இக் கட்டுரையில் சில உண்மைகளும், வரலாறு தந்த பாடங்களும்,யதார்த்தங்களும் உள்ளடங்கியுள்ளன.
உலகில் பொன் ஆசை, பெண் ஆசை, வரட்டு கௌரவத்துடன் இணைந்த புகழை தேடி அலைந்தவர், அலைபவர்களினால், தமிழ் தேசியமெனும் மண் ஆசை நாசமாக்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது. இதற்கான ஆயிரம் உதாரணங்களை இங்கு கூற முடியும்.
சுருக்கமாக, ஆயிரக்கணக்கான துரோகிகள், எட்டப்பர்கள், ஒட்டுக்குழுக்கள், கோடரி காம்புகள், ஊடக தர்மத்தை விலைக்கு விற்று வாழும் சில ஊடகவியலாளரென தமிழீழ வரலாற்றின் சாபக்கேட்டின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற 1948ம் ஆண்டு முதல் இன்று வரை, ஜனநாயகமெனும் போர்வைக்குள், படைபல ஆட்சியை தொடர்ந்து செய்து வரும் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள், தமிழ் தேசியம் பற்றி கூறும் கருத்தை நாம் அவதானிக்க வேண்டும்.
விசேடமாக, எந்த ஒரு ஒழிப்பு மறைப்பின்றி, 1983ம் ஆண்டின் பின்னர் இலங்கைதீவின் ஜனாதிபதிகளான ஜே .ஆர் ஜயவர்த்தன, பிரேமதாச, சந்திரிக்கா, ராஜபச்சக்களினால் கூறப்பட்ட கதைகளை கேளுங்கள்.
தமிழீழ மக்களினால் துரோகிகளாக, எட்டப்பனாக, ஒட்டுக்குழுவாக, கோடரி காம்பாக பெயர் சூட்டப்பட்ட எந்தவொரு தமிழனும் – தமது மண்ணில் ஆசை கொண்டு, ஓர் ஜனநாயக வழி மூலம் ஓர் தீர்வை தேடி எம்மை ஆதரிக்கவில்லை. இவர்கள் யாவரும், தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்தை, எம்முடன் இணைந்து அழிப்பதற்கு, நிதி, தனிப்பட்ட சலுகைககளை எம்மிடமிருந்து எதிர்பார்த்தே எமக்கு ஆதரவளித்தார்கள் என கூறுகின்றனர்.
இவற்றை வேறு விதமாக கூறுவதனால், இவர்களில் யாரும், தமிழீழ விடுதலை புலிகளினால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயுத போராட்டத்தை, தாம் அழிக்க உதவினால், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமென எந்த சிங்கள பௌத்த அரசுகளிடம் எந்த சந்தர்ப்பத்திலும் இவர்கள் வேண்டுகோள் வைத்த வரலாறு கிடையாதென தயக்கமின்றி கூறுகின்றனர்.
அதாவது, புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த அல்பிரட் துரையப்பா முதல், மிக அண்மை காலத்தில் கதிர்காமர், ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கருணா உட்டபட, புலம்பெயர் தேசத்தில் சில புலன்பெயர்ந்த ஊடகவியலாளர்களும், தமிழர்களும் இதில் உள்ளடங்குவார்கள்.
இவர்கள் யாவரும் தமது மண் ஆசைக்கு மேலாக, தமது சொகுசு வாழ்க்கைக்கு, சிங்கள பௌத்த அரசுகளினால் கொடுக்கப்பட்ட பொன் ஆசை, பெண் ஆசையுடன், தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட சலுகைகளிற்காகவே, வெற்றியாக நடைபெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிக்க உதவினார்கள் என்பதே உண்மை. இதற்கு சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் கூற்றுக்கள் சாட்சியாகவுள்ளன.
இதேவேளை, “அவன்” இருக்கும் வேளையில் எமக்கு சிங்கள பௌத்த அரசியல்வாதிகளிடம் ஒரு கௌரவம் மரியாதை, கேட்டவுடன் எமது சலுகைகளை பெற்று கொள்ளும் சந்தர்ப்பம் முன்பு இருந்ததென, தற்பொழுது இரவு பகலாக ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா போன்றோர் உள்நாட்டிலும், சிலர் புலம்பெயர் தேசத்திலும் புலம்புவது எமது செவிகளிற்கு தினமும் நன்றாக கேட்கிறது.
