புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் புகலிடச் சூழலில் தமிழர்கள் முகங்கொடுக்கவேண்டிய முக்கியமான விடையங்களை தொகுத்திருந்தோம் | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 3)

புகலிடச் சூழலில் தமிழர்கள் முகங்கொடுக்கவேண்டிய முக்கியமான விடையங்களை தொகுத்திருந்தோம் | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 3)

7 minutes read

 

உங்களுடைய தமிழியல் வெளியீடுகள் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லையே?

தமிழ், தமிழர் சார்ந்த நூல்களை வெளியிடவென உருவாக்கப்பட்டதுதான் ‘தமிழியல்”. இந்தப் பெயரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த ரகுபதிதான் பிரேரித்ததாக நினைவு. அவரது கலாநிதிப்பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை, யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் தமிழர்தான் என்று நிறுவியதால் எங்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக உடனே அதைப் புத்தகமாக வெளியிடவேண்டும் எனத் தோன்றியது. அதனைத் தமிழகத்தில் அச்சிடுவதற்கு விரும்பினேன். ரகுபதிக்கு இதில் அதிகம் ஆர்வம் இருக்கவில்லை. வற்புறுத்தியதில் சம்மதித்தார். தமிழகம் சென்றுவர பயணச்செலவு வேறு வேண்டும் என்ற நிலையில் சிவரஞ்சித் வழியாக விடுதலைப்புலிகளிடம் வேண்டுகோள் வைத்ததில் படகில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நானும், ரகுபதியும் வடமராட்சி கடற்பகுதியொன்றிலிருந்து வேதாரண்யம் சென்றோம். இது நிகழ்ந்தது 1985இல். சென்னையில்  ‘க்ரியா” ராமகிருஷ்ணனும் நித்தியானந்தனும், ரகுபதியுடன் இணைந்து நூற்பிரதியை செப்பனிட்டனர். தமிழியல் வெளியீடாக வந்திருக்க வேண்டிய நூல் இது.  எல்லாம்  தயாரான பின்னர் ரகுபதி தனது சொந்த வெளியீடாகக் கொண்டு வருவது என முடிவு செய்து, பின்னர் தாமதமாக 1987 ஜீலையில் அதை வெளியிட்டார்.

ரகுபதியின் நூலை அச்சிடத் திட்டமிட்டபோதே ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த நா. சபாரத்தினம் அவர்கள் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து வெளியிடுவதெனவும் தீர்மானித்தோம். அவை போராட்டச் சூழலில் அரசியல் விமர்சனமாக அமைந்திருந்தன. 1984ஆம் ஆண்டு வந்த தலையங்கங்களில் இருந்து தேவையானதை மயிலங்கூடலூர் நடராசனும், ரகுபதியும் தெரிவு செய்திருந்தனர். அவற்றையும் தமிழகத்துக்கு எடுத்துச் சென்றிருந்தோம். ‘ஊரடங்கு வாழ்வு” என்ற பெயரில் தமிழியல் வெளியீட்டின் முதல் நூலாக அது 1985 இல் சென்னையில் வெளியாகியது.

தமிழியல் வெளியீடாக 91 வரையிலும் தமிழகத்தில் ஏழு நூல்களையும் ஈழத்தில் மூன்று நூல்களையும் வெளியிட்டேன் . இவற்றில் ‘ஊரடங்கு வாழ்வு”, ‘மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுப்பு, சண்முகம் சிவலிங்கத்தின் ‘நீர்வளையங்கள்”,

