்டு. அதுபோன்ற அறைகள் பாண்டிச்சேரியில் அரசு விருந்தினர் விடுதிகளில் -யாத்ரி நிவாஸ்களில் – உண்டு. அறையில் நான்கைந்து பேர் தங்கும் விதமாகக் கட்டில்கள் இருக்கும். குளியலறை இணைக்கப்பட்டிருக்கும். பயணப்பொதிகளை நமது பொறுப்பில் தான் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்த வாடகையில் கிடைக்கும் இடம். ஒரு கட்டிலுக்குத்தான் வாடகை. பல நேரங்களில் தனியொருவருக்கே ஒரு அறை கிடைக்கும் வாய்ப்புண்டு. யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மூன்று நாட்களிலும் நான்கு கட்டில்கள் கொண்ட அந்த அறைக்கு இன்னொருவர் வரவில்லை. நான் மட்டுமே தனியாக இருந்தேன்.
செம்முகம் அரங்காற்றுக் குழுவின் பொறுப்பாளர் சீலன் காலை 9 மணிவாக்கில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரும் கையில் இன்னொரு தலைக்கவசம் கொண்டுவந்தார். யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் இருக்கும் ஜப்னா இக்கோ ரிசாட்டிற்கு அருகில் இருந்த பன்னாட்டுப்பாடசாலையையும் அதன் அருகில் இருந்த தேவாலயத்தையும் அடையாளமாகச் சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய விருப்பங்கள் என்ன என்றார். பெரிய தேவையெல்லாம் இல்லை. சின்னதான கடையாக இருந்தாலும் போதும் என்றேன். முதல் பயணத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கிய மூன்று நாட்களில் இரண்டு இரவு பேராசிரியர் க.சிதம்பரநாதனின் வீட்டில் தங்கினேன். ஒரு பகலில் அவரது பண்பாட்டு மறுமலர்ச்சிக்கூடத்துச் செயல்பாட்டாளர்களுக்கு நாடகப்பயிற்சி. அதனால் அவர்களோடுதான் பெரும்பாலான நேரங்களில் உணவு உண்டேன். பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடத்தில் செயல்படும் பலரும் அவர் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள்; சமைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அது ஒரு கம்யூன் வாழ்க்கை போல இருந்தது. முதல் நாள் முழுவதும் குலசேகரத்தோடு பருத்தித்துறையில். அவர் அழைத்துச் சென்ற உணவு விடுதிகளில் சாப்பிட்டேன். யாழ்ப்பாணத்தில் ஒரு உணவு விடுதியிலும் சாப்பிட்டதில்லை என்றேன். இப்போதுதான் முதன்முதலில் உணவுவிடுதியில் சாப்பிடப் போகிறேன் என்றேன்.
அப்படியானால் நாம் இப்போது அம்மாச்சிக்குப் போகலாம்? தமிழ்நாட்டில் இயங்கும் அம்மா உணவகம் போலவா? என்று கேட்டேன். அம்மா உணவகம் எப்படி இயங்குகிறது என்று கேட்டார். அது முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம். குறைந்த விலையில் ஓரளவு தரமான உணவு கிடைக்கும். காலையில் இட்லி, பொங்கல், மதியத்தில் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், போன்றன கிடைக்கும். மோசமாக இருப்பதில்லை. நான் அந்த உணவகத்தில் இருந்து சாப்பிட்டதில்லை இரண்டுதடவை வாங்கிக் கொண்டுபோய்ச் சாப்பிட்டிருக்கிறேன். என்றேன். அப்போது அவர் அம்மாச்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே அது இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் செல்லும் சாலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் அருகில் நல்ல விரிவான இடத்தில் அமைந்திருந்தது அம்மாச்சி. அங்கே வேலை பார்க்கும் அனைவரும் பெண்கள் மட்டுமே. புட்டு, இடியாப்பம் என இலங்கையின் பாரம்பரியமான உணவுப்பண்டங்களோடு கஞ்சிகள், வடைகள், தோசையில் சில வகைகள் எனத்தனித்தனி இடங்களில் தயாரிக்கப்பட்டன. என்ன வேண்டுமோ அந்த இடத்திற்குச் சென்று நாமே வாங்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்குக் காற்றோட்டமான இடங்களில் கல்மேசைகளும் உலோகக் கதிரைகளும் போடப்பட்டிருந்தன. கூரையாக நவீனப் பிளாஸ்டிக் தகடுகள். அதற்கு வெளியேயும் கதிரைகள் இருந்தன. அமர்ந்தும் சாப்பிடலாம். நின்றபடியேயும் சாப்பிடலாம்.
