திருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(74). தியேட்டர் அதிபர். இவருக்கு சொந்தமான லட்சுமி தியேட்டர் திருநின்றவூர், பெரியபாளையம் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விஜய் நடித்த கத்தி படம் வெளியானது. இதனால் நேற்று முன்தினம் காலை முதலே தியேட்டரில் விஜய் ரசிகர்கள் திரண்டனர்.
நேற்று முன்தினம் காலை 11.1 5 மணியளவில் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் தியேட்டர் வாசலில் உள்ள படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது காலை காட்சி தொடங்கியதால் தியேட்டருக்குள் ரசிகர்களை விடும் போது திடீரென்று நெரிசல் ஏற்பட்டது.
ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு தியேட்டருக்குள் புகுந்ததால் கதவு அருகே உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் ஒரு கண்ணாடி துண்டு தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் தலையில் விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அதிபர் கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் கிளாட் ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.