மு. பொன்னம்பலத்தின் ‘ஆத்மார்த்தமும் யதார்த்தமும்”, கட்டுரைத் தொகுப்பு, ஓவியர் மார்க்கை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட ‘தேடலும் படைப்புலகமும்” மனதுக்கு நிறைவைத் தருகின்றவையாக அமைந்தன. இலங்கையின் ‘தோட்டப்பள்ளிக் கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்” என்ற எனது மனைவியின் எம். ஏ. பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையையும் அவரின்; நினைவாக நூலாக்கினேன். இந்த வகையிலும், கலாநிதி ரகுபதியின் ஆய்வுக்கட்டுரையை நூலாக்க முயன்றவன் என்ற அடிப்படையிலும் இதனைச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக ஆய்வுக்கட்டுரைகள் பட்டப்படிப்பு முடிந்ததும் பல்கலைக்கழக நூலகத்துக்கும் வீட்டில் பரணுக்கும் போய் விடுவது விரும்பத்தக்கதல்ல.  இவற்றைத் தகுதிகண்டு நூலாக்குவது அவசியம். அவற்றுக்கு உதவ நண்பர்களும் நானும் முன்நிற்போம்.

ஈழம், தமிழகம் என்ற எல்லைகளையும் தாண்டி இப்போது புகலிடம் என்ற மூன்றாவது தளத்தில் இயங்கி வருகிறீர்கள். உங்களின் புகலிட இலக்கியச் செயற்பாடுகள் பற்றி இனிச் சொல்லுங்கள்?

1990 பெப்ரவரியில் லண்டன் வந்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகள் குறிப்பான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. பிறகு, ஈழத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் எழுத்தாளர்கள் இங்கு வரும்போது கலை – இலக்கிய நிகழ்ச்சிகளையும், நூல் அறிமுக – விமர்சனக் கூட்டங்களையும் நண்பர்களோடு சேர்ந்து ஒழுங்கு செய்ய ஆரம்பித்தேன். கூடிக் கலைந்தோம் என்றில்லாமல், தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களாகவே இவை அமையும். இந்த வகையிலேதான், – இப்போது ஈழத்தில் இருந்து ஆண்டுக்கு ஓரிரு கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களை வரவழைத்து ஐரோப்பியக் கலைப் பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம். ஐரோப்பியர்களின் – புலம் பெயர்ந்து வாழும்  ஈழத்தமிழர்களின் பண்பாடு, கலை – இலக்கிய முயற்சிகளை நேரடியாகத் தரிசிக்க வைப்பதுதான் இதன் நோக்கம். எங்களின் அழைப்பு இல்லாவிடில் ஒரு போதுமே வரும் வாய்ப்பினைப் பெற மாட்டாதவர்களிலும், இந்த அனுபவங்களை ஈழத்தில் தொற்றவைக்கக் கூடியவர்களிலுமே அக்கறை கொண்டுள்ளோம். இந்த ஏற்பாட்டில் முதல் முதலாக 2001 இல் அ. யேசுராசாவும், சு. வில்வரத்தினமும் இங்கு வந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என்று பயணம் செய்தார்கள். 2002 இல் தவிர்க்க முடியாத காரணங்களால் எவரையும் அழைக்க முடியவில்லை. இந்த ஆண்டு தெளிவத்தை ஜோசப்பைக் கூப்பிட்டிருக்கிறோம். இந்த முயற்சி தனி ஒருவனால் செய்யக் கூடியது அல்ல.

மு. நித்தியானந்தன், மு. புஷ்பராஜன், ஓவியர் க. கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன், ஷபுதுசு|  நா. சபேசன், நாடக நடிகர் சாந்தன் இப்படிப் பலருடைய ஒத்துழைப்பிலேயே சாத்தியமாகுது. தமிழ் தகவல் நடுவம் வரதகுமாருக்கும் இதில் பங்குண்டு.

இலண்டனில் உங்களின் பதிப்பு முயற்சிகள் பற்றியும் கூறுங்கள்?

