சமீபகாலமாகத் தனி அடையாளத்தைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பதிப்புச் சூழல் இணையத்தளத்திலும் தன்னுடைய பாய்ச்சலை நிகழ்த்த வேண்டும்” நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 1)

unnamed (3) ‘தரமான இலக்கியங்கள் தீவிர வாசகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற பொதுவான காரணத்துக்குப் பின்னால், எனது இலக்கியச் செயற்பாட்டுக்கு இன்னும் சில அக்கறைகள் இருக்கின்றன. ஈழத்தில் பல சிறந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை நூலாக்கம் செய்ய இயலாமல் இன்னமும் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள. அவர்கள் உரிய கவனிப்புப் பெற வேண்டும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான இலக்கியப் பாலம் இருவழிப்பாதையாக அமைந்து, எமது படைப்பாளிகள் தமிழகத்திலும் அறியப்படவேண்டும். போரும், புலப்பெயர்வும், அலைக்கழிவும் தமிழுக்குப் புதிய பல சிந்தனைகளையும், படைப்புகளையும் கொண்டு வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் அவை பிற மொழிகளுக்கும் கொண்டு செல்லப்படவேண்டும். சமீபகாலமாகத் தனி அடையாளத்தைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பதிப்புச் சூழல் இணையத்தளத்திலும் தன்னுடைய பாய்ச்சலை நிகழ்த்த வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் போராட்டத்தில் போராளிகள் ஆயுதம் தாங்கிப் போராடும் அதே சமயத்தில் அதற்குச் சமாந்தரமாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் என்னுடைய துறைசார்ந்து தான் பங்களிக்க வேண்டியது அவசியம். இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலேயே எனது செயற்பாடுகளும் காலமும் கரைந்து கொண்டிருக்கிறது”

– என்று சொல்லும் இ.பத்மநாப ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு தொகுப்பாளராகவும், வெளியீட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவர். இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கு வெளிச்சம் தேடித் தந்தவர். தமிழகத்தின் பதிப்பகங்களிற் பல புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைப் பெரும் சந்தையாக மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் போது – ஈழத் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் சலியாது தன்னையே உரமாக்கி வருபவர்.

இப்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பத்மநாப ஐயர் அவர்களை, இலண்டன், பிளேஸ்ரோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதில் இருந்து…..

 

இலக்கியங்கள் பற்றிப் பேசுவதற்கு முன்னால் உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்?

யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை எனது சொந்த ஊர். 1941 ஆவணி 24ஆம் திகதி பிறந்தேன். அப்பா பெயர் இரத்தின ஐயர். அம்மா யோகாம்பாள். அப்பா பண்டாரவளை சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் அர்ச்சகராகப் பணி செய்து கொண்டிருந்ததால், அவருடனேயே அம்மாவும் தங்க நேர்ந்தது. நான் யாழ்ப் பாணத்தில் அம்மம்மாவுடன் இருந்தேன். ஆரம்பக்கல்வியை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நாவலர் பாடசாலையில் ஆரம்பித்துப் பின்னர் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தொடர்ந்தேன். ஏழாவது வகுப்புக்குப் பின்னர் பண்டாரவளைக்குச் சென்று அர்ச். சூசையப்பர் கல்லூரியில் பத்தாவதுவரை படித்தேன். பிறகு, மீளவும் வைத்தீஸ்வர வித்தியாலயம். அங்கிருந்துதான் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் சித்திபெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகப் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் சேர்ந்து பி.எஸ்.சி பட்டதாரியாகினேன். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக் கழகம் சென்ற முதல் மாணவர்கள் சிலருள் நானும் ஒருவன்.

unnamed (1)

பல்கலைக்கழகத்தில் இருந்து 1967இல் வெளியேறி இரண்டு, மூன்று வருடங்கள் வேலையில்லாமல் இருந்தேன். கோயில் வேலைகளில் அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்ததில் காலம் கழிந்தது. அதன்பின்பு ஏறத்தாழ ஓராண்டு காலம் மாத்தளை ஸாஹிரா கல்லூரியில் வசதிக் கட்டணத்தில் விஞ்ஞானம் கற்பித்தேன். அந்தச் சமயத்தில் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் வேலையில் லாப் பட்டதாரிகளுக்குப் பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பித்தது. அதில் பயிற்சி பெற்றுக் காணி ஆணையாளர் திணைக்களத்தில் பிரிவு அலுவலராக (னுiஎளைழையெட ழுககiஉநச) 1972இல் வேலைக்குச் சேர்ந்தேன். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்று பல இடங்களில், 1989 டிசம்பரில் இலங்கையைவிட்டுப் புறப்படும்வரை, அந்த வேலையிலேயே இருந்தேன். மாத்தளையில் இருந்த காலத்தில் சொர்ணவல்லி என்பவரை விரும்பித் திருமணம் செய்துகொண்டேன். யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்த மனைவி 1987இல் மூளைக் காய்ச்சலால் இறந்துபோனார். எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். என்னுடைய உழைப்புக் கும் மேலாக புத்தகங்களுக்கும் – இலக்கியச் செயற்பாடுகளுக்கும் என்று நான் செலவழித்துக்கொண்டு திரிய, குடும்பப் பாரம் முழுவதையும் தன் சக்திக்கு மீறிச் சுமந்தது மனைவிதான். அவரின் இழப்புக்குப் பிறகு பிள்ளைகளின் பொறுப்பு என்னை அழுத்தியது. இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த அப்போதைய அரசியற் சூழ்நிலையும் பாதகமாக அமைய இலண்டனுக்குப் புலம்பெயர நேரிட்டது. முன்னர் ரூபாய்களில் கடன் வைத்திருந்தேன் இப்போது ஸ்டேர்லிங் பவுண்களில் கடன் வைத்திருக்கிறேன். மற்றப்படி என்னைப்பற்றிச் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

 

இலக்கியத்தின்மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டமைக்குப் பின்னணியாக அமைந்தவை பற்றிச் சொல்லுங்கள்?

