சந்தியா, கார்த்திகா, லட்சுமிமேனன், துளசி கதாநாயகியாக நடிக்க தடை விதிக்க பொதுநல வழக்குசந்தியா, கார்த்திகா, லட்சுமிமேனன், துளசி கதாநாயகியாக நடிக்க தடை விதிக்க பொதுநல வழக்கு

தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

திரைப்படங்களில் 18 வயதுக்கு குறைவான இளம் பெண்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். இந்த சின்ன வயதில், அந்த பெண்களின் மனம் பக்குவம் அடைந்து இருக்காது. மேலும், அவர்கள் 18 வயதுக்கு குறைவான வயதில் சினிமாவில் நடிக்க வருவதால், மன ரீதியதாகவும், உடல் ரீதி யாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர். அண்மை காலமாக நடிகைகள் சந்தியா, கார்த்திகா, லட்சுமிமேனன், துளசி ஆகியோர் 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பே, பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, நடிக்க வந்துள்ளனர்.

இதுபோல் சிறுமிகளை கதாநாயகியாக நடிக்க வைப்பது சிறார் நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும். எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமா படங்களில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்ன ஆகவேண்டும் என்ற லட்சியம், கனவுகள் இருக்கும். ஒருவரது நோக்கம் எதுவோ அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், இதுபோன்ற காரணங்களுக்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஆசிரியர்