அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு இணையாக அருண் விஜய்யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் சென்னை காசி திரையரங்கில் அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார். படத்தில் அருண் விஜய்-அஜித் இணைந்து வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர், படம் முடிந்து வெளியே வந்த அருண் விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, அவரிடம் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அஜித்துடன் தான் இணைந்து நடித்த படத்திற்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுத்துள்ளதை கண்டு, ஒருகட்டத்தில் அருண் விஜய் கண்கலங்கிவிட்டார். ரசிகர்களிடமிருந்து பிரிய மனமில்லாமல் கண்கலங்கியவாறே அங்கிருந்து வெளியேறினார்.
‘என்னை அறிந்தால்’ படம் இன்று வெளியான அனைத்து திரையரங்குகளிலும் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்துவிட்டனர். நிறைய பேருக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லையென்றாலும், அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ரசிக்க நிறைய பேர் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.