March 27, 2023 1:14 am

25–ந்தேதி பத்ம விபூஷண் விருதுகள் பெறுபவர்களின் விபரம் – நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்துக்கு 25–ந்தேதி பத்ம விபூஷண் விருதுகள் பெறுபவர்களின் விபரம் – நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்துக்கு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு கடந்த 1954–ம் ஆண்டு முதல் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

பத்ம விருதுகளில் ‘பாரத ரத்னா’ விருது மிக உயரிய விருதாகும். அதற்கு அடுத்த நிலைகளில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன.

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், விளையாட்டு, நீதி, பொது சேவை ஆகிய துறைகளில் சிறந்தவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான (2015) பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து மற்ற பத்ம விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு நடந்து வந்தது. நேற்று விருதுக்குரியவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை பத்ம விருதுகள் பெற வாய்ப்பு உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது. பாரத ரத்னாவுக்கு அடுத்தப்படியான விருதான பத்ம விபூஷண் விருதுக்கு முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெறப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2000–ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு பத்ம விபூஷண் விருது தேடி வர இருப்பதாக கூறப்படுகிறது. (நடிகர் கமலஹாசன் கடந்த ஆண்டுதான் பத்ம பூஷண் விருது பெற்றார்).

அத்வானி, அமிதாப் பச்சன், ரஜினி ஆகியோர் வரிசையில் பிரபல யோகா குரு ராம்தேவும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் பா.ஜ.க.வை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

பஞ்சாப் முதல்–மந்திரி பிரகாஷ்சிங் பாதல், நடிகர் திலீப்குமார், வாழும் கலை ரவிசங்கர் ஆகியோர் பெயரும் விருது பட்டியலில் இடம்பெறலாம். எல்லா துறைகளிலும் சிறந்த 148 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா வருகிற 26–ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். அதற்கு முந்தைய தினம் அதாவது நாளை மறுநாள் (25–ந்தேதி) பத்ம விருதுகள் பெறுபவர்களின் முழு விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம விருதுகளை வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்