நடிகர் அஜீத் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டதுநடிகர் அஜீத் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான். திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை துண்டித்து விட்டான்.

இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். ஒவ்வொரு அறையாக சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர்.

இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் அஜீத் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களை பிடித்து விசாரிக்கப்பட்டனர். 108 நம்பருக்கு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டான் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டுபிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்தவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது.

அஜீத் சர்ச்சையில் சிக்குவதை தவிர்த்து வருபவர். படவிழாக்களில் பங்கேற்பதும் இல்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. ரசிகர் மன்றத்தையும் கலைத்து விட்டார். அவருக்கு யார் மிரட்டல் விடுத்து இருப்பார்கள் என்று திரையுலகினர் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர்.

ஆசிரியர்