தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எல்லாம் தற்போது பாடகர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், பாடகர் ஒருவர் தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் ‘மஞ்சள் வெயில் மாலையிலே’, ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் ‘ஜூன் போன ஜூலைக் காற்றே’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் பாடகர் கிரிஷ்.
இவர் நடிகை சங்கீதாவின் கணவரும்கூட. தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார். இவரது மனைவி நடிகை என்பதாலோ என்னவோ, இவருக்கும் நடிப்பு ஆசை துளிர் விட்டிருக்கிறது.
அதன்படி, தற்போது ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். தம்பி செய்யது இப்ராஹிம் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
பாடகராக வலம் வந்த கிரிஷ், திடீரென ஹீரோ பிரவேசம் எடுத்ததற்கான காரணத்தை அவரே விளக்கும்போது, ஹீரோவெல்லாம் பாடகர்கள் ஆகிட்டு வர்றாங்க. அதனால, நான் ஹீரோ ஆயிட்டேன். இதில் என்ன இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே, பாடகரான ஹரிஷ் ராகவேந்திரா ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார். தற்போது அந்த வரிசையில் பாடகர் கிரிஷும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.