இயற்கை உணவு என்ற தமிழ்நாட்டில் கொள்ளை லாபம் வைத்து விற்கும் உணவுப்பண்டங்களை விலைகுறைவாகவே வழங்குகிறது அம்மாச்சி. காரணம் அதனை நடத்துவது விவசாயத் திணைக்களமும் பெண்களும். தமிழ்நாட்டின் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் போன்ற செயல்பாடு. அதன் பக்கத்திலேயே இருக்கிறது விவசாயத் திணைக்களம். அவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்களைக் கொண்டு தயாராகும் உணவுகள் வகைவகையாக கிடைக்கின்றன. முதல் நாள் நல்லெண்ணெய்த் தோசை சாப்பிட்டேன், இரண்டாவது நாளும் அங்கேயே போகலாம் என்று சொன்னதால் சீலன் மகிழ்ச்சியாக அழைத்துச் சென்றார். குறைந்த செலவில் சாப்பிட முடிந்தது வேதி உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாத விவசாயத்திலிருந்து கிடைத்த தானியங்கள். நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட உணவு.
இரண்டாவது நாள் தானியக்கஞ்சியும் பணியாரமும். தானியக்கஞ்சியில் எல்லா வகையான தானியமும் கலந்து கூழ்போலக் கரைத்துத் தருகிறார்கள். சூடாகக் கரண்டியில் எடுத்துக் குடித்தபோது புத்துணர்வு கிளம்பியது. தோசையும் கூட ஒரே தானியத்தில் இல்லை. பணியாரத்தைக் குண்டு தோசை என்று பெயர் சொல்கிறார்கள். தேநீரில் பலவகை இருக்கிறது. காபியிலும் கூட. யாழ்ப்பாணத்தில் இருக்கும் அம்மாச்சி போன்ற ஓர் உணவகத்தில் தான் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்திலும் தோசையும் சம்பலும் சாப்பிட்டேன். அந்த உணவு விடுதியை நடத்துவது பல்கலைக்கழக வேளாண் ஆய்வுத்துறை. அங்கே பெண்களும் ஆண்களும் பணியாற்றினார்கள். தமிழ் நாட்டில் இயங்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற உணவகங்கள் இருக்கக் கூடும். அதனைப் பொதுமக்களும் பயன்படுத்தும் விதமாக நடத்துவதில்லை.எல்லாவற்றையும் சந்தைக்கு அனுப்பிவிடும் மனோபாவம் தான் அதிகம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை, தாவரவியல் துறை போன்றன அவர்கள் தயாரிக்கும் மண்புழு உரம், காய்கறிகள், காளான்கள் போன்றவற்றை விற்பனை செய்வார்கள்.
கொழும்பில் இறங்கியதிலிருந்து யாழ்ப்பாணம் வரும்வரை தனியாக உணவு எடுக்கும் வாய்ப்பே ஏற்படவில்லை. பெரும்பாலும் நண்பர்களோடுதான். நண்பர்களோடு என்றாலும் உணவு விடுதிக்குச் சென்று சாப்பிட்ட வேளைகள் குறைவு. வீடுகளுக்குச் சென்று சாப்பிடுவதே அதிகம்.மலையகத்தில் நுவரெலியாவில் தங்கியிருந்த விடுதிக்கு நண்பர்கள் கொத்துப் பரோட்டாவும் கோழிக்கறியும் வாங்கிவந்தார்கள். அங்கிருந்து ராகலைக்குப் போன போது இரண்டு தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று கிழங்கு, சோறு, வடை, மாட்டிறைச்சி, பழங்கள் என பெரு விருந்து. சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரவு பதினோரு மணிக்குப் போனபோது லறீனா வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டுவந்து காத்திருந்தார். வடையும் இறைச்சியும் பழங்களும். அடுத்த நாள் மதியம் இன்னொரு பெருவிருந்து. அனைத்து மாணவர்களுக்கும் என்னோடு சேர்த்து விருந்தளித்தார். திரிகோணமலையில் சுகுமாரின் உறவினர் திருச்செல்வம் நடத்தும் மகிழ்ச்சி உணவகத்திலிருந்து ஒவ்வொரு நேரமும் வந்து இறங்கிக்கொண்டே இருந்தது. சேனையூர் நிகழ்ச்சிக்கும் அங்கிருந்துதான் சாப்பாடு.
