பெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி வேறு சிறுவர்கள் இல்லாமல், வயதில் பெரியவர்களுடன் மட்டும் பழகுவதால் தனது இளமைக்குரிய சந்தோசங்களை இழக்கிறானே? என்று கவலைப்பட்டதுண்டு. மார்கழி மாதம் கதிர்கள் முற்றி நெற்பயிர்கள் தலை சாய்க்கத் தொடங்கின.
முதலில் முத்தர் தனது மகன் கணபதிப்பிள்ளையையும் மனைவியையும் அழைத்து வந்தார். இப்போது அவனுக்கு பள்ளிக்கூடத்தில் விடுமுறை. அவன் வந்ததிலிருந்து “அண்ணா”, “அண்ணா” என்று கணபதியுடனேயே திரிந்தான். தைப்பொங்கல் முடிய அவனை கூட்டிச் சென்று, அவனது பள்ளிக்கூடம் விடும் பொறுப்பை மனைவியின் பெற்றோரிடம் விடுவதற்கு ஒழுங்கு செய்து கொண்டு வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து தான் காணி வெட்டி, வீடு கட்டிய பின், கல்யாணம் செய்து அந்த வீட்டிற்கு தனது மனைவியை கூட்டி வந்து வாழ்வது என்று முடிவு செய்திருந்த இளைஞன் தனது மனைவியை அழைத்து வந்தான். அவன் கல்யாணம் செய்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. இப்போது தான் அவனது எண்ணம் நிறைவேறியது.
அடுத்ததாக தம்பையரின் ஒன்று விட்ட தமையன்மார் இருவரும், ஒன்று விட்ட தம்பியார் ஒருவரும் அவ்வாறு அழைத்து வந்தனர். ஒரு தமயனின் ஒரே மகள் பொன்னாத்தை. பொன்னாத்தை, கணபதியையும் விட மூன்று வயது மூத்தவர், கணபதிக்கு ‘அக்கா’ முறை. நல்ல சூடிகையான பெண்.
இன்னொரு தமையனின் மகன் வீரகத்தி, கணபதியையும் விட மூத்தவர். அதனால் ‘அண்ணன் ‘ முறை. வீரகத்தி மட்டும் தான் தகப்பனுடன் வந்திருந்தான். அவனது தாயார் சொந்த காரணத்தால் அவனுடன் வரமுடியவில்லை. தம்பையரின் தம்பியாரின் மகன் செல்லையா கணபதிக்கு ‘தம்பி’ முறை.
கணபதி முதலில் பெரிய பரந்தனுக்கு வந்ததாலும், வயதில் மூத்தவர்களுடன் பழகியதால் ஏற்பட்ட பெரிய மனித தோரணையாலும், இயல்பாகவே தம்பையரிடமிருந்து வந்த தலைமை தாங்கும் பண்பினாலும் வந்த மூவருக்கும் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் மாறினான். இவர்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். மாலை நேரத்தில் அவர்களுடன் தட்டு மறித்தல், ஒழித்து பிடித்தல் முதலிய விளையாட்டுக்களை விளையாடினான்.
வேலை நேரத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவி செய்வதை மறக்கவில்லை. கணபதியைப் பார்த்து அவர்களும் தமது வீட்டிலும் வயலிலும் பெற்றோருக்கு உதவுவதில் ஊக்கம் காட்டினர்.
கணபதியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆறுமுகத்தார் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இளங்கன்று பயம் அறியாது. ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடும் என்று பயந்தார். எனவே கணபதி, பொன்னாத்தை, வீரகத்தி, செல்லையா நால்வரையும் அழைத்து “பிள்ளைகளே, வரம்புகளில் பாம்புகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். காட்டிற்குள் பெரியவர்கள் துணையில்லாமல் போக கூடாது. தனியன் யானை, தனியன் பன்றி மிகவும் ஆபத்தானவை. அவை தமது கூட்டத்தினால் விரட்டப்பட்டு தனியாக வாழ்பவை. காண்பவர் யாவரையும் தாக்கும் இயல்பு உள்ளவை. சில வேளைகளில் சிறுத்தைகளும் வரும். தற்செயலாக நீங்கள் காட்டிற்குள் தனியாக அகப்பட்டுவிட்டால் பயப்படக் கூடாது. பற்றைகள் இல்லாத வெளியில் உள்ள ஒரு சிறிய மரத்தில் ஏறி எல்லா திசைகளிலும் பாருங்கள். குறிப்பம் புளி மரம் தெரியும். அதை நோக்கி நடந்து வந்தால் கிராமத்திற்கு வந்து விடலாம்.” என்று கூறினார். ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்று பார்த்த முத்தர் மகனைப் பார்த்து “சின்னக்கணபதி, நீயும் கவனமாக இருக்க வேண்டும் ராசா” என்றார்.
