சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மதியம் 1 மணி நிலவரம்
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணி நிலவரம்
நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பாலா ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கார்த்தி மற்றும் விக்ரம் போராட்டத்திற்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்துவிட்டு கிளம்பினர்.