நிகழ்ச்சி அல்லாமல் அன்றிரவும் அடுத்த நாள் காலையிலும் வித்தியாசமான உணவு. நாடக ஆசிரியை காயத்ரி தனது வீட்டில் விருந்து கொடுத்தார். நண்டுக்கறியும் புட்டும். அதற்கு முன்னால் இவ்வளவு நண்டுகளைச் சாப்பிட்ட தில்லை. புட்டு ஒரு பங்கு என்றால் நண்டுக்கறி இரண்டு மடங்கு. அடுத்த நாள் காலையில் ஓவியக்காரி கிருஷ்ணாவின் கிரிபத் என்னும் நெய்ச்சோறு.எல்லா இடங்களிலும் இலங்கையின் உணவு அடையாளமாக இருக்கும் புட்டு, இடியாப்பம் என்ற இரண்டோடு சொதிகள்,கறிகள்,இறைச்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிகள் தாண்டி , மீன், இறால், நண்டு என ருசி பார்த்தாகி விட்டது. கிரிபத் என்ற பால்சோறும் ருசித்தாகி விட்டது. மலையகத்தில் ஒருநாள் கொத்தும் கோழியும். மதிய வேளைகளில் பெரும்பாலும் சிவப்பரிசிப் பெருஞ்சோறு. உரையாடல் மற்றும் அரங்கப்பயிற்சிகளுக்குப் பின்னர் நடக்கும் பங்கேற்பான உணவுப் பரிமாறலில் அனைவரோடும் சேர்ந்து சாப்பிடுவது இன்னொரு அனுபவம்.
இந்தப் பயணத்தில் விதம்விதமாகச் சாப்பாடு கிடைத்த து. இரண்டுபேரின் சமையலைக்குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதலாவது சொல்லவேண்டியது கொழும்பில் இறங்கிய மூன்று நாளும் தன் கையால் சமைத்துப் போடுவேன் எனப் பிடிவாதம் செய்த ஷாமிலா. கொழும்பில் மூன்றுநாளும் ஷாமிலா முஸ்தீனின் தன் கைப்பக்குவத்தில் கஞ்சி, புட்டு, இடியாப்பம், அப்பம் என வகைவகையாகச் சாப்பிட்டேன். எல்லா நேரமும் சிக்கனோடுதான். கஞ்சியில் கூடச் சிக்கனை அவித்து உதிரியாக்கிக் கலந்து, இஞ்சி, பூண்டுடன் நல்ல காரமாகத் தந்தார். இன்னொரு சிறப்பு சாப்பாடு சேனையூரில் கிருஷ்ணா செய்த கிரிபத். இவ்விரண்டையும் தனியாகச் சொல்ல வேண்டும்.
மட்டக்களப்பின் அழகுகளில் ஒன்று அதனை இரண்டாகப்பிரித்து நீர்ப்பரப்புக்குள் இருக்கும் நகரமாக மாற்றும் வாவிக்கரை. மீன்பாடும் ஊர் அது. வாவிக்கரையோரம் இருக்கும் இருக்கும் மோகனதாசன்,( ஸ்ரீ விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர்) அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். நிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவுக்கு முன்னால் செவிக்கு உணவு. நான் மதிக்கும் ஆளுமைகளான – பெண்ணிய ஆளுமை சித்திரலேகா, அவரது கணவரான நாடகாளுமை மௌனகுரு, பேராசிரியர், யோகராஜா, செயல்பாட்டாளர் எஸ் எல் எம், பெரும்வாசிப்பாளர் சிவலிங்கம் எனச் சேர்ந்து விவசாயம். அரங்கியல், இலக்கியம், கல்வி, இந்திய அரசியலும் இலங்கையின் சிக்கல்களும் என ஒன்றைத்தொட்டு ஒன்றாக விரிந்த பேச்சாக மாறியது. பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே மோகனதாசனும் அவரது மனைவி தர்மினியும் சேர்ந்து புட்டும் சாம்பாரும் சொதியுமாக நல்லதொரு உணவைத் தயாரித்து விட்டார்கள்.வயிற்றுக்கும் செவிக்குமாக உரையாடல் தொடர்ந்தது. தாமதமாக வந்து சேர்ந்தார் இளம் மருத்துவ நண்பர் ஒருவர்.பயணங்களில் இப்படியான சந்திப்புகளும் உரையாடல்களுமே பெரும் உணவு மேசைகளுமே பெரிய அறிதலாக மாறிவிடும்.
