சிங்கப்பூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,623 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சுகாதாரத்துறை வழங்கியுள்ள கணக்குப்படி, இன்று மட்டும் 142 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 40 பேருக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலிருந்து பரவியிருக்கின்றது. நேற்று 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தொற்று ஏற்பட்ட 39 பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், சுமார் 20,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் கட்டுமானம் முதல் தூய்மைப்பணி வரை பல்வேறு துறைகளில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக பணியாற்றும் இத்தொழிலாளர்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றனர். தற்போது இத்தொழிலாளர்களுக்கு இடையே கொரோனா தொற்று பரவிக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் சமூக ஒன்றுக்கூடலை தடை செய்யும் விதமாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், சீனாவில் கொரோனா தொற்று பரவிய போது கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட கடுமையான கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியது. ஆனால், தற்போது உள்ளூர் அளவில் தொற்று பரவுவது மீண்டும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது.