பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென சமூக வலைத்தளத்தில் உலாவரும் செய்தியில் உண்மையில்லை என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டார் என சற்று முன்னர் தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து பாலசுப்ரமணியத்தின் மகனான சரண், காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த காணொளியில் சரண் மேலும் கூறியுள்ளதாவது, “வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை பற்றி உங்களிடம் கூறுவேன்.
ஆனால், இன்று காலை வேறு வழியின்று ஒரு பதிவு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பாவின் உடல்நிலை பற்றி என்னிடம் மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து தகவல் கூறப்படும். அதனைத்தான் நான் பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று காலை முதல் அப்பாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது, அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது.
மருத்துவ ரீதியாக செயற்கை சுவாசம், எக்மோ என அவர் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன்தான் இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நிலையாக உள்ளார்.
இந்த நிலைத்தன்மை அவர் விரைவில் இதிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறோம்.
தயவுசெய்து பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். மருத்துவர்களுடன் பேசிவிட்டு இன்று மாலை நான் பதிவிடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அமைந்தகரை M.G.M மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென அவர்களது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.