மாணவப் பிராயத்திலேயே நான் இலக்கியங்களின் வயப்பட நேர்ந்தது. அப்போது எனக்கு வாய்த்த நண்பர்களிற் பலர் இலக்கிய ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். அவர்களில் கல்லூரி நண்பர் அ. கந்தசாமி குறிப்பிடப்பட வேண்டியவர். இப்போது கனடாவில் வாழ்கிறார். என் மாமனார் ஒருவரும் பலவகை நூல்களையும் வாங்கி வாசிப்பவர். அவரின் பாதிப்பும் இருந்தது. சிறுவயதில் சொக்கன் அவர்களிடமும், மதுரகவி இ. நாகராஜன் அவர்களிடமும் படிக்க நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் தாக்கத்தால் நான் நிறைய வாசித்தேன். ஆனந்தவிகடன், குமுதம் என ஆரம்பித்து தீவிர வாசிப்புக்குரிய தீபம், கணையாழி, கசடதபற, நடை, பரிமாணம், யாத்ரா என்று என்னுடைய வாசிப்புத்தளம் விரிவடைந்தது. மௌனி, லா.ச.ரா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்றவர் களுடைய படைப்புக்களையும் ஈழத்து எழுத்தாளர்கள் பலரது படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வாசித்தேன். இந்த எழுத்துக்களைப் படித்ததன் எதிர்வினையாகத்தான் தாங்கள் எழுத ஆரம்பித்ததாகப் பல எழுத்தாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், என்னுடைய வாசிப்பு ஒரு போதும் என்னை எழுதுவதற்கு உந்தியதே இல்லை.

unnamed

 

தீவிர வாசிப்பு உங்களில் ஏற்படுத்திய எதிர்வினை எப்படி அமைந்தது?

நல்ல இலக்கியங்களை வாசிக்க, வாசிக்க அவற்றை மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. இதனால், எனக்குக் கிடைக்கக் கூடிய சஞ்சிகைகள், நூல்களில் எப்போதும் பல பிரதிகளை வாங்கி வைத்திருப்பேன். அப்போது தமிழகத்தில் வெளியாகும் சஞ்சிகைகள் எல்லாம் இலங்கையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், கி. கஸ்தூரிரங்கனால் டெல்லியில் 1965 இல் தொடங்கப்பட்ட ‘கணையாழி”  அடுத்த இரண்டு – மூன்று ஆண்டுகள் வரை எமக்கு அறிமுகமாகவில்லை. தெரிய வந்தபோது, கணையாழி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பிரதிகளைப் பெற்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்தேன். நல்ல வரவேற்புக் கிடைத்தது. மாதம் நூறு பிரதிகள் வரை தருவித்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கண்டி, கொழும்பு என்று பல இடங்களுக்கும் விநியோகித்தேன். இதற்கான பணத்தை மத்திய வங்கியின் அநுமதி பெற்று, தபாற்கந்தோரினூடாகக் காசுக் கட்டளையாக அனுப்பும் வசதி அப்போது இருந்தது. இதே காலப்பகுதியில் – 1965 இல் – தீரர் சத்திய மூர்த்தியின் மகளான லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஆண்டுச் சந்தா அடிப்படையில் ஆண்டுக்கு ஆறு நூல்கள் என்ற திட்டத்தோடு சென்னையில் வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். தரமான நூல்களைத் தரமான அச்சுப் பதிப்பில் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் இலக்காக இருந்தது. நான் சந்தாதாரர் ஆனதோடு, பலரையும் சந்தாதாரர்கள் ஆக்கினேன். கையைச் சுட்டுக்கொண்டாலும் இந்த முயற்சிகளால்தான் கு.ராஜகுலேந்திரன், தலித்துஓய கே. கணேஷ், அ. யேசுராசா, பூரணி ஆசிரியர் குழுவில் இருந்த என். கே. மகாலிங்கம், தெளிவத்தை ஜோசப், சாந்தன், எம்.எல்.எம் மன்சூர், க. பாலேந்திரா, ஏ.ஜே. கனகரத்னா, மு. நித்தியானந்தன், எம்.ஏ.நுஃமான், மு. புஸ்பராஜன், க.சட்டநாதன், குப்பிளான் ஐ. சண்முகன், மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், ‘புதுசு” ரவி, நா. சபேசன் போன்றவர்களின் தொடர்பைச் சம்பாதிக்க முடிந்தது.

 

 

தொடரும்…….. 

 

பொ.ஐங்கரநேசன் 

நன்றி | தினக்குரல் ( 31/08/2003) 

ஆசிரியர்