அன்றைய இரவு மேசையைப் போலவே அடுத்த நாள் இரவிலும் நண்பர்கள் கூட்டத்தோடு உணவு மேசை வாய்த்தது. ஏறாவூரில் விளிம்புநிலை மக்கள் ஒருபார்வை என்ற உரைக்கும் உரையாடலுக்குப் பின்னால், முகம்மது சப்ரியின் வீட்டில் திரண்ட நண்பர்களோடு எஸ் எல் எம்மும் இருந்தார். இடியாப்பம், மாட்டிறைச்சி, பால் சொதி, தேங்காய் சம்பல், பருப்பு, குடல்கறி ஜவ்வரிசிக்கஞ்சி எனப் பலவற்றையும் சாப்பிட்டுவிட்டுத்தான் யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் ஏறினேன் .
யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் காலையில் சாப்பிட்ட அனுபவத்தில் அடுத்தடுத்துச் சென்ற ஊர்களில் எல்லாம் அம்மாச்சியை நாடியது மனம். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் இறங்கியவுடனே எதிரில் இருந்த அம்மாச்சியில் இறங்கி சாம்பார் சாதமும் வடையும். அடுத்த நாள் காலையிலும் நண்பர் கருணாகரனோடு அம்மாச்சியையே விரும்பினேன். அவர் வீட்டில் சாப்பிடலாம் என்றார். நேற்றிரவு சாப்பிட்டோமே. இப்போது அம்மாச்சிக்குப் போகலாம் என்று கிளம்பினோம். கிளிநொச்சி நகரை ஊடறுத்துச் செல்லும் யாழ்ப்பாணம் -வவுனியா பெருஞ்சாலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் அம்மாச்சிக்கடை இருப்பதைப் பார்த்தேன். ராணுவப்பயிற்சிக் கூடத்தைத் தாண்டி ரணமடுவிற்குப் போகும் பாதையில் ஒரு அம்மாச்சி இருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் வேளான்மைப் பீடம் அமைந்திருக்கும் வளாகத்திலும் ஒரு அம்மாச்சி. அதற்கு முன்னதாக ஒரு கல்வியியல் கல்லூரி வளாகத்திலும் இன்னொரு அம்மாச்சி. அம்மாச்சியின் தோற்றமே கிளிநொச்சிதான் என்று சொன்னார்கள். அதிகமும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைக் கொண்ட கிளிநொச்சியில் வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். போர் தின்ற மண்ணையும் ரத்தம் மிதந்த தோட்டங்களையும் கொண்ட அப்பகுதி முப்பதாண்டுப் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. அதனாலேயே அரசின் கவனமும் அங்கே அதிகமாக இருக்கிறது.
ருசிகண்ட பூனையாக வவுனியாவிலும் ஒரு நாள் காலை உணவுக்கு அம்மாச்சிக்குப் போனோம் நானும் வேளான்மைத் துறையில் மாவட்ட அளவுப் பொறுப்பில் இருக்கும் கிருபா நந்தன் குமரனும். வவுனியாவின் அடையாளங்களில் ஒன்றான வவுனியாக் குளக்கரையில் காலை நடை போகலாம் என்று மாலையில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள தமிழ்மாமன்றப் பொறுப்பாளர்களில் ஒருவருமான கிருபாநந்தன் குமரன் முதல் நாள் இரவு மன்னாரிலிருந்து வரும்போதே சொல்லியிருந்தார். அதன்படி சரியாக 6.30 நடை தொடங்கிவிட்டது.
