கமலின் ‘விஸ்வரூபம்’ படம் 2013–ல் வெளியானது. அதன் பிறகு ‘விஸ்வரூபம்–2’ படத்தில் நடித்தார். அது இதுவரை ரிலீசாகவில்லை. தொடர்ந்து ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
இதில் முதலாவதாக உத்தம வில்லன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 2–ந்தேதி இப்படம் வெளியாகிறது. கமலுடன் ஜெயராம், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நாயர் போன்றோர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்களை சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர். மார்ச் 1–ந்தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றகின்றனர். கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்த விழாவில் திரையுலகில் சாதனை படைத்த அனைத்து வில்லன் நடிகர்களையும் அழைத்து கவுரவப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இது உறுதிபடுத்தப்படவில்லை.
லிங்குசாமி-சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை வாங்கி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.