முத்தர் தனது நண்பரிடம் “ஆறுமுகம், எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் எப்போது வரப் போகிறது? அப்படி ஒரு பள்ளி வந்தால் எவ்வளவு நல்லது. என்னைப் போல இன்னும் சிலருக்கு பெண்சாதிகளை கூட்டி வருவதற்கு விருப்பம். பிள்ளைகளின் படிப்பை நினைத்து தயங்குகிறார்கள்.” என்றார். தம்பையர் இருந்த போது கலியாணம் பேசி முற்றானவர், இப்போது இரண்டு சிறிய பிள்ளைகளுக்கு தகப்பன். அவரால் மனைவியை அழைத்து வர முடியவில்லை.
பெண்கள் எல்லாரும் காலை தமது குடும்ப வேலைகளைச் செய்து, மத்தியான சாப்பாடு சமைத்து எல்லோரும் சாப்பிட்டு முடிய, விசாலாட்சியிடம் வந்து விடுவார்கள். விசாலாட்சி பெட்டி, நீத்துப் பெட்டி, கடகம், பாய் முதலியவற்றை பனை ஓலையில் இழைக்க பழக்குவார்.
அவர்களில் சிலருக்கும் சில பன்ன வேலைகள் தெரிந்திருந்தது. பொழுது பயனான முறையில் போனதோடு, தமது வீட்டிற்கு தேவையான பொருட்களையும் செய்து எடுத்துச் சென்றனர்.
கணபதி, வீரகத்தியுடனும் செல்லையாவுடனும் நெற்கதிர்களை சாப்பிட பகலில் வரும் காடை, கௌதாரி, புறா, மயில் முதலியவற்றை விரட்டச் செல்வான். சின்னக்கணபதியும் அவர்களின் பின்னால் ஓடுவான். ஓடி ஓடி எல்லோர் காணிகளிலும் பறவைகளை மணி அடித்தும், சத்தம் போட்டும் கலைப்பார்கள்.
போகும் இடங்களில் பெண்கள் இவர்களைக் கூப்பிட்டு மோர் அல்லது எலுமிச்சம் கரைசல், புழுக்கொடியல் முதலியவற்றை கொடுப்பார்கள். சிறுவர்கள் ஓட, அவர்களுக்குப் பின்னால் அவர்களது நாய்களும் குரைத்தபடி ஓடும்.
சிறுவர்களின் மகிழ்ச்சி பெரியவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும். இவர்களை அவதானித்த முத்தர் “இப்போது தான் எமது கிராமத்துக்கு உயிர் வந்திருக்கிறது. தம்பையர் விரும்பிய விடயங்கள் எல்லாம் நடக்கின்றன” என்று ஆறுமுகத்தாரிடம் கூறி மகிழ்வார்.
பெண்கள் எந்த தேவைக்கும் விசாலாட்சியிடம் வருவார்கள். தாம் ஆற்றுத் தண்ணீரில் குளித்தல் பிரச்சினை இல்லையென்றும், ஆனால் எவ்வளவு தான் தோய்த்தாலும் ஆடைகளில் ஒரு மங்கல் நிறம் நிரந்தரமாகவே வந்து விடுவதாகவும் சொன்னார்கள். ஊரில் என்றால் இடைக்கிடை ‘சலவை தொழிலாளி’ யிடம் கொடுத்தால் அவர் நல்ல வெள்ளையாக வெளுத்து வருவாரென்றும் கூறினார்கள். விசாலாட்சி இந்த பிரச்சினையை ஆறுமுகத்தாரிடம் கலந்து பேசினாள். “பெரிய பரந்தனுக்கென்று ஒரு சலவைக் தொழிலாளி குடும்பத்தை அழைத்து வந்தால் என்ன?” என்று கேட்டாள்.
