இஸ்ரேலியர்கள் தமது நாட்டின் எல்லை அயல் நாடுகளுக்குள் இருந்தால்தான் இஸ்ரேல் என்ற நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற கொள்கையுடையவர்கள். எந்த ஓர் அயல் நாட்டிலாவது இஸ்ரேலிய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்கள் செய்வது வழமையானது.

விமானங்களால் செய்ய முடியாமல் போகுமிடத்து அந்தப் பணிகளை இஸ்ரேலிய உளவுத்துறை செய்து முடிக்கும். இப்போது அது ஆக்கிரமித்து வைத்திருக்கும் பலஸ்த்தீனிய நிலங்களை தமது நாட்டுடன் இணைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

கிழக்கு ஜெருசேலம் உட்பட இஸ்ரேல் ஆக்கிரமித்த பலஸ்த்தீன நிலம் தொடர்பாக 23-டிசம்பர் 2016 ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் 2334 நிறைவேற்றியது. வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை. ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய 14 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

தீர்மானம் இஸ்ரேல் பலஸ்த்தீனியர்களின் வாழ்விடமான மேற்குக்கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை பன்னாட்டு சட்டங்களுக்கும் ஜெனீவா உடன்படிக்கை-4 இற்கும் விரோதமானது என்றது. ஜெனீவா உடன்படிக்கை-4 இன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தனது நாட்டு மக்களைக் குடியேற்றக்கூடாது.

ஐக்கிய நாடுகள் சபையின் எந்த ஒரு தீர்மானத்தையும் இஸ்ரேல் ஏற்றுநடப்பதில்லை.  தீர்மானம்-2334இன் பின்னர் இஸ்ரேல் மேற்குகரையில் யூதக் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது.

கானல் நீராகிய ஈரரசுத் தீர்வு!

1967-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்கா பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்டளவில் சொல்லி வருகின்றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச்சூளுரைத்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக்கொண்டார்கள். இஸ்ரேலும் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக்கொள்வதாககாட்டிக்கொண்டது. 2000-ம் ஆண்டு இஸ்ரேல் பல ஈர் அரசு முன்மொழிவுகளை முன்வைத்தது.

பெரும் பகுதி மேற்குக்கரையையும் முழு காஸாநிலப்பரப்பையும் விட்டுக்கொடுப்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தை பலஸ்த்தீனியர்களின் கட்டுப்பாட்டில் விடுவதாகவும் இஸ்ரேல் முன் மொழிந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர்  யசர்அரபாத் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பலஸ்த்தீனத்தில் ஈர் அரசுகளைக் கொண்ட ஒரு தீர்வு வேண்டும் என்ற முன் மொழிபு அரபு சமாதான முனைப்பு (The Arab Peace Initiative) என்னும் பெயரில் 2002-ம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதில் இஸ்ரேல்1967-ம் ஆண்டு கைப்பற்றிய எல்லா நிலப்பரப்புக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் எனப்பட்டது. அதை இஸ்ரேல் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் ஈர் அரசுக் கொள்கையை ஏற்றுக்கொண்டார். அரபு வசந்தத்தின் பின்னர் ஈர் அரசுத் தீர்வு என்பது காணாமல் போய்விட்டது.

இழுத்தடித்துக்கொடுத்தஅதிகாரமற்றஅதிகாரசபை

1978-ம் ஆண்டு எகிப்த்தும் இஸ்ரேலும் அமெரிக்காவில் செய்து கொண்ட காம்ப்டேவிட் உடன்படிக்கையின் படி பலஸ்த்தீனியர்களுக்கு என ஒரு தன்னாட்சி அதிகார சபை அமைப்பதாக ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்பு 1993இல் மீண்டும் நோர்வேயில் செய்து கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையிலும் அந்த அதிகாரசபை அமைப்பதாக ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்பு 1994இல் அது அமைக்கப்பட்டது. அது அதிகாரசபை என அழைக்கப்பட்டாலும் அது ஓர் அதிகாரமற்ற அதிகார சபையாகவே இருக்கின்றது.

டொனால்ட் டிரம்பின் திட்டமும் அவசரப்படும் இஸ்ரேலும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தன் பங்கிற்கு என 2020 ஜனவரியில் 181 பக்கசமாதான திட்டத்தை முன்வைத்தார். அதன்படி ஜெருசேலம் இஸ்ரேல் தலைநகர், பலஸ்த்தீனியர்களின் நிலங்களில் யூத குடியேற்றங்கள் இஸ்ரேலின் பகுதிகளாகும். அந்த நிலங்களுக்கு பதிலாக வேறு நிலம் (பாலைவனம்) பலஸ்த்தீனியர்களுக்கு வழங்கப்படும், இஸ்ரேல்ஆக்கிரமித்தஜோர்தான் பள்ளத்தாக்கு இஸ்ரேலின்பகுதியாக்கப்படும், பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசு ஹமாஸ் ஒழிக்கப்பட்டால் உருவாக்கப்படும். டிரம்பின் திட்டத்தை பலஸ்த்தீனியர்கள் முற்றாக நிராகரித்தனர். டொனால் ட்டிரம்ப் ஆட்சியில் இருக்கும் போதே மேற்குக்கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களில் முப்பது விழுக்காட்டை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துவிட அவசரம் காட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையால் சட்ட விரோதக்குடியேற்றம் என முடிவு செய்யப்பட்ட நிலப்பரப்பை இஸ்ரேல் தன்னுடன் இணைக்கப்போகின்றது. 2020 ஜூலை முதலாம் திகதி பலஸ்த்தீனியர் நிலங்களை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் கலந்துரையாடலை இஸ்ரேலிய அமைச்சரவை ஆரம்பித்துள்ளது.

2020 ஜூன் 22-ம் திகதி ஜெரிக்கோ நகரில் பலஸ்த்தீனியர்கள் தமது நிலம் இஸ்ரேல் மயவாதை எதிர்த்து செய்த ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா, இரசியா, ஜோர்டான், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசுறவியலாளர்கள்கலந்து கொண்டார்கள். மேற்குக் கரையின் எந்தப்பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என இன்னும் தெளிவாகத்தெரியவில்லை. 30% மேற்குக்கரை நிலப்பரப்பை இணைப்பதாக நெத்தன்யாஹூ உறுதி பூண்டுள்ளதாகத் தெரிகின்றது.

ஆதரவுகளும் எதிர்ப்பும்

பெஞ்சமின் நெத்தனயாஹூவின் கூட்டணி ஆட்சியில் உள்ள வலதுசாரிக்கட்சிகள் இணைப்பை ஆதரிக்கின்றன. இஸ்ரேலிய மக்களிடை ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகின்றது. இஸ்ரேலிய மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் இருக்கின்றது. டொனால் ட்டிரம்பின் ஆட்சியில் உள்ள சிலரும் ஆதரிக்கின்றனர். இணைப்பு தொடர்பாக டிரம்ப் இன்னும் முடிவு செய்யவில்லை எனச் சொல்லபடுகின்றது.

இஸ்ரேலியப் படைத்தளபதியும் இஸ்ரேலியப்படைத் துறையின் உளவுப்பிரிவின் தலைவரும் பலஸ்த்தீனிய நிலங்களை இஸ்ரேலுடன் இணைப்பதை விரும்பவில்லை. ஆனால் “உலகப்புகழ்” பெற்ற இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் இணைப்பால் பல பிரச்சனைகள் வரும் என்பது மிகைப்படுத்தப்பட்டது என்கின்றது. மொசாட்டின் தலைவர் யொஸ்ஸிகொகென்பலஅரபு நாட்டுத்தலைவர்களை இரகசியமாகச் சந்தித்து இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இணைப்பால் இஸ்ரேலும் அதன் அரபு அயல் நாடுகளுடன் உள்ள(கள்ள) உறவு பாதிக்கப்படமாட்டாது என்கின்றது மொசாட். இணைந்த இஸ்ரேலில் உள்ள பலஸ்த்தீனியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தென்னாபிரிக்காவில் இருந்த நிறவெறி அரசைப்போல இஸ்ரேல் உலகத்தால் பார்க்கப்படும் என இஸ்ரேலில் உள்ள தாராண்மை வாதிகள் கரிசனை கொண்டுள்ளனர்.

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலியப் பாராளமன்றத்தில் 25 உறுப்பினர்கள் இணைப்புக்கு எதிரான அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

அரபு நாடுகளின் இரட்டை வேடம்

ஜோர்டான் அரசர் இஸ்ரேல் பலஸ்த்தீனியர்கள் நிலத்தை தன்னுடன் இனைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றார். ஆனால் அந்த எதிர்ப்பைதான் அதை முன்னெடுப்பேன் என்று சொல்லவில்லை. அவர் நெத்தன்யா ஹூவுடன் தொலைபேசியில் உரையாட மறுத்ததுடன் அவருடன் சந்திப்பதற்கு திகதி கொடுக்கவும் மறுத்தார். பல பலஸ்த்தீனியர்கள் வாழும் ஜோர்தானின் மக்களிடையே இணைப்புக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

ஐக்கிய அமீரக அரசர் இன்னும் இணைப்பு தொடர்பாக முடிவெடுக்கவில்லை. எகிப்த்துகள் மௌனம்சாதிக்கின்றது. சவுதி அரேபியாவும் ஐக்கிய அமீரகமும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து இரகசியமாகச் செயற்படுகின்றன. யூதரான டிரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜெரார்ட்குஷ்னர் இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுடனும் இணைப்பு தொடர்பாக இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட்ஃபிரீட்மன் (டிரம்பின் முன்னாள் சட்டவாளர்) இணைப்பை தீவிரமாக ஆதரிக்கின்றார்.

நற்செய்திநல்லசெய்தியல்ல

அமெரிக்கா வில்வாழும் நற்செய்தி சார்ந்த கிருத்தவர்களில் (The evangelical Christians) பெரும்பான்மையினர் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள். ஆனால் அவர்கள் இஸ்ரேலின் இணைப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதனால் இணைப்புடிரம்பின் தேர்தல் வெற்றியை பெரிதளவில் பாதிக்கமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது. இணைப்பிற்கு எதிராக கடும் எதிர்ப்புக்கிளம்பினால் அது டிரம்பின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என ஒரு நற்செய்திசார் பாதிரியார் டிரம்ப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதுவர் இணைப்பு ஈர்அரசுத் தீர்விற்கு வழிவகுக்கும் என்கின்றார்.

பலஸ்த்தீனியர்களின் கண்ணீருக்கு இப்போதைக்கு முடிவில்லை.

– வேல்தர்மா –