உலகம் பல போராளிகளைக் கண்டிருக்கிறது. அவர்கள் அனைவருமே தம் இனம், மொழி, நாடு என்று ஏதாவதொரு வகையில் தம் நலத்துக்காகப் போராடியவர்கள். ஆனால், சுயநலம் எதுவுமில்லாமல் மனித குல அடக்குமுறைக்கு எதிராக ஒருவன் நாடு கடந்து, அவற்றின் எல்லைகளைக் கடந்து சென்று போய் மக்களுக்காகப் போராடி உயிர்விட்டான் என்றால் அவன் ‘சே’ ஒருவன் மட்டுமே.
உலக வரலாற்றின் மகத்தான பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன், ‘சே குவேரா’. அவரது 92 – வது பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சே குவேராவின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி டுவிட்டரிலும் டிரெண்டாகி வருகிறது.
‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’ என்று அமெரிக்க மண்ணிலேயே அமெரிக்காவுக்கு எதிராக சி.பி.என் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தவர் சே. தான் ஒரு போராளியாக இருந்த சூழலிலும் சரி கியூபாவில் அமைச்சராக இருந்தபோதும் சரி கடைசி வரை மனித குல அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டே இருந்தார்.
கியூபாவைப் போன்றே மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும் என்று நினைத்த சே பிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது பதவிகள் மற்றும் கியூபா நாட்டுக் குடியுரிமை அனைத்தையும் துறந்து ரகசியமாக வெளியேறினார். உருகுவே, பிரேசில், பராகுவே அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியில் பொலிவியாவுக்குள் நுழைந்தார். அங்கு நிரம்பிக்கிடந்த ஏழ்மை, சமூக மற்றும் பொருளாதார நிலைமை மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பினார். அது மட்டுமல்லாமல் பொலிவியா தனது எல்லையை ஐந்து நாடுகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறது. பொலிவியாவில் மக்கள் புரட்சியை ஏற்படுத்திவிட்டால் மற்ற நாடுகளுக்கும் பரவச்செய்து விடலாம் என்று தீர்க்கமாக நம்பினார்.
போராளிகளைத் திரட்டி பொலிவியக் காடுகளில் மறைந்திருந்து, பதுங்கி கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டார். பொலிவியா காடுகளின் மாறுபட்ட தட்ப வெப்ப நிலை, நண்பர்களின் உதவி கிடைக்காமை, ஆஸ்துமா பிரச்னை ஆகிய காரணங்களால் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ சேவைத் தேடி காடுகளுக்குள் நுழைந்தது.
1967 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ம் நாள் யூரோ கணவாயைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசாகத் தந்தார். அந்தப் பரிதாபம் தான் சே உயிரை விடக் காரணமாக அமைந்தது. அந்தப் பெண் சேவின் இருப்பிடத்தை ராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். உடனே ராணுவ வீரர்கள் சே மற்றும் அவருடன் இருந்த கொரில்லா வீரர்களைச் சூழ்ந்துகொண்டு சுடத்தொடங்கினர். குண்டடிபட்டு நிலையில் அவர்களிடம் சிக்கிக்கொண்டார் சே. அதன்பிறகு சே குவேரா மரியோ ஜேமி எனும் பொலிவிய ராணுவ சர்ஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துயர சம்பவம் நடந்தது அக்டோபர் மாதம் 9 – ம் தேதி.
‘மண்டியிட்டு உயிர்வாழ்வதை விடவும் நின்றுகொண்டே சாவது எவ்வளவோ மேல்’ என்று அடிக்கடி சொல்வார் சே. அதன்படியே சேவின் இறப்பும் நிகழ்ந்தது. ஒன்பது முறை சுடப்பட்ட தோட்டாக்களில் சில அவரது இதயத்தில் பாய உயிர் பிரிந்தது. இனம், மொழி, தேசமா என்று எல்லைகளைக் கடந்து மக்களுக்காகப் போரிட்ட வீரனின் உயிர் உலகைவிட்டுப் பிரிந்தது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சே குவேரா!