நியுஹாமில் இருக்கும் தமிழர் நலன் புரிச்சங்கத்தில் 1994 இல் இருந்து 2002 கடைசி வரை வேலை பார்த்தேன். இந்தக் காலப் பகுதியில் நலன் புரிச்சங்கத்தினூடாகச் சிலவற்றைச் செய்ய முடிந்தது. 1996 இல், அதன் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு இலக்கிய மலரினை வெளியிடலாமா என்று கேட்டபோது இயக்குநர் சபை ஒத்துக் கொண்டது. அதன்படி, 1995 ஆம் ஆண்டறிக்கையும் 10 ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும் என முதன் முதலில் ஒரு மலரை வெளியிட்டோம். புகலிடச் சூழலில்  தமிழர்கள் முகங்கொடுக்கவேண்டிய முக்கியமான சில பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளையும், சிறுகதைகள் – கவிதைகளையும் அதில் தொகுத்திருந்தோம். தொடர்ந்து “கிழக்கும் மேற்கும்” , “இன்னுமொரு காலடி”, “யுகம்மாறும்”, “கண்ணில் தெரியுது வானம்”  என்று வரிசையாகத் தொகுதிகள் வெளிவந்தன. ஷக்ரியா வின் தயாரிப்புத் தரமே எங்களின் இலக்காக இருந்தது. க. கிருஷ்ணராஜாவின் ஓவியங்களும், வடிவமைத்த விதமும் தொகுப்புகளுக்குத் தனித்தரத்தைத் தந்தன. இன்னும் சொல்லப்போனால், அவரின் உறக்கமில்லாத உழைப்பை மூலதனமாகக் கொண்டே இந்த நூல்கள் உருவானது என்பதுதான் உண்மை. புகலிடத்தில் வாழும் ஈழத்துப்படைப்பாளிகளின் ஆக்கங்களை மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரது படைப்புகளையும் சேர்த்துக் கொண்டோம். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பியா, வட அமெரிக்காவில் வாழும் படைப்பாளிகளைக் கூடத் தவறவிடவில்லை. இதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வும், பரவலான கவன ஈர்ப்பும் கிடைக்கும் என்பது எண்ணம். ஓரளவுக்கு அது நிறைவேறியும் இருக்கிறது. நலன் புரிச்சங்கத்தின் வேலையில் இருந்து நான் விலகிக் கொண்டதோடு இந்த வரிசையில் தொகுதிகளைக் கொண்டு வருவதும் நின்று போனது. இப்போது, மீண்டும் தமிழியல் சார்பாகச் சில நூல்களை வெளியிடுவதற்கு ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழகத்துப் பதிப்பகங்களும் சமீப காலமாகப் புகலிட இலக்கியங்களை வெளியிடுவதில் கரிசனை காட்டிவருகின்றன. இதனை, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் டொலர்களையும் பவுண்களையும் குறியாகக் கொண்ட முயற்சி என்று குற்றம்சாட்டுபவர்களும் உண்டு. இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

போரினால் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைப் பெரும் சந்தைவாய்ப் பாகக்கொண்டு தமிழகத் திரைத்துறை இன்று இயங்கி வருவதைப் போலவே, புகலிட எழுத்தாளர்களது படைப்புகளை வெளியிடுவதில் வெளியீட்டாளர்கள் சிலர் தீவிரமாக உள்ளனர். இதில் மணிமேகலைப் பிரசுரம் முதன்மையானது. வணிக இலாபத்துக்கு அப்பால் எதுவித அக்கறையும் அற்று காய்கறி வியாபாரம் போல மணிமேகலைப் பிரசுரம் செய்து வருவது மிகுந்த அதிருப்தியையே தருகிறது. அதிலும்; புதிதாக எழுதத் தொடங்கும் சிலருக்குக் குறுகிய காலத்திலேயே புத்தகம் போடும் எண்ணம் வந்துவிடுகிறது. அவ்வாறானவர்களை அணுகும் மணிமேகலைப் பிரசுரம் 300 பவுண்கள் வரை பெற்றுக் கொண்டு ஒரு சில வாரங்களிலேயே அச்சிட்டுக் கொடுத்து விடுகிறது. எட்டுப்-பத்து நூல்களுக்கு ஒருங்கு சேர ஆங்காங்கே வெளியீட்டு விழாவையும் ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் மணிமேகலைப் பிரசுர அதிபர் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடிகிறது. இந்த நூல்களின் அச்சுத்தரமும் மிகவும் சாதாரணமானவை.