இதில் “அவன்” என இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். என்னை பொறுத்த வரையில் இவர்கள் குறிப்பிடும் “அவன்” என்பவர் ‘இருந்தால் சந்தோசம், இல்லையேல் கவலை’ என்ற கொள்கையிலேயே உள்ளேன். இதை 2010ம் ஆண்டு நடைபெற்ற ஓர் தொலைகாட்சி செவ்வியில் பதிவு செய்துள்ளேன் என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ் விடயதில், அர்த்தமற்ற முறையில் வாக்குவாதங்கள் செய்து, தமிழீழ மக்கள் இரண்டு, மூன்று, நான்காக பிரிந்து நிற்பது, சிங்கள பௌத்த அரசுகளின் சதி திட்டமென்பதை புரியாது, இன்றும் ஒரு ஈழத் தமிழர் இவ்வுலகில் இருப்பாரேயானால், இவர்களும் பொன் ஆசை, பெண் ஆசையுடன் இணைந்த வரட்டு கௌரவத்தை தேடுபவராகவே திகழ்வார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எமது இறுதி மூச்சு
ஆயுத போராட்டம் 2019ம் ஆண்டு மே மாதம் மௌனித்ததை தொடர்ந்து, முன்பு என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தையோ, தமிழ் மக்களையோ தமது கனவில் கூட எண்ணாதவர்கள், இன்று தமிழீழ மக்களிற்கு தலைமை தாங்க முனைவதும், முன்வந்துள்ளமையும், தமிழீழ மக்களிற்கு கிடைத்துள்ள சாபக்கேடுகளில் ஒன்று.
சிலர் பரம்பரை அரசியல் பேசினாலும், இவர்கள் ஒவ்வொருவருடைய முன்னைய கால வாழ்க்கையை நாம் ஆராய்ந்தால், இவர்கள் தமிழ் அரசியல் காட்சிகளிற்கு தலைமை தாங்கவோ, அல்லது தமிழ் அரசியல்வாதிகளாக திகழவோ, எந்த தகுதியும் அற்றவர்களென்பதை நாம் அறிய, புரிய முடியும்.
தமிழ் மக்களின் மூத்த அரசியல் கட்சிகளான தமிழ் காங்கிரசையும், தமிழரசு கட்சியையும் நாம் உதாரணமாக கொள்ளும் வேளையில், இவ்விரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களாக தற்பொழுது விளங்கும் சுமந்திரன், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தமிழ் மக்களை தலைமை தாங்வதற்கு தகுதி உள்ளதா என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும்.
சுமந்திரன் 2009ம் ஆண்டிற்கு முன்னர், தமிழ் மக்களை பற்றி எந்த கரிசனையும் காட்டதவர் மட்டுமல்லாது, இவர் இன்று மிகவும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துபவர் என்பதை யாவரும் ஒளிப்பு மறைப்பின்றி காணக்கூடியதாகவுள்ளது.
உதாரணத்திற்கு, இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால், 1988ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகணங்களை, 2006ம்ஆண்டு நீதி மன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்ட வேளையில், இதற்கான மீள் மனுவை, சிலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக, ஆலோசனை செய்த கொழும்பு வாழ் வழக்கறிஞர்களில் சுமந்திரனும் ஒருவர்.
ஆனால் இன்றுவரை இவர் இவ்விடயத்தை அலட்சியம் பண்ணி வந்துள்ளார். காரணம் என்ன என்பதை இவர் இன்றுவரை யாரிடமும் கூறியதில்லை!
இரு முக்கிய வழக்குகள்
இவ் வழக்கை தொடர்ந்து, ஜே.வி.பி. என்ற இனவாத கட்சியினால், 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சுனாமி கட்டமைப்பு (PTOMS) பற்றிய வழக்கு, நீதிமன்றம் மூலம் நிரகரிக்ககப்பட்ட வேளையில், இச் சுமத்திரன் அன்று என்ன நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதை இவரால் தமிழ் மக்களிற்கு கூற முடியுமா?
