நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நாளை தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, தாயின் மனதே ஒரு கோயில்தான். அந்த தாய்க்கு அந்த தாய் வாழும் போதே கோயில் கட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.
எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக அடுத்த வருடம் எனது பிறந்தநாளான இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன் என்றார்.