திரையுலகில் விடாமுயற்சியால் தனக்கென ஓர் இடத்தை தேடிப்பிடித்து அடைந்திருப்பவர் ஆர்.கே., எதிலும் தனித்து வெளிப்பட விரும்வும் ஆர்.கே., வியாபாரம் தொடர்பாகவும், சுயமுன்னேற்றம் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர்.
இவரது வாங்க சாப்பிடலாம் ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் தங்களது சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வந்தால் அவர்களுக்கு உணவு விலையில் 10 சதவீத சலுகை வழங்கி, உணவு பரிமாறுகிறார்.
சமீபத்தில் வெளிவந்துள்ள ‘என் வழி தனி வழி’ படத்தின் டிரைலரை வெளியிட்டப்போதுகூட ஒரு புதுமையை கையாண்டார். அதாவது, பட விளம்பரம் செய்த செய்தித்தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனை காட்டி கிளிக் செய்தால் டிரெய்லர் தெரியும்படி செய்திருந்தார். இது இந்தியாவிலேயே முதல் முயற்சி என்று பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.
தற்போது இவரது நடிப்பில் உருவான ‘என் வழி தனி வழி’ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்க்க சலுகை கூப்பனை வெளியிட்டு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதுமையை செய்திருக்கிறார் ஆர்.கே.
அதாவது ஆர்.கே. நடிப்பில் வெளியாகியுள்ள ‘என் வழி தனி வழி’ படம் திரையிடப்பட்டுள்ள எல்லா திரையரங்கு வாசல்களிலும் இந்த சலுகை கூப்பன்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவீதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால் 90 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்.
மீதமாகும் இந்த தொகையில் ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை ரசிகர்கள் வாங்கிவிட முடியுமே? என்ற அடிப்படையில் இந்த சலுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.