நடிகை சுகன்யா தொடுத்த வழக்கில் சன் தொலைக்காட்சி ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் என சென்னை 15-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த விவரம்: நக்கீரன் இதழ் சார்பில், மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அந்தப் பேட்டி விடியோ பதிவும் செய்யப்பட்டது.
பின்னர் அந்தப் பேட்டி “நேருக்கு நேர்’ என்ற பெயரில் சன் தொலைக்காட்சியில் கடந்த 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 7 பகுதிகளாக வெளியானது.
அதில் நடிகை சுகன்யாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாகவும் எனவே, அந்தப் பேட்டியை வெளியிட்ட நக்கீரன் வார இதழ், சன் தொலைக்காட்சி, கருத்து தெரிவித்த வீரப்பன் ஆகியோருக்கு எதிராகவும் நடிகை சுகன்யா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதில், தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை 15-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பி.சந்திரசேகரன் முன் புதன்கிழமை (ஏப்.15) விசாரணைக்கு வந்தது.
அப்போது நக்கீரன் இதழின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் வீரப்பனின் பேட்டியை வெளியிட்டால் அதற்கு நக்கீரன் பொறுப்பாகாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சன் தொலைக்காட்சிக்கு அந்த விடியோ பதிவை அளித்ததாகத் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வீரப்பன் இறந்துவிட்டதால் வீரப்பனையும், நக்கீரனையும் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாகவும், நடிகை சுகன்யாவுக்கு சன் தொலைக்காட்சி நஷ்ட ஈடாக ரூ.10 லட்சத்து 500 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.