இவ்விரு விடயங்களில் – தமிழீழ மக்களிற்கு சமஸ்டி பெற்று தருவதாக கபட வீரம் பேசும் சுமந்திரன் ஒருபுறமும், தமிழீழ விடுதலை புலிகளின் பாதையை பின்பற்றி, தமிழீழம் பெற்று தருவேன் என செல்லப்பிள்ளை அரசியல் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுபுறமும் என்ன செய்தார்கள்? இவர்கள் இருவரும் தமிழ் மக்களிற்கு உருப்படியாக ஒன்றும் செய்தாது கிடையாது என்பதே யதார்த்தம்.
இவ் இரு சந்தர்பங்களிலும், தமிழீழ மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும், தமிழ் மக்களிடம் வாக்கை கேட்பதற்கு முன், இவற்றிற்கு தமது பங்களிப்பு என்ன என்பதை மக்களிற்கு கூற வேண்டும்.
இதற்குள் வேடிக்கை என்னவெனில், நல்லாட்சி என்ற பொய்யாட்சி, 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கேள்வி குறியாக்கப்பட்ட வேளையில், வடக்கு – கிழக்கு வாழ் மக்களிற்கு பேய்க்காட்ட அரசியல் தீர்வையும், பொம்மை விளையாட்டுக்களையும் காட்டிய அரசை தாக்கு பிடிப்பதற்காக, சுமந்திரன் முன்னின்று நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்து, வெற்றியும் பெற்று கொடுத்தார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தி, அவர்களது முழு அரசியல் பலத்தையும் தன்னிச்சையாக, பொய்யாட்சிக்கு பெற்று கொடுத்தார் என்பது வேறு கதை.
எது என்னவானலும், சுமந்திரன் வழக்கறிஞர் என்ற அடிப்படையில், தமிழ் இளைஞர்களுடைய சில வழக்குகளில் பங்களித்துள்ளார் என்பது உண்மை. இதேவேளை, இவரை போன்றோ அல்லது இவருக்கு மேலாகவோ கே. வி. தவராசா, ரட்ணவேல் போன்று வேறு பல தமிழ் வழக்கறிஞர்களும், தமிழ் இளைஞர்களின் பல வழக்குகளை முன்னின்று நடத்தி வெற்றியும் கண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகம்
மிகவும் சுருக்கமாக கூறுவதனால், ‘கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகம்’ போல், தமிழர்களுடைய சரித்திரமோ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதயம் பற்றி எதுவும் அறியாத, தெரியாத சுமந்திரன், இன்று இக்கட்சியின் ‘முடிசூடா மன்னராக’, வடக்கு – கிழக்கு வாழ் மக்களிற்கு செய்யும் தொல்லைகள், அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
இவரினால் பாதிக்கப்பட்வர்கள் பலராக இருந்தாலும், முன்னாள் நீதவானும், முதலாமைச்சருமான விக்கினேஸ்வரன் மிகவும் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சுமந்திரன் தனது காய் நகர்த்தல்களிற்கு ஒத்துவராதவர்களை, கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்துவதுடன், தமிழ் தேசியத்தின் துரோகிகளிற்கு, சுமந்திரனினால் இன்று பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்பப்பம் கொடுப்பதன் கபட நோக்கம் புரியாதுள்ளோம்!
சுமந்திரன் கூறும் பெண்களிற்கான சமஉரிமை, முன்னுரிமை பற்றிய கதை மிகவும் வேடிக்கைகுரியது.
காரணம், தனது சுயநலத்தின் அடிப்படையில், 2009ம் ஆண்டின் பின்னரே தமிழ் மக்களின் அரசியல் பக்கத்தை எட்டி பார்த்துள்ள சுமந்திரன், மற்றவர்களிற்கு பெண்ணுரிமை, முன்னுரிமை பற்றி கதை கூறுவது யாவும், ““ஆடு நனையுதென ஓநாய் அழுவதற்கு” சமன்.
தமிழ் பற்று, 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் அறவே இல்லாத சுமந்திரன், தமிழர்களின் உரிமைக்கும், நீதிக்கும் துரோகம் செய்த செய்யும் பெண்களை சமஉரிமையின் பெயரால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களாக முன்னொழிவதும், அதே போல் தமிழ் தேசியத்திற்கு மகா துரோகம் செய்துள்ள ஆண்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக களம் இறக்கியுள்ளமையும், 2010ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் பெயரால் வெற்றி பெற்ற பொடியப்புகாமி பியசேனவின் படலம் தொடருவதற்காக சுமந்திரன் வித்திடுகிறார் என்பதே உண்மை.
வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் உரிமைகளில், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உருப்படியாக எதுவும் செய்ததாக சரித்திரத்திரமே கிடையாது. அதே போல் தமிழ் மக்கள் மீது நாசகார வேலைகளை மேற்கொள்ளும் இலங்கையின் புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நபர்களை மட்டும் விசேடமாக தெரிந்து, தேர்தலில் இணைக்க முனைந்த சுமந்திரனின் கபட நோக்கம் என்னவென்று வாக்காளர் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிகவும் இனப்பற்று, மொழிபற்று
நீதிமன்றத்தின்பல வெற்றிகளை கண்ட கே.வி.தவராசாவை, சுமந்திரன் ஒதுக்குவதை நாம் வெளிப்படையாக காண்கிறோம். இறுதியில் தவராசாவிற்கு உறுதியளித்த நியமன அங்கத்தவர் பதவியும் கைநழுவும் நிலையில் உள்ள பரிதாப நிலையையும் தற்பொழுது காண கூடியதாகவுள்ளது.
சுமந்திரன் கூட்டமைப்பின் சர்வாதிகார அணுகு முறையில் தனதாக்கி, தமிழ் பற்று, இனப்பற்று அற்ற பெண்களுக்கும், ஆண்களிற்கும் ஏதேச்சையாக கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளினால், தமிழ் தேசியம் நிர்மூலமாக்கப்படுகிறது என்பதே உண்மை.
வெட்கப்படக் கூடிய விடயம் என்னவெனில் – சிங்களவர்களுடன் பிறந்து வளர்ந்ததுடன், உண்மையான விசுவசமான சிங்கள நண்பர்களை கொண்டுள்ள தமிழர்களும், சமஉரிமை, சமஅந்தஸ்து புரிந்த சிங்களவர்களும், விடுதலை போராளிகளாக வாழ்ந்து சிலர் மடிந்துள்ள இன்றைய நிலையில், ஐந்து அல்ல பதினைந்து வயதிற்கு பின்னர் சிங்களவர்களையும், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், தமிழர்களின் பெயரை பயன்படுத்தி, சிங்கள தலைவர்களை சந்தித்துள்ளவரும், மற்றைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் சிங்கள தலைமைக்கு காட்டி கொடுக்கும் ஒருவருக்கா, தமிழ் மக்கள் முன்பு வாக்களித்தார்கள்? இவருக்கா தொடர்ந்தும் வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.
இன்றைய பரிதாப நிலை….
கூட்டமைப்பின் இன்றைய பரிதாப நிலைக்கும், சுமந்திரனின் தலைதெறித்து ஆடும் பித்தலாட்டத்திற்கும், செல்லப்பிள்ளை அரசியலே காரணியாகியுள்ளது என்பதனை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
ஆயுத போராட்ட வேளையில் – ஆயிரக்கணக்கானவர்களின் இரத்தத்தில், உயிர்களில், ஆத்மாக்களில், வியர்வையில் பலரது மதிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு.
தமிழீழ மக்களின் இச் சொத்தை, இருவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற சாட்டு போக்கில், எந்த தூர நோக்கோ, திட்டமிடலோ, வடக்கு- கிழக்கில் வாழும் மக்களின் ஆதரவோ இன்றி, பிளவுபடுத்தி உடைத்து, சிதைத்து சின்னா பின்னமாக்கிய பெருமை, தமிழ் காங்கிரசின் ஆணி வேரில் உதயமான, தமிழ் தேசியத்தை மதிக்காத, தமிழ் தேசிய மக்கள் கட்சியை சாரும்.
முள்ளிவாய்க்காலின் துயரங்கள் இரத்தக் கறைகள் காய்வதற்கு முன், தமிழ் தேசியத்தை சிதைத்த பிரதான பொறுப்பை, கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், அவருடன் இணைந்து கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களும் ஏற்று கொள்ள வேண்டும். இவ் நாசகார வேலையானது, ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் தோட்ட தொழிலாளரின் பிரஜாவுரிமைக்கு செய்த துரோகத்திற்கு, பல மடங்கு மேலானது.
