March 31, 2023 4:06 am

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுடன் ரஜினி திடீர் சந்திப்புபுத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

புத்தாண்டை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவரது போயஸ் தோட்ட இல்ல வாயிலில் கூடிய ரசிகர்களை திடீரென சந்தித்தார்.

ரஜினிகாந்தின் பிறந்த நாள் மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களிலும் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்கு அவரது வீட்டுக்கு ரசிகர்கள் கூடுவது வழக்கம்.

சென்னை போயஸ் தோட்ட இல்லம், அவ்வப்போது ரஜினி வந்து செல்லும் ராகவேந்திரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ரசிகர்கள் திரண்டு நிற்பார்கள். இது போன்ற சமயங்களில் ரஜினி திடீரென வெளியே வந்து ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின்னர் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது பிறந்த நாளில் போயஸ் தோட்ட இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வருடங்களாக ரஜினியின் பிறந்த நாளில் போயஸ் தோட்ட இல்லத்தில் கூடும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது. அந்த சமயங்களில் ரஜினி வீட்டில் இல்லை எனக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூற ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஆனால், அதிகாலையிலேயே ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை புத்தாண்டு தினம் என்பதால் ரஜினியைப் பார்ப்பதற்காகவும், சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறுவதற்காகவும் கணிசமான ரசிகர்கள் போயஸ் தோட்ட இல்ல வாயிலில் கூடியிருந்தனர்.

இதையறிந்த ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்க முடிவெடுத்தார். இதையடுத்து, உடனடியாக அவர் வீட்டு முன் சிறிய மேடை அமைக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி, அந்த மேடையின் மேல் ஏறி நின்று தன்னுடைய வழக்கமான பாணியில் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். ரசிகர்கள் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். ரஜினியும் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

சில நிமிஷங்கள் அங்கே நின்று கையசைத்த ரஜினி, பின் வீட்டுக்குள் சென்று விட்டார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ரஜினியின் வீட்டிலிருந்து இனிப்பு வழங்கப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்