ஆறுமுகத்தாரும் “கொல்லனாறு ஓரிடத்தில் வளைந்து பாய்கிறது. அந்த இடத்தில் அது ஆழமாகவும் அகலமாகவும் உள்ளது. அவ்விடத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அதன் தெற்கு பக்கத்தில் குஞ்சுப் பரந்தன் பகுதியில் ஒரு பற்றைக் காடு இருக்கிறது. அந்த காட்டை வெட்டி அதில் இரண்டு கொட்டில்கள் போட்டுவிட்டால் வரும் சலவைத்தொழிலாளி ஒன்றில் தங்கி, மற்றதில் உடுப்புகளை தோய்க்கலாம். அவர் காணியைத் துப்பரவாக்கி வயலும் செய்யலாம், ஆற்றில் உடுப்புகளையும் தோய்க்கலாம். காணி அவருக்கே சொந்தமாகி விடும்.
குஞ்சுப் பரந்தன், செருக்கன் மக்களுக்கும் அந்த இடம் கிட்ட உள்ளது. அவர்களும் அவரிடம் வருவார்கள். எதற்கும் நான் முத்தரிடமும் மற்றவர்களிடமும் கதைத்துப் பார்க்கிறேன்.” என்றார்.
முத்தருக்கும் மற்றவர்களுக்கும் இந்த யோசனை நன்கு பிடித்து விட்டது. முத்தருக்கும் மகனை கூட்டிச் சென்று மாமனார் வீட்டில் படிக்க விடும் வேலை இருந்தது. அது போல இன்னும் இருவருக்கும் ஊரில் வேலை இருந்தது.
முத்தர் “நாங்கள் போய் எங்கள் அலுவல் முடிய, மூன்று பேரும் கல்வயலுக்கு போய் கதைத்து வருகிறோம். முடிந்தால் ஒருவரை அழைத்து வருகிறோம்” என்று சொன்னார். இளைஞர் ஒருவர், கள்ளுக் குடிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர் “என்ன முத்தர் அம்மான், எல்லோரையும் கூட்டி வருகிறீர்கள். ஒரு சீவல் தொழிலாளியையும் ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டார்.
அவருக்கு ஆதரவாக பலர் கதைத்தனர். எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர். அந்த இளைஞரின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முத்தர் முன்பு கட்டுப்பாடாக கள்ளு குடித்தவர் தான். இப்போது கோவிலில் பூசை செய்வதால் கள்ளு குடிப்பதையும் மச்சம், மாமிசம் சாப்பிடுவதையும் படிப்படியாக குறைத்து விட்டார். முத்தர் “சலவைத் தொழிலாளிக்கும், சீவல் தொழிலாளிக்கும் காணியை வெட்டி துப்பரவாக்குங்கள். நாங்கள் எப்படியும் யாரையாவது அழைத்து வருவோம்” என்றார்.
முத்தர் ஊருக்கு சென்று முதலில் தன் மகனை மாமனார் வீட்டில் விட்டார். பின் நண்பர்களுடன் மட்டுவிலுக்கும் வரணிக்கும் சென்றார். ஒரு சலவைத் தொழிலாளியையும் சீவல் தொழிலாளியையும் கண்டு கதைத்தார். முத்தர் அவர்களிடம் “உங்களுக்கு நாங்கள் குடியிருக்கப் பொருத்தமான காணிகள் பார்த்து வைத்திருக்கிறோம். காணிகளை வெட்டுவதற்கும் கொட்டில்களைப் போடுவதற்கும் உதவி செய்வோம். காணி துப்பரவாக்க தொடங்கி விட்டார்கள். உங்களுக்கு கூலியாக போகத்திற்கு போகம் நெல் தருவோம். நீங்களும் காணியைத் திருத்தி வயல் செய்யலாம்” என்று கூறினார். அவர்களும் சம்மதித்து முத்தர் திரும்ப போகும் போது, உடன் வருவதாக கூறினார்கள்.
அவர்கள் கூறியபடியே முத்தர் புறப்படும் நாளில் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முதலில் வண்டில் பயணமும், பின்பு தோணி பயணமும், சுட்டதீவு துறையிலிருந்து மீண்டும் வண்டில் பயணமும் முன் எப்போதும் செய்யாத பயணங்களாக அமைந்தது. அவர்கள் பெரிய பரந்தனுக்கு போய் சேர்ந்த போது அந்த ஊர் மக்கள் எல்லோரும் கூடி நின்று அன்புடன் வரவேற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/