‘சண்டமாருதம்’ படத்துக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்
சென்னையில் ஒரு நாள், புலிவால் ஆகிய படங்களை தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் இப்போது, சரத்குமார் 2 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மற்றும் வின்சென்ட் அசோகன், விஜயகுமார், ராதாரவி, தம்பிராமய்யா, வெ.ஆ.மூர்த்தி, சிங்கம்புலி, டெல்லி கணேஷ், மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, நளினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சரத்குமார் எழுதிய கதைக்கு, நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஏ.வெங்கடேஷ். இவர் கூறியதாவது:-
”பரபரப்பான சம்பவங்களை கொண்ட திரைக்கதை இது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக சரத்குமார் 32 மணி நேரம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணமே மீராநந்தன்தான்.
சில மாதங்களுக்கு முன் மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டார். அந்த ரேடியோ ஸ்டேஷனில் அனுமதி வாங்கி மீராநந்தனை உச்சக்கட்ட காட்சியில் நடிக்க வைத்தோம். அனுமதி பெற்ற நேரத்துக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டியிருந்தது.
கதாநாயகன் சரத்குமார் ஓய்வே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து 32 மணி நேரம் நடித்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பை பாராட்டி, படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தோம்.’