பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர்.
சினிமா துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. உலகில் சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதை பெற்ற ஷாருக்கான் தனது டுவிட்டரில், பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில் இவ்விருதை பெறுவது எனக்கு பெருமையளிப்பதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் உள்ளதாக கூறினார். அற்புதமான இந்த விழாவில் என்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பே ஷாருக்கானுக்கு பிரான்ஸ், மொராக்கோ நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் இண்டர்போலின் தூதுவராகவும் ஷாருக்கான் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.