எழுதும் ஒவ்வொருவனுக்கும் தனது எழுத்தை நூலாகப் பார்ப்பதில் ஆசை இருக்கும். ஆனாலும் தரம் பற்றிய அக்கறை இருப்பின் கொஞ்சம் நிதானமாக சிறிது காலம் எழுதிய பின்பு தெரிவு செய்து நூலாக்குவது எழுதுபவனுக்கும் பெருமை தரும். இலக்கியத்துக்கும் பெருமை சேர்க்கும். இதற்கு உதாரணமாக, மக்கள் வங்கியின் பொருளியல் நோக்கு ஆசிரியர் எம். எல். எம் மன்சூர் பற்றி நான் குறிப்பிடுவதுண்டு. மன்சூர் ஒரு சிறந்த சிறு கதை எழுத்தாளர். குறைந்தளவிலான கதைகளே எழுதியிருக்கிறார். அவற்றைத் தொகுப்பாக்கினால் என்ன என்று ஒரு தடவை கேட்டபோது; தொகுப்பு ஒன்று வெளியிடத்தான் வேண்டும்;  ஆனால் அதற்கான கதைகளை இனிமேல் தான் எழுதவேண்டும் என்று சொன்னார். மன்சூர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட, “இலங்கை சினிமா ஓர் அறிமுகம்”  என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.  லண்டனுக்கு வந்த பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமற் போய்விட்டது. நல்ல இலக்கியங்களுடன் பரிச்சயம் உள்ள அவருக்குத் தனது சிறுகதைகளும் அந்தத் தரத்தில் அமைய வேண்டாமா என்ற உணர்வே நூலை வெளியிடத் தடையாக அமைந்திருக்கிறது. மன்சூர் போன்ற படைப்பாளி அப்படி உணர்ந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் பிரக்ஞை உள்ள ஒரு எழுத்தாளன் அப்படித்தான் இருப்பான்.

அதே சமயம் ஒருவர் நூலாக்க விரும்பினால் அதைத் தடுக்கவும் முடியாது. அப்படியானவர்களுக்கு ஒரு வழியை நாம் தான் திறக்கவேண்டும். வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வன்னியில் இருந்து கூட வியக்கும்படியான அச்சுப்பதிப்பில் நல்ல நூல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய பதிப்பாளர்கள் தாம் விரும்பும் நூல்களைத் தமது வெளியீடுகளாகக் கொண்டு வரும் அதேவேளை, பிற நூல்களை ஒரு வேலையாகக் கருதி அச்சிட்டுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். தவறின் மணிமேகலைப் பிரசுரம் போன்றவை தான் கால் பரப்பும்.

இப்படிச் சொல்லுகிறேன் என்பதற்காகத் தமிழகத்தில் பதிப்பிக்கவேண்டிய தேவை இருப்பதை நான் நிராகரிக்கவில்லை. எமது நல்ல எழுத்துக்கள் தமிழக மக்களின் பார்வைக்குக் கிட்ட வேண்டுமெனில் ஈழத்தமிழர்களின் மீது அக்கறை கொண்ட பதிப்பாளர்களினூடாகத் தொடர்ந்தும் தமிழகத்தில் நூல்களை வெளியிடத்தான் வேண்டும்.

தமிழகத்தில் வெளியிடுகிறோம் என்பதற்காகத் தரமானதெல்லாவற்றுக்கும் வெளிச்சம் கிடைத்துவிடுகிறதா என்ன?. தொடர்ந்தும், ஒரு சிலர்தானே முன்னிறுத்தப்படுகிறார்கள்?

