Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம் | கே. பாலச்சந்தரின் சினிமா வரலாறு முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம் | கே. பாலச்சந்தரின் சினிமா வரலாறு

முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம் | கே. பாலச்சந்தரின் சினிமா வரலாறு முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம் | கே. பாலச்சந்தரின் சினிமா வரலாறு

3 minutes read

ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஷ், பிரகாஷ்ராஜ், விவேக் என இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தி உச்சத்தைத் தொட்ட நட்சத்திரங்கள் 66 பேர். பெண்ணுரிமை பேசும் நாயகிகளையும், உறவுகளின் விநோதங்களையும் காட்சிப்படுத்தியதன் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்திலிருந்த காலத்திலும், ரஜினி, கமல் உச்சத்தைத் தொட்ட பிறகும் அவர்களை நம்பாமல் கதைகளை நம்பி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் இவர்.

நாடகங்களை இயக்கியவர்: கைலாசம் பாலசந்தர் என்ற இயற்பெயர் கொண்ட பாலசந்தர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட நல்லமாங்குடி கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தார்.

கே.பாலசந்தரின் கலையுலகப் பிரவேசம் அந்த கிராமத்தின் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பமானது. கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அவரது தந்தைக்கு பாலசந்தரை மாவட்ட ஆட்சியராக ஆக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் இவரோ வீட்டுத் திண்ணையில் பள்ளிப் பருவத்திலேயே நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்தார்.

தந்தையின் வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.சி படிப்பை முடித்த பாலசந்தர் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராக ஓர் ஆண்டு பணியாற்றினார். அதன்பிறகு, சென்னை தேனாம்பேட்டையில் இருந்த ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்தார். அலுவலகப் பணிபோக மீத நேரங்களில் நாடகங்கள் மீது கவனம் செலுத்தினார். பின்னர் “ராகினி ரிக்ரியேஷன்ஸ்’ என்ற பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.

அப்போது பாலசந்தரின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேறிய “மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் மிகப் பிரபலமான நாடகமாக உருப்பெற்றது.

அதைத் தொடர்ந்து, அவர் அரங்கேற்றிய “எதிர்நீச்சல்’, “நாணல்’, “விநோத ஒப்பந்தம்’ போன்ற நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த நாடகங்களின் மூலம் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த “தெய்வத்தாய்’ படத்தின் மூலம் மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார் பாலசந்தர். அப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, “பூஜைக்கு வந்த மலரே’ ஏவி.எம்.மின் “சர்வர் சுந்தரம்’, சிவாஜிகணேசன் நடித்த “நீலவானம்’ ஆகிய படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்.

1965-ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி’ இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இந்தப் படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த “நாணல்’, நாகேஷ், ஜெயலலிதா நடித்த “மேஜர் சந்திரகாந்த்’ ஆகிய இரு படங்களும் பாலசந்தருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. “மேஜர் சந்திரகாந்த்’ படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் அப்படத்துக்குப் பின் மேஜர் சுந்தர்ராஜன் என்றழைக்கப்பட்டார்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்னைகள் போன்றவை முக்கியக் கருப்பொருள்களாய் இருந்தன. நாகேஷ், முத்துராமன் நடிப்பில் வந்த “எதிர்நீச்சல்’, ஜெமினி நடிப்பில் வெளிவந்த “இருகோடுகள்’, முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவான “பாமா விஜயம்’, காந்தியக் கொள்கைகளின்படி வாழ முடியுமா என்பதைக் கருவாகக் கொண்டு உருவான “புன்னகை’, கமல், ஷோபா, சரத்பாபு, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த “நிழல் நிஜமாகிறது’, கமல், ஸ்ரீவித்யா, ஜெயசுதா நடித்த “அபூர்வ ராகங்கள்’ என இவரின் தொடக்க கால படங்கள் சிறந்த கதை அம்சமுள்ள படங்களாகத் தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்தன. 1975-ஆம் ஆண்டு வெளிவந்த “அபூர்வ ராகங்கள்’ படத்தின் முலம் நடிகர் ரஜினிகாந்த் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

சிவாஜியை வைத்து பாலசந்தர் இயக்கிய ஒரே படம் “எதிரொலி’. கமல், பிரமீளா நடிப்பில் வெளிவந்த “அரங்கேற்றம்’ அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுஜாதா கதாநாயகியாக அறிமுகமான “அவள் ஒரு தொடர்கதை’, ரஜினிகாந்த், சரிதா நடித்த “தப்பு தாளங்கள்’, மாதவி நடித்த “இவள் ஒரு கண்ணகி’ உள்ளிட்ட படங்கள் சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகின.

“அவள் ஒரு தொடர்கதை’, “தில்லுமுல்லு’, “நினைத்தாலே இனிக்கும்’, “வறுமையின் நிறம் சிகப்பு’, “உன்னால் முடியும் தம்பி’, “சிந்து பைரவி’, “புது புது அர்த்தங்கள்’, “வானமே எல்லை’ போன்ற ஏராளமான சிறந்த படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தெலுங்கில் கமல், சரிதா அறிமுகமான “மரோ சரித்ரா’ திரைப்பட வரலாற்றில் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. பின்னர், இதே படம் கமல், ரதி நடிக்க கே.பி. இயக்கத்தில் “ஏக் தூஜே கேலியே’ என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் சரித்திரம் படைத்தது.

90-களுக்குப் பிறகு “கையளவு மனசு’ போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். தமிழ் சின்னத்திரையில் மெகா தொடர்களுக்கு முன்னோடி என்ற பெருமையும் பாலசந்தரை சாரும்.

கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார்.

மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சேகர், மௌலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நாடக மேடையிலிருந்து இவரால் திரையுலகம் கண்டவர்கள்.

தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினிகணேசன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், கமல்ஹாசன், முத்துராமன் நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப் படமான “நான்கு சுவர்கள்’ தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது “நூற்றுக்கு நூறு’ வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் பெற்றது.

“தண்ணீர் தண்ணீர்’, “அச்சமில்லை அச்சமில்லை’, ஆகிய படங்கள் அரசியல், சமூக நெருக்கடிகளைப் பேசிய படங்களாக அமைந்தன. “தண்ணீர் தண்ணீர்’ கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது.

“அவர்கள்’, “புன்னகை மன்னன்’, “தில்லு முல்லு’, “அவள் ஒரு தொடர்கதை’, “அபூர்வ ராகங்கள்’ உள்பட இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் “பொய்’. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் “உத்தம வில்லன்’ படத்தில் நடித்து வந்தார் பாலசந்தர். இந்தப் படத்தில் திரைப்பட இயக்குநராகவே அவருக்கு வேடமளித்தார் கமல்ஹாசன். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More