இக் காரணத்தினலேயே, இவர்கள் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாது, வடக்கு – கிழக்கில் போட்டியிட்ட சிங்கள கட்சிகளிற்கு பின்னால் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும் கூறவதனால், ‘சுயநிர்ணய உரிமை’, ‘தமிழீழம்’ போன்ற சொற்களுடன், தாம் தான் தமிழீழ விடுதலை புலிகளின் வாரிசுகள் போன்று காண்பித்து, தேர்தல்களில் வெற்றி பெறலாம் என்று யாரும் பகற் கனவு காண முடியாது.
தமிழ் அரசியல்வாதிகள் யாராவது, உண்மையில் தமிழீழ விடுதலை புலிகளின் வழிவந்தவர்களாக இருப்பின், 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் உரைக்கு, எப்பொழுது எங்கு என்ன வடிவம் கொடுக்க முனைந்தார்கள், முயற்சித்தார்கள் என்பதை மக்களிற்கு கூறவேண்டும்.
இந்தியா விடயத்தில், இவர்களிற்கும் சுமந்திரனிற்குமிடையில் பாரிய ஒற்றுமையுள்ளது. வழக்கறிஞராக கருதப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எந்தனை தமிழ் கைதிகளிற்காக இன்று வரை வழக்குகளை வாதாடியுள்ளார் என்பதையும் இவர் மக்களிற்கு கூறவேண்டும்.
ஐ.நா, சர்வதேச சமுதாயம் போன்றவை பொறுப்பு கூறலில் ஓன்றும் செய்யாது என்ற கொள்கையில் வாழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது குழுவினரும், ஐ.நா.மனித உரிமை சபையில் ஒழுங்காக கலந்து கொள்வதன் கபட நோக்கம் என்ன? இன்றுவரையில், இவர்கள் என்றாவது ஓர் ஒழுங்கான ஐ.நா.வின் முக்கிய புள்ளிகளையோ, ராஜதந்திரிகளையோ சந்திந்தது உரையாடியதுண்டா?
தமிழீழ மக்களை போன்றோ, அல்லது இன்னும் மோசமான நிலையில் உள்ள அமைப்புகளுடன், பெரும் நிதியை விரயம் செய்து சந்திப்புக்களை நடத்துவதன் மூலம், தமிழீழ விடுதலை போராட்டம் மேலும் பலவீனப்படுத்துகிறோம் என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லையானால், இவர்கள் அரசியல் செய்வதற்கே தகுதியற்றவர்கள். இவர்களிற்கு சிஞ்ச போடும் சில விளக்கமற்ற புலன் பெயர் தமிழர்களிற்காக கவலைப்பட வேண்டியுள்ளது.
தமிழீழ மக்களும் – ஐரோப்பிய நாடுகளும் ….
மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் முதல், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் பிறியன் செனிவரத்தின போன்று பல முக்கிய புள்ளிகளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா.மனித உரிமை சபை, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுட்டனும், வேறுபல சர்வதேச சந்திப்புக்கள், கூட்டங்களை மிக நீண்டகாலமாக, விசேடமாக விடுதலை போராட்ட காலத்தில், அதாவது ஈழத்தமிழர்களது விடுதலை போராட்டத்தை ‘பயங்கரவாதமென’ சிங்கள அரசுகளினால் சித்தரிக்கப்பட்ட காலத்தில், தயக்கமின்றி முன்னின்று ஒழுங்கு செய்து நடத்திய ஒரே ஒரு தமிழ் அமைப்பானால், அது பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் தான்.
இச் செயற்பாடுகள் யாவும் போராட்டத்தின் முன்னோடிகளின் பாராட்டை பெற்றவை. இதை சிலர் தெரிந்தும் தெரியாதவர்கள் போல், விடயங்கள் புரியாதவர்களிற்கு ஐ.நா.வில் அரட்டை அரங்கம் நடத்துவது மிக வேடிக்கையானது. சிலர், ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து நடத்தும் அரட்டை அரங்கம் பற்றி பிறிதொரு கட்டுரையில் எழுதவுள்ளேன்.
