என்னை அறிந்தால் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்னம். சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள்.
அஜித-கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பால் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக உள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படத்தின் டீஸரை வரும் நவம்பர் 27ஆம் தேதியும், பாடல்களை டிசம்பர் 11ஆம் தேதியும், டிரைலரை ஜனவரி 1ம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். 2014 பொங்கல் அன்று ‘வீரம்’ வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது போலவே, இந்தப் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ வெளிவருவது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனிடையே ‘ஐ’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஐ. கிட்டதட்ட ரூ.180 கோடி செலவில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்தப் படத்திற்காக விக்ரம் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார்.
விஜய்யின் கத்தி படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கே ஐ படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால் டப்பிங் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் படத்தை அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் ஐ படம் பொங்லுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பொங்கலை முன்னிட்டு அஜித்தின் என்னை அறிந்தால் படமும் களமிறங்குவதால் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது.