பன்றி காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1115 பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது. இவர் தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்தவர். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சல்மான்கானுடன் ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள கொண்டல் பகுதியில் நடந்தது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து சோனம் கபூரை பன்றி காய்ச்சல் தாக்கியது. மும்பை ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்துள்ளனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சோனம் கபூர் பன்றி காய்ச்சல் தாக்கியது சக நடிகர்–நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பன்றி காய்ச்சல் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
திரிஷாவும் ஜெயம் ரவியும் முக கவசத்ததுடன் திரிகிறார்கள். இவர்கள் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தங்களுக்குரிய காட்சிகளில் நடித்து முடித்ததும் திரிஷாவும் ஜெயம் ரவியும் முக கவசம் அணிந்து கொள்கின்றனர். முக கவசம் அணிந்த படத்தை திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.