எமது ஐ.நா. செயற்பாடு என்பது, 2009ம் மே மாதத்தின் பின்னரும், 2012ம் ஆண்டின் பின்னரும் ஐ.நா.விற்கு வருகை தந்துள்ள மசவாசுகள் நிறைந்த சில்லறை அமைப்புக்களுடன் போட்டி போடுவது அல்ல. எமக்கென சில வேலைத் திட்டங்கள் உண்டு, இதை எந்த நாட்டிலிருந்தும் எந்த அமைப்பினாலும் சாதிக்க முடியாது.
‘விரலிற்கு ஏற்ற வீக்கம்’ வேண்டும் என்பது போல், எமது நிதியில் எம்மால் முடிந்த எமது வேலைத் திட்டங்களை தொடர்கிறோம். இதற்காக நாம் மற்றவர்கள் போல் பொய்யும் புரட்டும் செய்து, மற்றைய சர்வதேச அமைப்புக்கள் சாதிப்பதை, தமது வெற்றியாக விடயம் விளங்காதவர்களிற்கு காட்டுபவர்கள் அல்ல.
விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு துணை போன சிலர், இன்று சிங்கள பௌத்த அரசின் மசவாசன வேலைத் திட்டத்தில் கீழ், ஐ.நா.மனித உரிமை சபையில் வேலை செய்வதை, சிலர் காலம் கடந்தே உணர்கிறார்கள். ஐ.நா.வில் தமிழ் தேசியத்தை விலைபேசி விற்கும் அமைப்புகளும், அவர்களுடன் அரட்டை அரங்கம் நடத்துபவர்களும், “மோதிர” கையால் மட்டுமே குட்டு வாங்குபவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மிக அண்மையில், ஐ.நா.வில் நடக்கும் சில கபட நாடகங்களை, சில ஆண்டுகளாக ஐ.நா.வில் நேரத்தை விரயம் செய்த ஓர் பெண்மணி, வெளிப்படையாக கூறியிருந்தார். இவரினால் வெளிப்படையாக கூறாத பல விடயங்கள் இன்னும் பல உள்ளன. அவை கூடிய விரைவில் வெளிவருமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிடமிருந்து அறிகிறோம்.
மற்றவர்களிடம் காலை, மாலை, தினமும் வலிந்து குறை பிடித்து அரசியல் செய்பவர்கள், எமது இனத்தின் ஒற்றுமைக்கு, தாங்கள் செய்த, செய்யும் தீங்குகளை முதலில் எண்ணிப்பார்த்து, தமிழீழ அரசியலை தொடர்ந்தும் நாசம் செய்ய வேண்டுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
வடக்கு- கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் மண் ஆசையின் அடிப்படையில் தமது மண்ணை நேசிப்பவர்கள், வணங்குபவர்கள்.
ஆகையால் இவர்கள் ஐந்து வருடத்தில் ஒரு தடவை கிடைக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்ற அரிய சந்தர்ப்பந்தில் – நாடாளுமன்றம் சென்று துணிவுடன் தமிழீழ மக்களின் நிலைமைகளை உரையாற்ற கூடியவர்களையும், தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்களையும், ராஜதந்திரம் நன்கு தெரிந்தவர்களையும், இந்தியாவின் அனுசரணையுடன், சர்வதேசத்தின் உதவியுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் ஒர் அரசியல் தீர்வையும், இதே ரீதியில் எமக்கு இழைக்கப்பட்டுள்ளஇன அழிப்பு, போர்குற்றங்களிற்குசர்வதேச ரீதியில் ஓர் தீர்வை அணுக கூடியவர்களை, தமிழ் உணர்வாளர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
சிங்கள பௌத்த அரசுகளின் நீண்ட கால கொள்கையான – பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை கூடிய விரைவில் நிறைவாக செய்வதற்கு வழி வகுக்கும் யாருக்கும், உங்கள் வாக்குகளை அளிக்காது, தமிழ் தேசித்தை காப்பாற்றபட கூடியவர்களிற்கு, தமிழீழ மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சுருக்கமாக கூறுவதனால் – செல்லப்பிள்ளை அரசியலிற்கும், பேய்காட்டு அரசியலிற்கும் உணர்ச்சி முதிர்ச்சி கடமையுணர்வுள்ள தமிழ் தேசிய பற்றுள்ள எந்த தமிழீழ பிரஜையும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தேர்தலில் களம் இறங்கியுள்ளோர் புரிந்து கொள்ள வேண்டும்.
-எஸ்.வி. கிருபாகரன்