தமிழ்ச் சூழலில் நாங்கள் கிணற்றில் போட்ட கல் போல் எதுவும் எதிர்வினையை உண்டாக்குவதில்லை என்று சுந்தர ராமசாமி எப்போதோ கூறியது நினைவுக்கு வருகிறது. தமிழக எழுத்துக்களுக்கு மட்டுமல்லாது எங்களுடையதுக்கும் இது பொருந்தும். ஆனால் இந்தப் பொதுமைப் பாட்டையும் தாண்டி சிலரது படைப்புகள் சிறப்பான கவனத்துக்குட்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை.

விடியல், காலச்சுவடு, அடையாளம், செ. கணேசலிங்கத்தின் குமரன் பதிப்பகம், எஸ். பொ. வின் மித்ர வெளியீடு  போன்றவைதான் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஈழத்து, புகலிட இலக்கியங்களை வெளியிட்டு வருகின்றன. தரத்தின் அடிப்படையிலும், படைப்பாளியுடனான நெருக்கத்தின் அடிப்படையிலுமே பெரும்பாலும் இவர்கள் நூல்களைத் தெரிவு செய்கின்றனர். இந்தப் பதிப்பகங்களுக்கென்று கணிசமான சந்தை இருக்கிறது. இதற்கும் அப்பால் மக்களிடம் படைப்பு போய்ச் சேருவதில்  படைப்பாளிக்குத் தமிழகத்தில் இருக்கும் தொடர்பு வட்டமும், ஊடகங்களும் பெரும்  பங்களிக்கின்றன. அந்த வகையில் சேரன், அ. முத்துலிங்கம் போன்றோர் நிறைந்த தொடர்புகளைக் கொண்டுள்ளனர். தங்களை முதன்மைப் படுத்துவதிலும் அவர்கள் அக்கறை கொண்டவர்கள். வ. ஐ. ச ஜெயபாலனையும் ஓரளவுக்கு இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது, கொரில்லா நாவலை அடையாளம் வெளியிட்டதற்குப் பிறகு ஷோபாசக்திக்குத் தமிழகத்தில் தனி அடையாளம் கிடைத்திருக்கிறது. இதற்கு அவரின் எழுத்தாற்றல், தலித் ஆதரவு நிலைப்பாட்டோடு மார்க்ஸ் போன்றவர்களின் ஆதரவும் காரணம். சேரன், ஷோபாசக்தி ஆகியோரை முன்னிலைப்படுத்தும் தன்மை கொஞ்சம் மேலோங்கி இருப்பதற்கு, தமிழகப்பத்திரிகைகள் அனேக மானவற்றுக்கு இருக்கக் கூடிய ஈழ விடுதலைக்கு எதிரான இந்தியக் கண்ணோட்டமும் ஒரு காரணம்.

விடியல் பதிப்பகம் ஈழத்துக் கவிஞர்களின் வேற்றாகி நின்ற வெளி என்ற தொகுப்பையும்,                கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் இதழ்களில் வெளியான சிறு கதைகளைக் கொண்ட வாசல் தோறும் என்ற தொகுப்பையும, கவிஞர் வில்வரத்தினத்தின் “உயிர்த்தெழும் காலத்திற்காக” தொகுதியையும் வெளியிட்டிருக்கிறது. ஆனால் பத்திரிகைகள் இவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவே இல்லை. ஊடகங்கள் இந்த எதிர் மனோபாவத்துடன் இயங்குவது வருந்தத் தக்கது. அறத்துக்குப் புறம்பானது.

தொடரும்…….. 

பொ.ஐங்கரநேசன் 

நன்றி | தினக்குரல் ( 31/08/2003) 

 

 

முன்னைய பகுதிகள்…..

Part 1 – https://vanakkamlondon.com/one-min-interview/2014/03/7628/

Part 2 – https://vanakkamlondon.com/one-min-interview/2014/03/8118/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More