தமிழ்ப்பகுதியில் நடப்பது வளர்ச்சி அரசியலா? உரிமை அரசியலா? என்பதைப் பேசத்தொடங்கி, நிலவளம், நீர்வளம், கட்டுமானங்களை உருவாக்குதல், கல்விப்புலங்களின் விரிவாக்கம், சிந்தனை முறை மாற்றங்கள், தொன்மைகளைத் தக்கவைப்பதும் மாற்றுவதும், உள் வாங்கும் அரசியல் எனப் பலவற்றைப் பேசிக்கொண்டே போகும்போது நிலவுடைமையின் வரலாறு, காணிப்பங்களிப்புகள், காலனியத்தின் வருகை, அதற்கு முன்னான வரலாற்றைத் தேடுதல் என அவரும் நானும் கொண்டும் கொடுத்தும் கற்றுக் கொண்டோம். ஒருவிதத்தில் காலைநடை கல்விநடையாக மாறிப்போய்விட்டது.
முக்கால் மணிநேர குளக்கரை நடைக்குப் பின் வாகனப்பயணம். நகரின் முதன்மையான அலுவலகங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் முச்சந்திகள், நாற்சந்திகள், வள்ளுவர், விபுலானந்தர், தாமோதரம்பிள்ளை சிலைகள் என முடித்துக் கடைசியாக பண்டார வன்னியன் முன் நின்றபோது பசிக்க ஆரம்பித்தது. இங்கேயும் அம்மாச்சி இருக்கிறது தானே என்று கேட்டேன் அவரிடம். இதோ பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும்போது இடது பக்கம் என்று காட்டினார். அதுவும் யாழ்ப்பாண அம்மாச்சியைப் போலவே விரிவான இடத்தில் இருந்தது. ஏறத்தாள இலங்கைத் தமிழ்ப் பகுதியின் புதிய உணவு அடையாளமாகப் மாறிக் கொண்டிருக்கும் அம்மாச்சியில் காலை உணவாக இரண்டு தோசையோடு சம்பலும் சாம்பாரும் .பிறகு ஒரு சக்கரை இல்லாத காபி. இந்த அம்மாச்சி முன்னால் ஒரு பெரிய விளம்பரப்பதாகை இருந்தது. அதன்படி அம்மாச்சி என்னும் உணவு வழங்கும் – பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியிருக்கும் திட்ட த்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி உதவி வழங்குவதாக அறிய முடிந்தது. கிருபாந்தன் குமரனும் அந்தத் திட்டம் நல்லதொரு திட்டம் தான் என்று வழிமொழிந்தார். பெண்களின் விடுதலையைப் பற்றிப் பேசிய பெரியார் அவர்களை விடுதலை அடையச் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்படியை வைத்து வீடுகட்டக் கூடாது என்று சொன்னார் என்பதை நினைவூட்டினேன். ஒரு கிராமத்திற்கு அல்லது ஒரு வீடுகளின் தொகுதியாக இருக்கும் காலனிக்கு அல்லது அடுக்குமாடிக்குடியிருப்புக்கு ஒரு உணவுக்கூடம் போதும். கல்லூரி விடுதிகளில் இருக்கும் ஒரு பெரும் சமையலறையில் சமைத்தால் போதுமே. 500 பேர் இருக்கும் விடுதியில் 10 சமையல்கார ர்கள் சமைத்துப் போட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து பேர் இருக்கும் குடும்பத்திற்கு ஒரு பெண் முழுநேர வேலையாகச் சமையல் செய்கிறாளே? அப்படியானால் 100 பேர் அல்லவா சமைப்பார்கள் என்று கேட்பார். சமையல்கட்டிலிருந்து விடுவிப்பதற்கான வழியொன்றைக் கண்டுபிடித்துப் பெண்களின் வளத்தை – மனிதவளமாகக் கருதிப் பயன்படுத்தும் சமூகமே வளர்ச்சி அடையும் . போருக்குப் பிந்திய இலங்கைத் தமிழ்ப் பகுதியில் அம்மாச்சி என்னும் உணவுக்கடை அப்படியொரு விடுதலையின் – பெண்களின் விடுதலைக்கான குறியீடாக மாறியிருக்கிறது.
அ ராமசாமி-இந்தியா