பாடலாசியர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலுக்கு மலேசிய அமைப்பு ஒன்று 6 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது. இந்த விருது வழங்கும் விழாவில் தனக்கு ஞானபீட விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை வைரமுத்து வெளிப்படுத்தினர்
மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பரிசளிப்பு விழா நடந்தது. பரிசுத்தொகையான 10000 அமெரிக்க டாலரை (6 லட்சம் ரூபாய்) அறவாரியத்தின் தலைவர் கே.ஆர்.சோமாசுந்தரம் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். அறவாரியத்தின் செயலாளர் பி.சகாதேவன், மலேசியத் துணையமைச்சர் சரவணன், முன்னாள் மலேசிய அமைச்சர் குமரன் மற்றும் அறவாரியத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :- சர்வதேச இலக்கிய விருது, ‘மூன்றாம் உலகப்போர்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். விருது என்பது ஒரு படைப்பிற்கு அளவுகோல் அல்ல என்பதை நான் அறிவேன்; ஆனால் அது ஓர் அடையாளம் என்பதையும் மறவேன். தமிழ்ப் படைப்புக்கு இப்போது வழங்கப்படும் பெருந்தொகை விருது இதுவாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.
எனக்கு ஓர் ஆதங்கம் இருக்கிறது. இலக்கியப் படைப்புகளுக்கு இந்திய அளவில் வழங்கப்படும் உயர்ந்தபட்ச விருதாக ஞானபீடம் கருதப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பாளிகள் தமிழில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் ஞானபீடம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய உயரங்களை இன்னும் வழங்கவில்லை என்பதே என் ஆதங்கம்.
நமது சகோதர மொழியான கன்னடம் 8 ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்தி மொழியை அது ஆறு முறை அலங்கரித்திருக்கிறது. மலையாளம் 5 ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் உலகச் செம்மொழி என்று செம்மாந்து பேசப்படும் தமிழ் மொழிக்கு இதுவரை இரண்டே இரண்டு ஞானபீடங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆதங்கம் என் உள்ளத்தை அழுத்திக் கொண்டேயிருக்கிறது. இதற்கு ஆறுதலாகவோ என்னவோ மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு விருதளித்துத் தமிழுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. உரியவர்களுக்கு என் உள்ளத்து நன்றியை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.